திருவள்ளுவர் ஏன் ‘வீடுபேறு’ பற்றிப் பாடவில்லை?
பழந்தமிழகத்தில் மக்கள் இல்லற வாழ்க்கையையே பெரிதும் பாராட்டி வந்தனர். ஒருவனும் ஒருத்தியும் இணைந்து வாழ்வாங்கு வாழ்வாராயின் அவர்களுக்கு வீடுபேறு தானாக வந்தெய்தும் என்பது தமிழரின் கொள்கையாக இருந்தது. இக்காரணத்தினாலேயே திருவள்ளுவரும் அறம், பொருள், இன்பம் என்னும் முப்பாலை மட்டும் பாடினார்; வீட்டைப் பற்றிப் பாடினாரில்லை.
அவருடைய காலத்திலேயே ஆரியரின் பழக்க
வழக்கங்களும், தொன்மங்களும், மெய்யியல்களும் (தத்துவங்களும்) தமிழகத்தில்
குடி புகுந்து விட்டன. தருமம், அருத்தம், காமம், மோட்சம்
என்னும் ஆரியரின் கோட்பாடுகளைத் திருவள்ளுவர் அறிந்திருப்பார்.
இருப்பினும் அறம், பொருள், இன்பம் ஆகிய முப்பாலையே தமிழரின் பண்பாட்டுக்கு
உடன்பாடாகக் கொண்டு, மரபு வழுவாது அவர் திருக்குறள் என்னும் அறநூலை இயற்றினார். ‘இல்லற மல்லது நல்லற மன்று’ என்பது பிற்காலத்து எழுந்த கொன்றைவேந்தன் மொழியாகும்.
– வரலாற்றுப் பேராசிரியர் முனைவர் கே.கே.பிள்ளை:
தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக