perarivalan_and_six01

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் இராசீவு கொலையில் குற்றம்சாட்டப்பட்டுள்ள தமிழர்கள் ஏழு பேர் விடுதலை குறித்து  விடுத்துள்ள அறிக்கை!
  
இராசீவுகாந்தி கொலை வழக்கில் வாழ்நாள் சிறைத்தண்டனை பெற்ற ஏழு பேர் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருப்பதால் அவர்களை விடுதலை செய்ய முடியாது என்று மத்திய அரசு தமிழக அரசுக்குத் தெரிவித்து இருக்கிறது.
  கடந்த 24 ஆண்டுக் காலமாக 7 பேரும் சிறையில் சொல்லொண்ணாத மனத் துன்பத்திற்கு ஆளாகி வாடுகிறார்கள். மனிதநேய அடிப்படையில் இவர்களை விடுதலை செய்வது என்று 2014ஆம் ஆண்டு தமிழக அரசு செய்த முடிவுக்கு எதிராக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது. அந்த வழக்கு இன்னமும் உசாவலுக்கு (விசாரணைக்கு) எடுக்கப்படாமல் இழுபறியாக நீடிக்கிறது.
  இராசீவு கொலையில் புலன் உசாவல் (விசாரணை) சரியாக நடக்கவில்லை என செயின் ஆணையம் குற்றம் சாட்டியதன் விளைவாகப் பன்னோக்குப் புலனாய்வுக்குழு ஒன்றை மத்திய அரசு அமைத்தது. 19 ஆண்டுக் காலமாகியும் கூட இந்தக் குழு தனது அறிக்கையை இன்னும் கொடுக்கவில்லை. எப்பொழுது கொடுக்கும் என்பதும் யாருக்கும் தெரியாது. இந்தக் குழுவின் அறிக்கை வெளிவந்தால்தான் உண்மையான குற்றவாளிகள் யார் என்பது தெரிய வரும். ஆனால், வேண்டுமெனவே இக்குழுவின் உசாவல் நீட்டிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இதன் விளைவாக இந்த ஏழு பேரும் பெரும் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறார்கள்.
  புலனாய்வுக் குழுவின் அறிக்கையோ, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்போ வெளிவரும்வரை தமிழக அரசு காத்திருக்க வேண்டியதில்லை. தமிழக முதல்வருக்குள்ள உரிமையைப் பயன்படுத்தி இந்த ஏழு பேருக்கும் காப்புவிடுப்பு(பரோல்) அளிக்கலாம். இதற்கு எடுத்துக்காட்டும் இருக்கிறது.
  மதுரையில் மாநகராட்சி உறுப்பினராக இருந்த இலீலாவதி கொலை வழக்கில் வாழ்நாள் சிறைத் தண்டனை பெற்ற ஒருவருக்கு அப்பொழுதைய முதலமைச்சராக இருந்த கருணாநிதி அவர்கள் ஒரு மாதக் காப்புவிடுப்பு கொடுத்து, அது முடிந்து சிறைக்குத் திரும்பியதும் மறுநாளே மீண்டும் ஒரு மாதக் காப்புவிடுப்பு கொடுக்கப்பட்டது. இவ்வாறு 7 ஆண்டுக் காலம் அவருக்குக் காப்புவிடுப்பு நீட்டிக்கப்பட்டுக் கொண்டே இருந்தது. பிறகு 7 ஆண்டுக் காலம் சிறையில் இருந்த வாழ்நாள் சிறைத் தண்டனைக் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்தபொழுது இவரும் விடுதலை செய்யப்பட்டார். இந்த முன்மாதிரியைப் பின்பற்றி, தமிழக முதல்வர் உடனடியாக இந்த ஏழு பேருக்கும் சிறை விடுமுறை கொடுக்க வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன்.
           
பழ.நெடுமாறன் - neduma
– பழ.நெடுமாறன்.
தரவு :
பெயர்-இ.பு.ஞானப்பிரகாசன் : peyar_gnanaprakasan_peyar
பின் குறிப்பு : அப்பாவிகள் எழுவரையும் விடுதலை செய்யும் வரை, காப்பு விடுப்பில் அனுப்பி வைக்குமாறு தமிழ்க்காப்புக்கழகத்தின் சார்பில்  தமிழக முதல்வருக்கு முன்னரே முறையீடு அளிக்கப்பட்டது. இம்மடல் சிறைத்துறைத்தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டதும் அவர் மறுத்துவிட்டார். ஆனால் தமிழ்க்காப்புக்கழகத்தின் வேண்டுதலைக் கருதிப்பார்க்குமாறு அவருக்கு முதல்வர் அலுவலகத்தில் இருந்து மடல் அனுப்பப்பட்டது. அதற்கு வழக்கு நிலுவையில் இருக்கும் பொழுது காப்பு விடுப்பில் அனுப்ப  விதிகளில் இடமி்ல்லை என மறுத்துச் சிறைத்துறை சார்பில்  மறுமொழி  வந்தது.
விதிகள் அரசின் வரம்பிற்கு உட்பட்டனவே! எனவே, தமிழ்நாடு அரசு எழுவரையும் உடன் காப்பு விடுப்பில் விடுவிக்க வேண்டும்.