சிங்களப் படையே வெளியேறு!
வடக்கில் நிலைகொண்டுள்ள
படையினர் உடனடியாக வெளியேறவேண்டும் என்று வலியுறுத்தி வடக்கிலுள்ள
மாவட்டங்களின் இளைஞர்கள், இளம்பெண்கள் ஒன்றுசேர்ந்து வவுனியா தொடக்கம்
யாழ்ப்பாணம் வரை நேற்று நகரும் மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வவுனியா குடியிருப்பில் அமைந்துள்ள கலை
மண்டபத்தில் தங்கியுள்ள படையினருக்கு எதிராக இன்று முற்பகல் 9 மணிக்கு
இந்தப் போராட்டம் தொடங்கப்பட்டது. அங்கிருந்து இந்தப் போராட்டம் ஓமந்தை,
திருவையாறு, பரவிப்பாஞ்சான், கிளிநொச்சி, இயக்கச்சி, சாவகச்சேரி,
யாழ்ப்பாணம், வழியாகக் காங்கேசன்துறையைச் சென்றடைந்தது. பேருந்தில்
பயணித்த போராட்டக்காரர்கள் ஒவ்வோர் இடத்திலுமுள்ள படைமுகாம்களுக்கு
முன்னாலும் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முதன்மை வீதியில் அரச மற்றும் தனியார் நிலங்களில் தங்கியுள்ள படையினரை வெளியேறுமாறு கோரி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
படையினரின் விடுதிகள், உணவகங்கள்
போன்றவற்றை அகற்றுமாறும், தனியார் அரச நிலங்களிலிருந்து படையினர் உடனடியாக
வெறியேறுமாறும் அவர்கள் முழங்கினர்.
காணிச்சிக்கலில் அரசியல் நாடகம் வேண்டா!
இராணுவமே கவர்ந்த காணியை உடனடியாக விடுதலை செய்!
வடக்கில் இராணுவம் கவர்ந்துள்ள இடங்களிலிருந்து உடனடியாக வெளியேற வேண்டும்!
தெற்கில் சனநாயகம் வடக்கில் இராணுவம்!
பாடசாலைக்கு முன்னால் படை முகாம் எதற்கு?
எமது நிலம்எமக்கு வேணடும்!
போன்ற முழக்கங்களை எழுப்பியவாறு இளைஞர்கள், இளம்பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
வடபகுதி இளைஞர்கள், இளம்பெண்கள் ஒன்றிணைந்து மக்கள்நாயகத்துக்கான வடக்கு இளைஞர்கள் எனும் அமைப்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
“ஆயுதப்போர் நிறைவடைந்து 7 வருடங்கள் ஆகின்றது. ஆனால், இன்னும் உளவியல் போர் மக்கள் மத்தியில் நிலவுகின்றது. உரிமையிழப்பு, உயிரிழப்பு, சொத்திழப்பு, உடல் அங்கங்கள் இழப்பு
எனப் பல்வேறு இழப்புக்களையும் சந்தித்து இன்னும் மீளமுடியாதவர்களாக எம்
மீதான அடக்குமுறைகளும், ஒடுக்குமுறைகளும் தொடர்கின்றன. காலத்திற்குக் காலம்
வாக்குறுதிகளால் நாம் ஏமாற்றப்படுகின்றோம். துயரங்களைத் துய்த்த நாங்கள் எங்கள் நிலங்களை இன்னும் பயன்படுத்த முடியாமல் ஏங்கித் தவிக்கின்றோம்.
காலம் காலமாக நாம் வாழ்ந்த நிலம்
நம்மிடமிருந்து பறிக்கப்பட்டது. எங்களின் நிலம் எங்களிடம் மீளவும்
வழங்கப்படவேண்டும் என்பதே எமது ஒருமித்தவேண்டுகோள். எமது நிலங்கள்
பறிக்கப்பட்டதன் ஊடாக எங்கள் வாழ்விடங்களை இழந்து எங்கள் இருப்பே
கேள்விக்குறியாகியுள்ளது. அன்றாட வாழ்வாதார அடிப்படைத் தேவையைப் பூர்த்தி
செய்துகொள்ள முடியாதவர்களாக இடம்பெயர்ந்து முகாம்களிலும், வாடகை
வீடுகளிலும் தங்கியுள்ளோம். நாங்கள் தங்க நிலமிருந்தும் வலுவிழந்து
நிற்கின்றோம். எங்கள் நிலங்கள் எங்களிடமிருந்து எந்தவொரு
நயன்மையற்ற(நியாயமற்ற) வகையில் பறிக்கப்பட்டு இருப்பதால் எங்கள் வாழ்வைப்
பறித்ததாகவே உணர்கின்றோம்.
எமது வாழ்வாதாரத்தின் ஆதாரமாக இருந்த
நிலங்களில் இன்று படையினர் வேளாண்பண்ணையையும், விலங்கு வேளாண்மையையும்,
வணிக நிலையங்கள், உல்லாச விடுதிகள், சிற்றுண்டிச்சாலைகள், எனப் பல்வேறு
வணிக நிலையங்களையும் நடத்தி, எமது பொருளாதாரத்திற்கு முற்றுப்புள்ளி
வைக்கப்பட்டுள்ளது. எங்கள் தலைமைத்துவங்களை மாறி மாறி வந்த அரசுகளை, –
பன்னாட்டு அமைப்புகளை – நம்பிப் பல தடவைகள் நாம் ஏமாந்து விட்டோம்.
எமது நிலம் எமக்கு வேண்டும் என்பதன்
தேவையையும் விரைவையும் உணர்ந்து வடக்கின் இளைஞர்கள் நாம் ஒன்றிணைந்து
பின்வரும் வேண்டுதல்களைத் தொடர்புடையவர்களின் கவனத்திற்குக்
கொண்டுவருகின்றோம்.
எந்தவொரு சட்ட விதிகளும் இன்றி படையினர்
கையகப்படுத்திய மக்களின் வாழ்விடங்களையும் வேளாண் நிலங்களையும் பொதுச்
சொத்துக்களையும் படையினர் தான்தோன்றித்தனமாகக் கைப்பற்றியுள்ளதை வன்மையாகக்
கண்டிக்கின்றோம். அந்தக் காணிகளை உடனடியாக உரியவர்களிடம் மீளவும்
கையளிக்கக் கோருகின்றோம்.
காணி மீளளிப்பு தொடர்பில் அரசத் தலைமைகளும் படையினரும் இணைந்து மக்களை ஏமாற்றும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும்.
மக்களின் காணி உரிமைகளில் அரசு
தன்விருப்பில் முடிவெடுப்பதைத் தவிர்த்து மக்களுடன் கலந்துரையாடி நீதியான
முறையில் முடிவுகளை முன்னெடுக்கவேண்டும்.
காணி தொடர்பான முரண்பாடுகள் மற்றும்
சிக்கல்களில் தேவையான நடவடிக்கைகளை இனியும் காலம் தாழ்த்தாது
முன்னெடுப்பதன் ஊடாக எமது நிலம் எமக்கே கையளிக்கப்படல் வேண்டும்” – என்று
மக்கள்நாயகத்திற்கான வடக்குஇளைஞர்கள், இளம்பெண்கள் விடுத்துள்ள ஊடக
அறிக்கையில் வேண்டியுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக