நட்சத்திர மட்டையாட்ட அணிப்பெயர்களைத் தமிழில் சூட்டுக!
தென்னிந்தி நடிகர் சங்கம் சார்பில் கட்டட
நிதிக்காக நட்சத்திர மட்டையாட்டம் வரும் சித்திரை 04, 2017 / ஏப்பிரல்
17, 2016 அன்று நடைபெற உள்ளது.
நட்சத்திர மட்டையாட்டத்தில் 8 அணிகள் மோதுகின்றன. 8 அணிகளின் பெயர்கள் மாவட்டங்களின் பெயர்களில் ஆனால், ஆங்கிலச் சொல் இணைந்தே உள்ளன.
சென்னை சிங்கம்சு’ ‘மதுரை காளைசு’,
‘கோவை கிங்சு’, ‘நெல்லை டிராகன்சு’, ‘ராம்நாட் ரைனோசு’, “தஞ்சை வாரியர்சு”,
‘சேலம் சீட்டாசு’, “திருச்சி டைகர்சு” என்பனவே அணிகளின் பெயர்கள். இராமநாதபுரம் பெயர்கூட ஆங்கில ஒலிப்பில் உள்ளது.
சில இடங்களில் ஆங்கிலத்தில் குறிப்பிட்டிருந்தாலும் தமிழில் குறிக்கும்
இடங்களில் தமிழ்ப்பெயர்களுடன் ஆங்கில ஒட்டு இணைக்கப்பட்டுள்ளது.
சிங்கங்கள், காளைகள் எனச் சொல்லாமல் ஆங்கிலப் பன்மை ஒட்டினைச்சேர்ப்பது
கொடுமை அல்லவா? இந்த அணிப்பெயர்கள் ஆட்டம் முடிந்தபின்னரும் மக்கள் நாவில்
நடமாடும். இவர்களின் நேயர்கள், இப்பெயர்களைப் பயன்படுத்தி மேலும்
பரவலாக்கிக் கொடுமையைப் பெருக்குவர்!
தமிழ்நாட்டில் ஆடும் ஆட்டத்திற்குத் தமிழில் பெயர் வைக்கக்கூடாதா?
பெரும்பாலான தமிழ் மக்களிடம் கட்டண நன்கொடை பெற முயலும் நடிகர்
சங்கத்தினர் அவர்களின் மொழியை – தங்களுக்கு வாழ்வு தரும் மொழியை –
அருமைத்தமிழ்மொழியை மதிப்பதுதான் அவர்களுக்கு அழகு. அரிமா, சிறுத்தை,
வேங்கை, அடலேறு, போரேறு, புலி, நாகப்பறவை, தீ நாகம், மன்னர்கள்,
வேந்தர்கள், இளவரசர்கள் போன்று குறிப்பிடலாமே!
காலம் கடந்துவிடவில்லை. இப்பொழுதேனும் அணிகளுக்கான பெயர்களைத் தமிழில் சூட்டுமாறு தமிழ்க்காப்புக்கழகம் சார்பில் வேண்டுகின்றோம்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக