தமிழின அழிப்பு நாளின் ௭(7)ஆம் ஆண்டு நினைவு நாள்!

– பிரித்தானியாவில் அணி திரளுங்கள்!

  தமிழின அழிப்பு நாளின் ௭(7)வது ஆண்டு நினைவு நாள் நெருங்குகிறது. இம்முறை, பிரித்தானியத் தலைமையமைச்சரின் (பிரதமரின்) வீடான எண்: 10, இடவுனிங்கு வீதியில் நினைவு நாள் நிகழ்வு இடம்பெற உள்ளது.
  தமிழீழ மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை, இனப்படுகொலையை ஏழு ஆண்டுகள் ஆகிய நிலையில் தொடரும் இலங்கை அரசின் தற்போதைய நிலைப்பாட்டை பிரித்தானியாவிடமும் பன்னாட்டு அரசுகளிடமும் தெரிவித்து, அதற்கு நீதி கேட்டு மாபெரும் போராட்டம் மாலை ஐந்து மணியளவில் நடைபெற உள்ளது. பிரித்தானியா வாழ் மக்கள் அனைவரும் ஓர் அணியாகத் தமிழீழ தேசியக்கொடியுடன் இடவுனிங்கு வீதிக்கு வந்து, நமது கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும் என்று பிரித்தானியத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
  முள்ளிவாய்க்கால் ஏழாவது ஆண்டு, மே ௧௮ (18) தமிழினப் படுகொலை நாள் என்பது தமிழர்கள் ஒவ்வொருவருடைய உள்ளத்தையும் நொறுங்கச் செய்த நாளாகும். ஈவிரக்கமற்ற காட்டுமிராண்டி மக்களையும், படையையும் தன்னகத்தே வைத்திருக்கின்ற ஓர் அரசும், அதன் தலைவர்களும் எவ்வாறு மனிதர்களாக, நல்லவர்களாக வெளி உலகிற்குத் தம்மைக் காட்டிக் கொண்டு திரிகின்றார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக இலங்கை அரசையும், அதன் கொடுங்கோல் ஆட்சிக்குத் துணை போகின்றவர்களையுமே நாம் பார்க்க முடியும். அன்பையும், இன்னா செய்யாமையையும் (அகிம்சையை) காட்டிய புத்தர் பெருமானையும், ஏசுவையும் பின்பற்றுகின்றவர்களா ௨௧(21)ஆம் நூற்றாண்டில் இப்படியொரு மனிதப்படுகொலையை நடாத்தினார்கள்! இவர்களை நாம் சும்மா விட்டுவிட்டால் அது பூமித்தாய்க்கும், தமிழீழத் தாய்க்கும் செய்யும் பெரும் தீங்காகும். எனவே, இவர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டும். அதனைத் தெரியப்படுத்தும் ஒரு நாளே இந்தத் தமிழின அழிப்பு நினைவு நாள் அனைவரும் அணி திரளுங்கள்!
                                         இலீமா
நன்றி: பதிவு