சிங்கள மயமாக்கப்படும் தமிழர் நிலங்கள்
“முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்லாயிரக்கணக்கான காணிகள் (ஏக்கர்கள்) நிலம் ஓசை இன்றிச் சிங்கள மயமாக்கப்பட்டபடி உள்ளன.
இவற்றைக் கேள்வி கேட்க வேண்டிய அலுவலர்கள் எட்டியும் பார்ப்பதில்லை.
தடுக்க வேண்டிய அரசியலாளர்கள் உருப்படியாக ஏதும் நிறைவேற்றுவதில்லை” எனச்
சுட்டிக் காட்டப்படுகின்றது.
127 சிற்றூர்(கிராம)ச் சேவகர்கள்
பிரிவினையும், 1,15,024 பேரையும் உள்ளடக்கிய 5 மண்டல(பிரதேச)ச் செயலாளர்
பிரிவுகளைக் கொண்ட முல்லைத்தீவு மாவட்டமானது 2614 சதுரப் புதுக்கல் (சதுரக்
கிலோ மீற்றர்) பரப்பளவைக் கொண்டது. இம்மாவட்டத்தில் மட்டும் 40 ஆயிரம்
காணிகளுக்கும்(ஏக்கருக்கும்) மேற்பட்ட நிலங்களை சிங்களம் விழுங்கி
விட்டது.
இம்மாவட்டத்தின் தென் பகுதியில் இருந்து
தமிழ் மக்களின் வாழ்விடங்கள், வளம் மிக்க பகுதிகளென ஏறத்தாழ 15 ஆயிரம் காணி
நிலம் 1980ஆம் ஆண்டிற்கு முன்பு பறிக்கப்பட்டு 6 சிற்றூர்ச் சேவகர்
பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு இம்மாவட்டத்தின் ஆறாவது மண்டலச் செயலாளர்
பிரிவாகச் செயற்படுத்தப்படுகின்றது. இந்த ஆறாவதாக உருவாக்கப்பட்ட மண்டலச்
செயலகமானது முல்லைத்தீவு மாவட்ட மேலாண்மையின் கீழ் இயங்கும் எனப் பொது
மேலாண்மை உள்நாட்டு அமைச்சின் சுற்றறிக்கை உள்ளபொழுதிலும் இம்மண்டலச்
செயலாளர் பிரிவு முல்லைத்தீவு மாவட்டத்தின் கீழ் இயங்குமென எந்தவித
அறிவித்தலும் கிடையாது.
இவ்வாறு உருவாக்கப்பட்ட அலுவல் பற்று அற்ற சிங்கள மண்டலச் செயலாளர் பிரிவில் இன்று 9 ஆயிரத்து 560 சிங்கள மக்கள் வாழ்கின்றனர். இவர்களின் தொழில் வாய்ப்புகளுக்காகத் தமிழ் மக்களின் 6 ஆயிரம் காணி நிலங்கள் பறிக்கப்பட்டு மூவாயிரம் காணி வீதம் பிரிக்கப்பட்டு தொலர்பாம், கென்பாம்
என்கிற மிகப்பெரும் பண்ணைகள் இரண்டு உருவாக்கப்பட்டு, இவர்களுக்கான தொழில்
மையங்களும் அமைக்கப்பட்டன. ஆனால், இன்று இப்பகுதிகள் மிகவும் வளர்ச்சி
கண்டு, உட்கட்டுமான வசதி வாய்ப்புக்களும் ஏற்படுத்தப்பட்டு, பள்ளிகள்
முதல் சந்தை வாய்ப்புக்கள் வரையுமாக முல்லைத்தீவு நகரத்தினையும் மிஞ்சி
நிற்கின்றது.
இதன் பிற்பாடு, இனப்படுகொலையின் இறுதிக்
காலத்திலும் இதனை அண்டிய பகுதிகள், ஒதிய மலையை அண்டிய பகுதிகள் உள்ளடங்கலாக
மேலும் 3 ஆயிரத்து 500 காணிக்கும் மேற்பட்ட தமிழ் மக்களின் வாழ்விடங்களும்
அடிப்படை வாழ்க்கைக்குத் தேவையான நிலங்களும் பறிக்கப்பட்டுள்ளதுடன்
வனப்பகுதிகளாக இருந்த இம்மாவட்டத்தின் எல்லைப்புறங்களும் அளவுக் கணக்குத்
தெரியாமலே எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு மாவட்டத்தில் தொலர்பாம் , கென்பாம் என்றும் வெலி ஓயா என்றும் ஒரு பெரும் பகுதியை ஏப்பம் விட்ட சிங்கள பூதம்
தற்போது கொக்குளாய், கொக்குத்தொடுவாயில் ஆகிய பகுதிகளில் ஒரு பகுதி
நிலத்தையும் இங்கே செல்லும் வீதியோரக் காடுகளைப் பார்வைக்கு விட்ட பின்பு
ஏறத்தாழ ஒரு புதுக்கல்(கி.மீ) தொலைவில், புற்றுநோய் உள்ளிருந்தே கொள்வதைப்
போல் பாரிய குடியிருப்புக்களை அமைத்துள்ளனர்.
இதே போன்று அம்பகாமம், இரணைமடு பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான காணிக் காடுகளையும் வயல்களையும் கையகப்படுத்தியுள்ள சிங்களப் படை குளங்களைக் கூட விட்டு வைக்கவில்லை.
இரணைமடு, அம்பகாமம் பகுதிகளில் மட்டும் நான்கு குளங்கள் இன்று வரை
படையினரின் முற்றுகைக்குள் உள்ளன. இவற்றில் மட்டும் 8 ஆயிரம் நிலம்
படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இப்பகுதியில் அம்பகாமம், புலிமச்சி
நாதக்குளம், கூழாமுறிப்பு போன்ற பகுதிகளை உள்ளடக்கிய வகையிலேயே குறித்த
பகுதி வல்லாளுகைக்கு(ஆக்கிரமிப்புக்கு) உட்படுத்தப்பட்டுள்ளது.
இவற்றில் மக்களின் வாழ்வு அடிப்படைக்கான
வயல்கள் பல ஆயிரம் காணிகள் உண்டு. இவ்வயல்களையே நம்பி வாழ்ந்த
ஏறத்தாழ 1500 குடும்பங்கள் இன்று வரை அடுத்தவர் உதவியை நம்பி வாழும்
நிலையில் உள்ளனர்.
இவற்றினை விடவும்
விசுவமடு, தருமரம், கேப்பாபுலவு, கோம்பாவில், வட்டுவாகல் முதலான இடங்களில்
பெரும் பகுதிகளும் ஏனைய இடங்கள் பலவற்றில் சிறு சிறு துண்டுகளாகவென
மொத்தம் 40 ஆயிரம் காணிக்கும் மேற்பட்ட நிலத்தையும் சிங்களப்படைகள்
வல்லாளுகைக்கு (ஆக்கிரமிப்புக்கு) உட்படுத்தி முழுமையாகச் சுருட்டி
வைத்துள்ளன. இவற்றிற்கு அப்பால் மகாவலி எல் வலயம் என இன்னொரு பகுதியும் பறிபோய் உள்ளது.
இவை அனைத்தையும் போன்று ஏ9 வீதியில்
இரணைமடுச் சந்திக்கு அப்பால் முல்லை மாவட்டம் தொடங்கும் பகுதியில் இருந்து
கொக்குவில் பகுதியான ஏறத்தாழ 7 புதுக்கல் தொலைவு கொண்ட பகுதியில் வீதியின்
முகப்பில் காடு அப்படியே காட்சியளிக்க, இங்கேயும் புற்றுநோய் வல்லாளுகை
செய்யப்பட்டு விட்டது. நீளம் ஏழு புதுக்கல் எனின் அகலம் எத்தனை புதுக்கல்
என்பதனை வரையறுத்துக் கூற முடியாதவாறு காடு முழுமையாகப் படையினரால் வல்லாளுகை செய்யப்பட்டு விட்டதுடன் முறிகண்டி, வசந்தநகர் பகுதியில் வாழ்ந்த தமிழ் மக்களும் விரட்டப்பட்டுப் படையினரால் அவ்விடங்களும் வல்லாளுகை செய்யப்பட்டுள்ளன.
இங்கு மொத்தம் 4 ஆயிரம் காணி நிலம் படையினரின் கட்டுப்பாட்டில்
உள்ளதுடன் முறிகண்டிக் குளமும் இன்று வரை படையினரின் பிடியிலேயே உள்ளது.
இவ்வாறு இன்று வல்லாளுகை செய்யப்பட்டுள்ள
பகுதிகளில் தமிழ் மக்கள் 2002ஆம் ஆண்டு அமைதிக் காலத்திலேயே புதிதாக
வீடுகள் அமைத்து குடியமர்ந்தார்கள். இவ்வாறு புதிதாக வீடுகளை
அமைத்தவர்களின் ஏறத்தாழ 150-க்கும் மேற்பட்ட வீடுகள் தற்போது படையினரின் பிடியில் உள்ளதால்
இதன் உரிமையாளர்கள் சிதறுண்டு போய் உள்ளனர். இவர்களின் பல காணிகளுடைய
உரிமை ஆவணம் (document) மட்டும் உரிமையாளர்களின் கைவசம் உண்டு. இவற்றில் பல
காணிகளைச் சுற்றி முள் கம்பிகள் அமைத்திருந்தாலும் சில இடங்களை மயானப் பகுதி போல் கைவிட்டுள்ள படையினர் அதன் உரிமையாளர்களை மட்டும் வாழ்விடம் அமைக்க விடவில்லை.
இவ்வாறு ஏ9 வீதியில் முறிகண்டிக்
காட்டினை அண்டிய பகுதியில் பல ஆயிரம் காட்டினைப் பறித்துக் கொண்டுள்ள
படையினரின் பயன்பாட்டிற்கெனக் காட்டின் நடுவே நூற்றுக்கும் மேற்பட்ட
முகாம்கள் சீனத்தின் பொருத்து வீட்டின் மூலம் அமைக்கப்பட்டுள்ளதோடு
கரிநெய்(tar) வீதிகள் பலவும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், அனைத்து விதமான
வசதி வாய்ப்புக்களும் நடுக்காட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
குறித்த பகுதிகளுக்குள் ஒரு பகுதி சிங்கள
மக்களும் அடிக்கடி வந்து செல்கின்றனர். இதனால் இங்கு சிங்களக்
குடும்பங்களும் குடிவந்து விட்டனவா என்கிற பெரும் அச்சம் சூழ்ந்துள்ளது.
இவ்வாறு சூழும் அச்சம் பெரும் எச்சரிக்கையாகவும் உள்ளது. நடுக்காட்டில்
போதிய வசதி வாய்ப்பை உண்டு பண்ணியுள்ளோர் நெடுஞ்சாலைகளில் இருந்து இறங்கும்
வீதிகளை மட்டும் சரளைக்கற்கள் கொண்டே அமைத்துள்ளனர். இவ்வாறு செல்லும்
குறுக்கு வீதியில் ஒன்று முறிகண்டிக் குளத்தின் ஊடாகச் செல்வதனால்
அக்குளத்தின் நீர் சற்றேனும் தேங்கிவிடக் கூடாது என்பதற்காகவே குளக்கண்டினை
நடுவில் உடைத்து வெள்ள நீரைத் தமிழர்கள் குடியிருப்புக்குள்
செலுத்தியுள்ளது சிங்களப் படை.
இவ்வாறு நடைபெறும் சிங்கள மயமாக்கல் பகுதிகளுக்குள் தமிழர்கள் எட்டியும் பார்த்து விடக்கூடாது என்பதற்காகக் காட்டினைச் சுற்றி முள் கம்பிப் பாதுகாப்பும் வலுப்படுத்தப்பட்டுள்ளது.
இவற்றிற்கு அப்பால், வட்டுவாகல் பகுதியில்
தமிழ் மக்களின் 613 காணியைக் கடற்படையினரும் அதன் அருகில்
ஏறத்தாழ 180 காணி நிலத்தை வான்படையினரும் பறித்துக் கொண்டுள்ளது போல்
இம்மாவட்டத் தமிழ் மக்களின் மரபு வழி நிலமான கேப்பாபுலவு
சிற்றூரில் 700 காணி நிலம் இன்று வரை படையினரின் பிடியில் உண்டு. இங்கு
வாழ்ந்த 313 குடும்பங்கள் அருகில் இருந்த காட்டுப் பகுதியில் அமைந்துள்ள
மாதிரிச் சிற்றூரில் வாழ்கின்றனர்.
இவ்வாறு ஆண்டான்
குளத்தில் 39 குடும்பங்களின் 94 காணி நிலம், திருக்கோணம்பட்டியில் 4
குடும்பங்களின் 26 காணி நிலம், விண்ணகம்
வயல்வெளியில் 3 குடும்பங்களின் 18 காணி நிலம், ஆத்தங்கடவைப்
பகுதியில் 17 குடும்பங்களின் 124 காணி நிலம், மருதடிக்குள
வயல்வெளியில் 9 குடும்பங்களின் 48 காணி நிலம், ஆலங்குளத்தில் 14
குடும்பங்களின் 74 காணி நிலம் ஆகியவை படையினரின் பிடியிலேயே உள்ளன.
இதே போன்று சாமிப்பில்
கண்டலில் 26 குடும்பங்களின் 143 காணி நிலம், ஈரக்கொழுந்தன்
வெளியில் 8 குடும்பங்களுக்குச் சொந்தமான 71 காணி நிலம்,
படலைக்கல்லில் 7 குடும்பங்களுக்கு உரித்தான 48 காணி நிலம், குந்தைக்
கைக்குளத்தில் 24 குடும்பங்களின் 48 காணி நிலம், செம்மலைப்
புளியமுனையில் 125 குடும்பங்களின் 276 காணி நிலம் ஆகியவையும்
படைவசமேயுள்ளன.
இவற்றினைப் போன்றே
நீராவியடியில் 36 குடும்பங்களுக்குச் சொந்தமான 163 காணியும், உலாத்து
வெளியில் 15 காணியும், நீராவி வயலில் 20 காணியும், வட்டுவனில் 10 காணி
நிலமுமாக மொத்தம் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காணி நிலம்
பறிக்கப்பட்டுள்ளது.
முன்னேற்றம், பேச்சுரிமை,
தன்மேலாண்மை(நிருவாகச் சுதந்திரம்) என மாயை காட்டும் இந்தச் சொல்லாட்சி
அரசில் நல்லாட்சி என்கிற போர்வையில் ஒரு மாவட்டமே விலை பேசி விற்பனை
செய்யப்பட்டபடி உள்ளது.
இதற்கும் அப்பால், அரசியலாளர் ஒருவரின்
வழிகாட்டலுடன் காட்டுப் பகுதிகள் அழிக்கப்பட்டு மரங்கள் தென்னிலங்கைக்குக்
கடத்தப்படுவதோடு இன்னொரு பகுதியின் வழிகாட்டலோடு தென்னிலங்கை மீனவர்களால்
இம்மாவட்டத்தின் கடற்கரையில் பெரும்பகுதி வல்லாளுகை செய்யப்பட்டுள்ளது.
இனப்படுகொலைக் காலத்தில் போர் என்ற
கண்ணுக்குத் தெரிந்த எதிரியைத் துணிந்து எதிர்கொண்ட இம்மக்கள் இன்று
கண்ணுக்குத் தெரியாத சூழ்நிலை எதிரிகள் பல வழிகளிலும் வல்லாளுகை,
கொள்ளை, அடாது என ஆட்சியாளர்களின் கண்ணசைவோடு நடத்தும் மறைமுகப் போரினை எதிர் கொண்டு தமது வாழ்வியலை நடாத்த முடியாமல் தவிக்கின்றனர்.
அரசியலாளர்களாலும் ஒன்றுமே உருப்படியாகப்
புரட்ட முடியவில்லை. பன்னாட்டுக் குமுகமோ (சமூகமோ) அல்லது இது தொடர்பாகப்
புலம்பும் அமைப்புகளோ எதனையும் செய்ய முடியவில்லை. இதனால் இம்மக்கள்
முள்ளிவாய்க்காலின் கொடுமையை இன்றும் துய்த்தபடியே(அனுபவித்தபடியே)
உள்ளனர்.
இந்தளவு நிலங்களையும்
விழுங்கியுள்ள சிங்களம்தான் வடக்கு மாகாணம் முழுவதும் படையினரின் அன்றாடப்
பயன்பாட்டுக்கான சிறுபகுதி நிலத்தினை மட்டுமே வைத்துள்ளதாக வழமையான
பொய்யுரையைத் தொடர்ந்தபடி உள்ளது.
- ந.உலோகதயாளன்
தரவு : இ.பு.ஞானப்பிரகாசன்
படங்கள் : நன்றி : பதிவு, சங்கதி, தினக்கதிர் தளங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக