தலைப்பு-புதியகல்விக்கொள்கை-கலைஞர் :thalaippu_puthiyakalvikolgai_karunanidhi

புதிய கல்விக் கொள்கை: தமிழக அரசுக்குக் கருணாநிதி எச்சரிக்கை

  புதிய கல்விக் கொள்கை என்ற மத யானையைத் தமிழகத்தில் நுழையவிடக் கூடாது எனத் தமிழக அரசுக்குத் திமுக தலைவர் கருணாநிதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
  மேலும், புதிய கல்விக் கொள்கை குறித்து நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் விவாதித்துத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
   தன்னுடைய அறிக்கையில் இது குறித்துப் பின்வருமாறு தெரிவித்துள்ளார்:
  ”மத்திய அமைச்சரவை முன்னாள் செயலாளர் டி.எசு.ஆர். சுப்பிரமணியன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு புதிய கல்விக் கொள்கை தொடர்பான 200 பக்க அறிக்கையை அளித்துள்ளது.
  5 பேர் கொண்ட இக்குழுவில் ஒருவர் மட்டுமே கல்வியாளர் என்பது கவனிக்கத்தக்கது. இக்குழு பரிந்துரைத்துள்ள பல கூறுகள் விவாதத்துக்கு உரியவை. பல  கூறுகள் மாநில அரசுகளின் அதிகாரத்தில் தலையிடுவதாக உள்ளன.
  4- ஆம் வகுப்பு வரை மட்டுமே கட்டாயத் தேர்ச்சி என்பதை  நடைமுறைப்படுத்தினால் பள்ளியை விட்டு வெளியேறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால் அனைவருக்கும் கல்வி என்பது சாத்தியமற்று  சிற்றூர்ப்புற மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்.
 உலகிலேயே கல்வியில் முதலிடத்தில் உள்ள பின்லாந்து நாட்டில் 7 வயதில் தான் கல்வி தொடங்குகிறது. 16 வயது வரை 9 ஆண்டுகளுக்குத்தேர்வு இல்லாமல் அனைவருக்கும் தேர்ச்சி அளிக்கப்படுகிறது என்பதை நினைவில் கொள்வது நலம்.
  ஒரு மாணவன் தேர்ச்சி பெறவில்லை என்றால் தொழில்பயிற்சிக்கு அனுப்பலாம் என்ற பரிந்துரையும் உள்ளது. மறைமுகமாகக் குலக் கல்வித் திட்டத்தைக் கொண்டு வர மத்திய அரசு திட்டமிடுகிறதோ என்ற  ஐயத்தை இஃது ஏற்படுத்துகிறது. அனைத்து மாணவர்களும் வேலைவாய்ப்பைப் பெற்றிடும் வகையில் தொழில் கல்வியை உருவாக்கி நடைமுறைப்படுத்துவதே நாட்டின் வளர்ச்சிக்கு உகந்ததாக இருக்கும்.
 கல்வி நிருவாகப் பணிக்கு இந்தியக் கல்விப் பணித் தேர்வு வைக்க வேண்டும் என்ற பரிந்துரையும் உள்ளது. இதன்படி கல்வித் துறை இயக்குநர்களை மாநில அரசு நேரடியாக நியமிக்க முடியாது.
  + 2 முடித்தவர்கள் தேசிய அளவிலான தகுதித் தேர்வு எழுத வேண்டும் என்றும் இந்தக் குழு பரிந்துரைத்துள்ளது. இதன்மூலம் பாடத் திட்டங்களை மாநில அரசுகள் திட்டமிட முடியாத நிலை ஏற்படும். இதன்மூலம் இந்தியாவின் அடிப்படைக் கூறான பன்முகம் சிதைவுறும்.
 வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களுக்கு இசைவளித்தால் வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே கல்வி கிடைக்கும். வெளிநாடுகளில் தரமான கல்வி வழங்கப்படுகிறது என்றால் அதுபோன்ற கல்வியை இந்தியாவிலும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  அரசு, தனியார் பள்ளி ஆசிரியர்கள் கட்டாயம்  உரிமம் அல்லது சான்றிதழ் வைத்திருக்க வேண்டும், 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்வு எழுதி  உரிமத்தைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும், 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆசிரியர்கள் பயிற்சி பெற வேண்டும் போன்ற பரிந்துரைகளை இக்குழு அளித்துள்ளது. இது ஆசிரியர்களிடம் ஒருவித இயந்திரத் தன்மையை தோற்றுவிப்பதோடு, காலப்போக்கில் சலிப்பு,  வெறுப்பை ஏற்படுத்தும்.
  தற்போது வகுக்கப்பட்டுள்ள புதிய கல்விக் கொள்கை வெளிப்படைத் தன்மையோடும்,  மக்கள்நாயக அடிப்படையிலும் உருவாக்கப்படவில்லை. கடந்த 2015இல் புதிய கல்விக் கொள்கையை உருவாக்கச் சில விவாதத் தலைப்புகளை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டது. அதன்படி கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்பட்டதாகச் செய்திகள் எதுவும் வரவில்லை. திரட்டப்பட்டதாகச் சொல்லப்படும் கருத்துகளைத் தொகுத்து சுப்பிரமணியன் குழு அறிக்கை அளித்துள்ளது.
  அந்த அறிக்கையையும் மத்திய அரசு வெளியிட மறுக்கிறது. இவ்வாறு  கமுக்கமாகக் கல்விக் கொள்கையை  உருவாக்க வேண்டிய தேவை என்ன? எனப் பொதுப்பள்ளிகளுக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பிரின்சு கசேந்திரபாபு கூறியிருப்பதில் ஆழ்ந்த பொருள் இருக்கிறது. புதிய கல்விக் கொள்கை  புதிய குலக்கல்வித் திட்டம் எனத் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
  கல்விக் கொள்கையை வரையறுக்க கல்வியாளர்களைக் கொண்ட குழுவை மத்திய அரசு அமைக்க வேண்டும். அக்குழுவில்  குமுகாயத்தின் அனைத்துப் பிரிவுகளையும் சேர்ந்த கல்வியாளர்களை இடம்பெறச் செய்ய வேண்டும். இக்குழு அறிக்கை நாட்டு மக்கள் முன்பு வைக்கப்பட்டு, மக்கள் கருத்து அடிப்படையில் புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட வேண்டும்.
 புதிய கல்விக் கொள்கை குறித்து நடப்புச்சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் விவாதித்துத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அந்தத் தீர்மானத்தில், கல்வியை மீண்டும் மாநில அரசுப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையும் இடம்பெற வேண்டும்.
  புதிய கல்விக் கொள்கை என்ற மத யானை தமிழகத்தில் நுழைய  இசைவளிக்கக் கூடாது. தமிழகத்துக்குச் சிறிதும் பொருந்தாத இந்தத்திட்டத்தை முதல்வர்  செயலலிதா எச்சரிக்கையோடு கையாண்டு, இளைஞர்களின் எதிர்காலத்தைக் காப்பாற்ற வேண்டும்” என்று கருணாநிதி கூறியுள்ளார்.
கலைஞர்