பாலியல் வன்செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திடுவோம்!
மீண்டும் அதே கூக்குரல்! அதே ஓலம்! அதே
குற்றச்சாட்டுகள்! அதே குறைகூறல்கள்! மீண்டும் அதே கருத்து வெளிப்பாடுகள்!
அதே உணர்வுவயப்பட்ட நிலைமை! அதே முகங்கள்! அதே குரல்கள்! மீண்டும், ஆம்,
மீண்டும்….!
கடந்த திசம்பர் மாதம் 2012இல் நிருபயா
மீதான பாலியல் வன்முறைக்கு எதிராக அதே குரல்கள் அதே குறைகூறல்கள், அதே
குற்றச்சாட்டுகள். யாருக்கு எதிராக? யார் மீது? அதுவும் மீ;ண்டும், அதே
போல – குமுகாயத்தின் மேல், சட்டம் தரும் பாதுகாப்பு மேல், காவல்துறை மேல்,
அரசின் மேல். குற்றச்சாட்டுக்கு உள்ளானோரின் பட்டியல் இன்னும் நீளும்!
ஆம்! சென்னை சுவாதியின் கொலையும், கொலை செய்யப்பட்ட முறையும்
சேலம் விட்ணுப்பிரியாவின் தற்கொலையும் இதற்கொலைக்கான காரணமும் மீண்டும்
அதே இயல்பற்ற சூழலினை உருவாக்கியுள்ளது. ஆனாலும், 2012 ஆம்
ஆண்டில் நிகழ்ந்த துயருக்கும் 2016 ஆம் ஆண்டு நிகழ்ந்த கொடூரங்களுக்கும்
காரணிகளும் அவையேதாம்., காரணமும் ஒன்றேதான். ஆம், பெண்களின் மீதான
ஒடுக்குமுறை, வன்முறை துளியும் மாறவில்லை. இது போன்ற கொடூரங்கள்
நிகழ்கையில் எல்லாரும் துடிக்கின்றோம், சினம் கொள்கிறோம், ஆதங்கங்களினை
வெளிப்படுத்துகிறோம். அவ்வளவே. அவரவர்க்கான வேலைகள் அவரவர்களுக்குக்
காத்திருக்கின்றன என்று எதனையும் கடந்து செல்கிறோம். இதனையும் கடந்து
சென்றிடுவோம். நாம் குற்றம் சாட்டும் சூழலுக்கு நாமும்தான் காரணம். நாமும் அதே மன்பதைச்சூழலில்தான் வாழ்கிறோம் என்பதனை மறக்க விரும்புகிறோம்; மறந்தும் விடுகிறோம். குமுகமும் பிறரும் மட்டுமே குற்றவாளிகள் என்றால் அதனை மாற்றும் பொறுப்பு நமக்கு இல்லையா அல்லது நம்மால் முடியாததா?
நாமும் இந்த மன்பதையின் அங்கம்.
நமக்கும் இதன் பெருமைகளுக்கும் சிறுமைகளுக்கும் பொறுப்பு உண்டு. நாமும்
இந்த மன்பதையின் அங்கம் என்று நம்மை அடையாளப்படுத்திக் கொள்வதன் காரணமே
“குமுகமயமாக்கல்(சமூகமயமாக்கல்”) என்ற குமுகச் செயலபாட்டின் விளைவே!
நாம் அல்லது எந்த உயிரும் பிறந்ததில்
இருந்தே நாம் சார்ந்த குமுகக் குழுவின் அது நாம் பிறந்த குடும்பமோ,
அவற்றின் கோட்பாடுகளினை-கூறுகளினை ஒவ்வொன்றாகக் கற்றுக்கொள்வது என்பதனில்
தொடங்கி, அதனை நமது அடையாளமாக ஏற்றுக்கொள்ளும் வரை “குமுக(சமூக)மயமாக்கல்”
எனும் குமுகச் செயல்பாட்டின் உள் இருக்கின்றோம். வலக் கையால்தான் உணவு
உண்ண வேண்டும், பெரியவர்களினை மதிக்க வேண்டும், ஆண் என்றால் அப்படி இருக்க
வேண்டும், பெண் என்றால் இப்படி இருக்க வேண்டும், எனப் பல்வேறு வாழ்க்கை
முறையினை, பழக்கவழக்கங்களினை நமக்குள் ஊறிடச் செய்வது, இந்தக்
குமுகமயமாக்கல் எனும் செயல்பாட்டின் விளைவுகளே! குழந்தைகளாய் இருக்கும்
பொழுது நம் பெற்றோரும் குடும்பங்களும் பள்ளிக்குச் செல்லும் பருவத்தில்
நமது பள்ளிக்கூடங்களும் ஆசிரியர்களும் விவரம் தெரிந்த பின்னர் பள்ளியில்
கிடைக்காத செய்திகளினை நண்பர்களும் பின்னர் அடுத்த நிலையில் ஊடகங்களும் என
நம்மைச் சார்ந்த நமது முன்னோடிகளே, இந்தக் குமுகமயமாக்கும் செயல்பாட்டினை
நமக்குள் செலுத்தும், வழி நடத்தும், செயற்பாட்டாளார்களாக உள்ளனர். நாம்
என்னவாக இருக்கிறோம், எப்படி நடந்து கொள்கிறோம் என்பது நாம் எத்தகைய
குமுகமயமாக்கலுக்கு உள்ளாகிறோம் என்பதனை வெளிப்படுத்துகிறது.
பெண் என்பவள் அமைதியாக இருக்க
வேண்டியவள், ஆண் என்பவன் துணிச்சல் கொண்டவன். பெண்கள் தங்களை யாராவது கேலி
செய்தால்கூடப் பொறுத்துக் கொள்ளுதல் வேண்டும், கேலி செய்பவருடன் வாதம்
புரிந்தாலோ சண்டையிட்டாலோ பெண்ணின் பெயர் கெடும். அது மட்டுமில்லாது அவள்
குடும்பத்திற்குத்தான் அவப்பெயர். இப்படியெல்லாம் நம்மைக் குமுகமயமாக்கும்
செயல்பாடு நம்மை அறியாமலும் அறிந்தாலும் ஒப்புக்கொள்ள வேண்டிய
கட்டாயத்திலும் நம்மை வைத்துள்ளது என்பதுதான் இங்கு எதார்த்தமான உண்மை.
அது எல்லாம் அந்தக் காலம் அது எல்லாம் காலத்திற்குப் பொருந்தாதவை, என்று நமக்கு வசதியானவற்றினை மட்டும் மாற்றிக்கொள்ளும் மன நிலை நம்மில் பெரும்பாலானவர்க்கு உள்ளது. ஆனாலும், மிகக் குறிப்பாக, பாலினச் சமத்துவ – சமூகமயமாக்கல் செயல்பாட்டில் பழமைவாதமே மிக அதிகமாக உள்ளது. ஆண்
என்பவன் எப்படியும் வாழலாம் பெண் என்பவள் இப்படித்தான் இருந்திடல்
வேண்டும் என்பதில் தொடங்கி ஆணுக்கு எல்லையற்ற அதிகாரத்தினையும்
பெண்களுக்குப் பகுத்தறிவுக்கு ஒவ்வாத பணிவினை வற்புறுத்துவது வரையிலும்
இங்கு குமுகமயமாக்கல் செயல்பாடு பாலினச் சமத்துவத்திற்கு எதிராகவே
உள்ளது. காலத்திற்கு ஒவ்வாத பல செயல்களினையும் நடத்தைகளினையும் பழக்க
வழக்கங்களினையும் மாற்றிக் கொள்ளும் நாம் பாலினச் சமத்துவத்திற்கு
இடமளிக்கும் ஆண் பெண் இருவரும் இணையரே என ஏற்றுக்கொள்ளும் வகையினில்
குமுகமயமாதலினை மாற்றிடத் தொடங்கிடல் வேண்டும்.
பெண் என்பவள் ஆணுக்கு இணையானவள் ஆணுக்கு அஞ்சியோ அடங்கியோதான் வாழ வேண்டும் என்பது கடைந்தெடுத்த மூடத்தனம் என்று சிறுவயதில் குமுகமயமாக்கலுக்கு உள்ளாக்கும் போதே பிள்ளைகளுக்கு உணர்த்துதலே மன்பதையில் பெண்களுக்கான பாதுகாப்பினை உறுதி செய்யும்.
பாலின வேறுபாடின்றித் தோழமையுடன் பழகுதலே ஆண் பெண் உறவின் நலப்பாட்டிற்கு
அடிப்படை என்பதனைச் சிறு வயதிலேயே கற்றுக்கொள்ளும் ஆண்தான் பெண்ணை இணைப்
பாலினமாக மதிப்பான். இல்லையெனில் சுவாதிகளும் விணுப்பிரியாக்களும் கொல்லப்படுவதையோ தற்கொலை செய்வதனையோ தடுக்கவும் முடியாது; தவிர்க்கவும் முடியாது.
ஆண் பெண் இருவரும் இணையே எனும் கருத்தினை இளம்பருவக் குமுகமயமாக்கலிலேயே
உறுதி செய்திடுவோம்! பெண்ணைத் தோழமையுடன் மதிக்கும் ஆண்பிள்ளைகளை
வளர்த்திடுவோம்! பாலியல் வன்செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திடுவோம்!
இல.அம்பலவாணன்
இயக்குநர், மக்கள் மேம்பாட்டு வினையகம்
திருச்சிராப்பள்ளி
மானுடம்: ஏப்-சூன் 2016, பக். 3-4
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக