“மதச்சார்பற்ற இந்தியத்தேசியம் இருக்கிறதா?” 3/3
நேரு, அம்பேத்கர், இந்து
மகாஅவையினர்(சபையினர்), இடஞ்சாரிகள் அனைவருமே வலுவான இந்தியா,வல்லரசு
இந்தியா என்ற முழக்கத்தில் ஒரே குரலில் பேசுகின்றனர். இதன்வழியாக அதிகாரக்
குவிப்பதற்கு துணையாகவோ, மவுன சாட்சியாகவோ நிற்கின்றனர்.
இப்போது, மாட்டுக்கறிச் சிக்கலை முன்வைத்து தனி மனிதரின் உணவுப் பழக்கத்தையும் இந்துத்துவ வெறியர்கள் ஆக்கிரமிக்கிறார்கள் என்ற ஞாயமான எதிர்ப்பு கிளம்புகிறது. ஆனால், இதற்கான அடிப்படை “மதச்சார்பற்ற” இந்திய அரசமைப்புச் சட்டத்திலேயே உள்ளது.
அரசமைப்புச் சட்டத்தின் கூறு 48, பசுவிற்குத் தனித்தப் பாதுகாப்பு வழங்குகிறது.
“மாநிலங்கள் வேளாண்மையையும் கால்நடை
வளர்ப்பையும் நவீனமான அறிவியல் வழிப்பட்ட முறையில் ஒழுங்கமைத்துக் கொள்ள
அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். பசு, அதன் கன்றுகள், பிற பால்
வழங்கும் விலங்குகள், பண்ணை உழைப்பு விலங்குகள் ஆகியவற்றைக் கொல்வதைத் தடை
செய்து அவற்றின் இனங்களை வளர்க்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்” என
அரசமைப்பின் உறுப்பு 48 கூறுகிறது.
மேல் தோற்றத்தில் கால்நடை வளர்ப்பு குறித்து கவலைப்படுவதைப் போல இதன் வாசகங்கள் தோன்றினாலும், இப்பிரிவின் உண்மை நோக்கம் அதுவல்ல!
இச்சட்டப்பிரிவு குறித்து
அரசியல்அமைப்பு அவையில் நடந்த விவாதமும் அதை அடியொற்றி இதுகுறித்த வழக்கு
ஒன்றில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புரையும் இதற்கு சான்று கூறும்.
அரசியல்அமைப்பு அவையில் பிரிவு 48-ஐ,
(அன்றைக்கு 38கி) முன்மொழிந்து பேசிய தாக்கூர் பர்காவா, மற்றும் சேத்
கோவிந்த தாசு ஆகியோர் முதலில் பசுப்பாலின் மேன்மையையும், வேளாண் உழைப்புக்
கால்நடைகளின் தேவையையும் அவற்றின் பற்றாக்குறையையும் பட்டியலிட்டுப்
பேசினர். இவ்விலங்குகளை எக்காரணம் கொண்டும் கொல்லக் கூடாது என
வலியுறுத்தினர்.
சையது முகம்மது சாய்துல்லா என்ற
உறுப்பினரும் வேறு சிலரும், இதனை மாற்றுப் புள்ளி விவரங்களோடு எதிர்
கொண்டனர். பால் மறுத்துப் போன விலங்குகளையோ உழைக்கத் தகுதியற்ற
விலங்குகளையோ தொடர்ந்து பேணுவது உழவர்களுக்குப் பெரும் சுமையாக
அமையும், அவ்விலங்குகளுக்கும் பெரும் துயரமாக இருக்கும் என
மறுப்புரைத்தனர்.
இதில், திக்குமுக்காடிய மேற்சொன்ன இந்துத்துவவாதிகள் தங்களது உண்மை நோக்கத்தை வேறு வழியின்றி வெளிப்படையாகக் கூறினர்.
“எங்கள் மத வழிபாட்டுச்
சின்னம், எங்கள் கடவுள் கிருட்டிணருக்கு விருப்பமான விலங்கு! எனவே பசுவைக்
கொல்வதை நாங்கள் ஏற்க முடியாது. பசுவின் உயிர் வாழும் உரிமையை அடிப்படை
உரிமையாக அரசமைப்புச் சட்டத்தில் சேர்க்க வேண்டும்” என வாதிட்டனர்.
வரைவுக்குழுத் தலைவர் அம்பேத்கரின்
பெரு முயற்சிக்குப் பிறகு இப்பிரிவை அடிப்படை உரிமை என்ற பகுதிக்குப்
பதிலாக ‘வழிகாட்டும் நெறி’ பகுதியில் சேர்க்க ஏற்றுக் கொண்டனர்.
இவ்வாறு இன்று மாட்டுக்கறி உணவுக்கு எதிராக ஆர்.எசு.எசு. பரிவாரங்கள் எழுப்பும் கூக்குரலுக்கு அன்றைக்கே அரசமைப்புச் சட்ட ஏற்பு ஒருவகையில் வழங்கப்பட்டிருக்கிறது.
இந்த வழிகாட்டும் நெறியை ஏற்றுக்
கொண்டு பல்வேறு மாநில அரசுகள் பசு மற்றும் வேளாண் கால்நடைகளை
இறைச்சிக்காகக் கொல்வதைத் தடை செய்து, சட்டங்கள் இயற்றின. இது குறித்து
வழக்குகள் குவிந்தன. இதன் தொடர்ச்சியாக 2005இல் 7 நீதிபதிகள் கொண்ட
அரசமைப்பு ஆயம் இச்சிக்கல் குறித்து விவாதித்துத் தீர்ப்பு வழங்கியது.
அன்றையத் தலைமை நீதிபதி ஆர்.சி.
இலகோத்தி தலைமையிலான அரசமைப்பு ஆயம் வழங்கிய தீர்ப்பு, இச்சட்டப்பிரிவின்
உண்மையான நோக்கத்தை எடுத்துக் கூறியது.
“பால் கறக்காது போனாலும், பசுவை
மட்டும் கொல்லக்கூடாது. ஏனெனில் பசு இந்துக்களின் தெய்வம். காளை முதலான
பிறவும் தெய்வம்தான் எனினும் அவை அடுத்த நிலையிலானவை. அவை
பயன்பாடற்றுப்போனால் கொல்வதற்குத் தடையில்லை. அவற்றின் இறைச்சியை உண்ணவும்
தடையில்லை” என தீர்ப்புரைத்தது.
அதன்பிறகு, எந்த மாட்டிறைச்சி
தின்றாலும் அது பசு மாட்டிறைச்சி இல்லை என மெய்ப்பிக்கும் சிக்கல் உண்பவரது
தரப்பில் மாற்றப்பட்டது. அண்மையில், மகாராட்டிர மாநில அரசு பிறப்பித்துள்ள
சட்டம், பசு மாட்டிறைச்சி வைத்திருந்தார் என மெய்ப்பிக்
கப்பட்டால் 10ஆண்டுகள் வரை சிறை என கூறுகிறது. இந்தச் சட்டமும் சரி என உச்ச
நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
தமிழ்நாட்டில்கூட இவ்விலங்குகள் பயனற்றவை எனச் சான்று பெற்ற பிறகே உணவுக்காகக் கொல்லப்பட முடியும்.
இவ்வாறு உணவு பழக்க வழக்கம் தொடர்பாகவும், இந்துத்துவக் கோட்பாடு மதச்சார்பற்றதாகச் சொல்லப்படும் அரசமைப்புச் சட்டத்தில் இடம் பெற்றுள்ளது.
எனவே, இடஞ்சாரித் தோழர்கள்
நம்பச் சொல்வது போல் மதச்சார்பற்ற இந்தியத் தேசியமோ,வேற்றுமையில் ஒற்றுமை
வழங்கும் பன்மைத் தன்மையான இந்தியத் தேசியமோ, தேசிய இனங்களின் வாழ்வுரிமையை
ஏற்கும் சனநாயகமான இந்தியத் தேசியமோ இல்லை என்பது தெளிவாகும்.
இந்தியத் தேசியத்தை எவ்வளவு
முற்போக்கு எண்ணத்தோடு உரத்து முழங்கினாலும், முதல் சுற்றில் மட்டுமல்ல
இறுதிச்சுற்றிலும் வெல்வது இந்துத்துவமாகவே இருக்கும்!
ஏனெனில் இந்தியத்
தேசியத்தின் இன அடிப்படை ஆரிய இனவாதம், மெய்யியல் அடிப்படை பிராமணிய
வருணாசிரம வாதம்; மத அடிப்படை வேதமதவாதம்; பொருளியல் அடிப்படை கட்டற்ற
முதலாளியம் ஆகும்!
தோழர் கி. வெங்கட்ராமன்,
பொதுச் செயலாளர், தமிழ்த் தேசியப் பேரியக்கம்
தமிழர் கண்ணோட்டம் : ஏப்பிரல் 1-15
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக