து.வரதராசா, செவ்வி, சிரீகந்தராசா thu.varatharasa_sreekantharaasa

இர.சிறீகந்தராசா: நீங்கள் குறிப்பிட்ட அந்தக் கிளிநொச்சிக் கமுக்க (இரகசிய) முகாமில் உங்களிடம் என்ன விதமான கேள்விகள் கேட்கப்பட்டன?
து.வரதராசா:: அங்கு வைத்து ஒரு கேள்வியும் என்னிடம் கேட்கப்படவில்லை. முதல் நாள் முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்த என்னை அவர்களுடைய ஊர்தியில் வவுனியா மருத்துவமனைக்குப் பண்டுவத்துக்காக அனுப்புவதாகத்தான் கூறியிருந்தார்கள். அன்று இரவு கிளிநொச்சியில் இறக்கி விடப்பட்டேன். அடுத்த நாள் அவர்களுடைய பேருந்திலே கண்ணைக் கட்டி ஏற்றினார்கள். அதில் வேறு யாரும் இருந்தார்களா, எத்தனை பேர் இருந்தார்கள் என்பதை என்னால் பார்க்க முடியவில்லை. ஏற்றிய சிறிது நேரத்தில் திரும்பி இறக்கி விட்டார்கள். இறக்கும் பொழுது படை வீரர் ஒருவர் மற்றவரிடம் கேட்கிறார் “ஏன் இறக்குகின்றீர்கள்” என்று. அவர் சொன்னார், “சிறைக்குள் தள்ளச் சொல்லி ஆணை வந்திருக்கிறது” என்று. அதற்கு முதல் நாள் இரவு, அவர்களுடைய ஒரு முகாமில்தான் நான் தங்கியிருந்தேன் – படுக்க வைக்கப்பட்டிருந்தேன் – ஓர் அறையில்.
கம்பிக் கூடு ஒன்றுக்குள் விட்டிருந்தார்கள். அந்தக் கம்பிக் கூடு, தற்காலிகமாக ஓர் அறை. ஒரு வீட்டில் இருக்கின்ற அறைக்குள் மூன்று கம்பிக் கூடுகள் செய்யப்பட்டிருந்தன. மிகவும் ஒடுக்கமானது. அதற்குள் விடப்பட்டிருந்தேன். பின்பு நான் கவனித்தேன். அந்த வீடு – அந்த முகாம் – தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினர் தங்களுடைய அலுவலகமாகப் பயன்படுத்தியது. சுவரில் ஒட்டப்பட்டிருந்த அடையாளங்கள் மூலம் இதை ஊகிக்கக்கூடியதாக இருந்தது. அதிலிருந்து, எனக்குக் காவலுக்கு இருப்பவர்கள், தங்களுக்கு மேலிடத்து உத்தரவு வந்தால்தான் என்னை வவுனியாவுக்கு அனுப்ப முடியும் என்று அடிக்கடி சொல்லிக் கொள்வார்கள். ஏறத்தாழ ஒரு கிழமைக்கு மேல் நான் அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்தேன்.
கடைசி நாள் – 8ஆவது நாள் இரவு என நினைக்கிறேன் – படை அலுவலர் வந்து கடுமையான தொனியில் பேசினார். அவர்களுக்கு ஆகலும் சிக்கலாக இருந்தது அங்கே நடந்தவற்றைப் பன்னாட்டு ஊடகங்களுக்குத் தெரியப்படுத்தியதும், வெளிநாடுகளுக்குத் தெரியப்படுத்தியதும்தாம். அதுதான் எங்கள் மீதான சினத்திற்குக் காரணமாக இருந்தது. “அவர்களுடைய கதைகளை எல்லாம் ஏன் செவ்வியாகக் கொடுத்தீர்கள்? ஏன் சொன்னீர்கள்” – இந்தச் சினம்தான் அவர்களுக்கு இருந்தது. ஆயுதம் ஏந்திப் போராடியவர்களை விட, செய்தி ஊடகங்களுக்கு உண்மைகளைத் தெரியப்படுத்தியதுதான் தங்களுக்கு மிகவும் சிக்கலைத் தந்ததாக அவர் கூறியிருந்தார்.
இர.சிறீகந்தராசா: நீங்கள் கூண்டு என்று குறிப்பிட்டிருந்தீர்கள். அஃது எவ்வளவு – ஆள் ஒருவர் இருந்து, படுத்துறங்கக் கூடிய அளவா, அல்லது விலங்குகளை அடைத்து வைத்திருப்பது போன்ற கூண்டா?
து.வரதராசா: ஓர் அறையில் மூன்று கூடு என்றால், ஏறத்தாழ மூன்று அடி அகலம், ஏழு அடி நீளம், நிற்கக்கூடிய அளவுக்கு உயரம். அதற்குள் போய்ப் படுக்கத்தான் முடியும் – படுத்து எழும்பி வர முடியும். அதற்குள் இருந்து வேறு வேலைகளைச் செய்யக்கூடிய மாதிரி இருக்காது. கம்பிக் கூட்டுக்குக் கீழாகச் சாப்பாட்டுத் தட்டை அனுப்பக் கூடிய மாதிரி ஓர் இடைவெளி இருந்தது. அதற்குக்குள்ளாகச் சாப்பாடு வரும்; சாப்பிடலாம். மற்றைய தேவைகளுக்காகக் கதவைத் திறந்து அழைத்துச் செல்வார்கள். முகம் கழுவுவதற்கு, குளிப்பதற்கு எல்லாம் அவர்கள் அந்தந்த நேரம் ஒதுக்கியிருப்பார்கள். அந்த நேரத்திற்குள் போய் எல்லாம் செய்ய வேண்டும்.
இர.சிறீகந்தராசா: உங்களுக்குத் திடீரென ஏதாவது உடல் தொந்தரவுகள் – எடுத்துக்காட்டாக இயற்கைக் கடன் கழிக்க வேண்டிய தேவை வந்தால் என்ன செய்வார்கள்?
து.வரதராசா: சொன்னால் கூட்டிக் கொண்டு போவார்கள்.
இர.சிறீகந்தராசா: இந்தக் கூண்டில் உங்களை அடைத்து வைத்ததன் நோக்கம் என்ன? அதாவது, நான் கேட்பது, உங்கள் மீதான குற்றச்சாட்டை இல்லை. உங்கள் மன உறுதியை உடைத்து, தங்களுக்குச் சார்பாக நீங்கள் கதைக்க வேண்டும், இல்லாவிட்டால் இப்படித்தான் உங்கள் நிலைமை இருக்கப் போகின்றது என்று உணர்த்துவதற்காகச் செய்தார்கள் என்று நினைப்பீர்களா இதை?
து.வரதராசா: கிளிநொச்சியில் அடைத்து வைத்திருந்த பொழுது அவர்களுடைய நோக்கங்கள் எனக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. கடைசியாக, 8ஆம் நாள் வந்து கதைத்த அலுவலரின் கதையில் இருந்து நான் அறிந்து கொண்டது – அவர் சொன்னார் ஒரு கட்டத்தில், “உன் நல்ல காலம், சண்டை முடிந்தது. இல்லாவிட்டால் தெரிந்திருக்கும்” என்று. அப்பொழுதுதான் நான் புரிந்து கொண்டேன். சில வேளை அவர்கள் பேசியபொழுது, இந்தச் சண்டை முடியாமல் இருந்திருந்தால் என்னைச் சுட்டிருப்பார்கள் என்ற தொனி அவர்களுடைய பேச்சில் இருந்தது. எடுத்துக்காட்டாக, அலைவரிசை-4இல் காட்டியது போல் (Channel-4) ஆட்களைக் கொண்டு போய்ச் சுடுகிற ஒரு நேரத்தில் என்னையும் கொண்டு போய்ச் சுட்டிருப்பார்கள் என்ற தொனி அவரது பேச்சில் இருந்தது. அதனைத்தான் என்னால் ஊகிக்கக் கூடியதாக இருந்தது. சண்டை முடிந்ததால் அவர்களுடைய இந்த முடிவை மாற்றிக் கொண்டார்கள் என நினைக்கின்றேன்.
இர.சிறீகந்தராசா: ஆனால், சண்டை முடிந்த பின்னரும் பலரைப் படுகொலை செய்தார்கள். அதாவது, உடனடித் தண்டனை (summary execution) எனச் சொல்லும் வகையில் படுகொலை செய்யப்பட்டார்கள். உங்களை – அதாவது, இவ்வளவு உண்மைகளை வெளிப்படுத்திய உங்களை – ஏன் அவர்கள் சுடவில்லை என நினைக்கின்றீர்கள்?
து.வரதராசா: அதற்கு இரண்டு, மூன்று காரணங்கள் இருக்கின்றன. நான் காயமடைந்த பின்பு என்னால் நடக்க முடியாமல் இருந்தது. என்னைத் தூக்கிக் கொண்டு வந்த என்னுடைய மருத்துவ நண்பர்களும் ஊழியர்களும் படையினரிடம் கையளித்த பின்பு அதனைப் பல இடங்களில் சொல்லியிருக்கின்றார்கள். தாங்கள் காயமடைந்த என்னைத் தூக்கிக் கொண்டு வந்து படையினரிடம் ஒப்படைத்திருக்கிறோம் என்ற செய்தியைச் சொல்லியிருந்தார்கள். அதே நேரம், வன்னியில் வேலை செய்த மருத்துவர்களை இலங்கை அரசு உசாவலுக்காகத் தடுத்து வைத்திருக்கின்றது என்ற செய்தி உலகத்திற்கும் பன்னாட்டு நிறுவனங்களும் அறிவிக்கப்பட்டிருந்தது. அவர்களுடைய அழுத்தங்கள் கூட ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால், என்னைக் கிளிநொச்சியில் ஒரு கிழமைக்கு மேல் தடுத்து வைத்திருந்தபொழுது, நான் அங்கே இருக்கின்றேன், அவர்களுடைய கட்டுப்பாட்டில் இருக்கின்றேன் என்ற செய்தியை இலங்கை அரசு யாருக்குமே சொல்லவில்லை – எங்களது குடும்பத்தினருக்கும் சரி, பன்னாட்டு நிறுவனங்களுக்கும் சரி, தெரியப்படுத்தவில்லை. போர் முடியாமல் இருந்திருந்தால், அல்லது அவர்களுடைய முடிவில் மாற்றம் வராமல் இருந்திருந்தால், என்னை அவர்கள் சுட்டுவிட்டு, காயத்தால் இறந்து விட்டார் என்றோ, அல்லது கொண்டு வரும்பொழுது போரின் அடிப்படையில் இரண்டு பேருக்குமான சண்டையில் இறந்திருப்பேன் என்றோ ஒரு பொய்யை அவர்கள் சொல்லியிருப்பார்கள் என நினைக்கிறேன்.
(நான்காம் மாடிக்கு மாற்றப்பட்ட பொழுது தான் எதிர்கொண்ட துயரங்களை அடுத்த இதழில் விளக்குகின்றார் மருத்துவர் து.வரதராசா).
:துயரங்களைmaru_varatharasa_Dr.varatharaja04
                      நன்றி: ஈழமுரசு

தலைப்பு-தொடரும் : thalaippu_thodarum
தரவு: பதிவு
பெயர்-இ.பு.ஞானப்பிரகாசன் : peyar_gnanaprakasan_peyar