தமிழ்நாட்டுக் கோயில்களில் ஆடைக் கட்டுப்பாடு நீக்கம்!
தமிழ்நாட்டில் கோயில்களுக்குச்
செல்வோருக்கு ஆடைக் கட்டுப்பாடு போட்டுத் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை
சென்னை உயர்நீதிமன்றம் 4.4.2016 அன்று நீக்கி உத்தரவிட்டது.
திருச்சி அக்கியம்பட்டி எனும் ஊரிலுள்ள
கோயிலில், நாட்டுப்புற ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த ஒப்புதல் கோரிச் சென்னை
உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் விண்ணப்பம் தரப்பட்டது.
அந்த விண்ணப்பத்தை 2015 நவம்பரில் உசாவிய
தனி நீதிபதி, தமிழ்நாடு முழுவதும் 2016 சனவரி 1-ஆம் நாள் முதல் இந்து சமய
அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோயில்களுக்கு வரும் இறையன்பர்களுக்கு ஆடைக்
கட்டுப்பாடு இட்டு உத்தரவிட்டார்.
இந்த உத்தரவில், கோயிலுக்கு வரும் ஆண் –
பெண் இறையன்பர்கள் அனைவரும் வேட்டி – சட்டை, சேலை, தாவணி போன்ற மரபுசார்
உடை அணிந்து வர வேண்டும் என்றும் குழந்தைகள் முழுமையாக மூடிய ஆடையை
அணிந்திருக்க வேண்டும் என்றும் ஆணையிட்டிருந்தார்.
மெல்லிய காலொட்டி (leggings), உரப்புக்
கால்சட்டை (jeans) போன்ற புதுமுறை ஆடைகளை அணிந்து வருபவர்களைக்
கோயிலுக்குள் நுழையக் காவல்துறையினர் விடக்கூடாது என்றும் அந்த உத்தரவில்
குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து, எல்லாக் கோயில்களிலும் கடந்த சனவரி
ஒன்று முதல் இந்த உத்தரவு செயல்படுத்தப்பட்டது.
இந்த நிலையில், ஆடைக் கட்டுப்பாடு
தொடர்பாகத் தனி நீதிபதி பிறப்பித்த இந்த உத்தரவை நீக்கக் கோரி இந்து சமய
அறநிலையத்துறைச் செயலர் சார்பில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில்
மேல்முறையீடு அளிக்கப்பட்டது.
அந்த விண்ணப்பத்தை உசாவிய (விசாரித்த)
உயர் நீதிமன்றம், ஆடைக் கட்டுப்பாடு தொடர்பான தனி நீதிபதி உத்தரவுக்கு
இடைக்காலத் தடை இட்டுத் தீர்ப்பை ஒத்தி வைத்தது.
இந்நிலையில், அந்த வழக்கை உசாவிய
நீதிபதிகள் வெ.இராமசுப்பிரமணியன், கே.இரவிச்சந்திரபாபு ஆகியோர் அடங்கிய
அமர்வு ஆடைக் கட்டுப்பாட்டு உத்தரவை நீக்கி ஆணை பிறப்பித்தது.
மேலும், “தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்த
வழக்கில், இந்துக் கோயில்களுக்குச் செல்வோருக்கு ஆடைக் கட்டுப்பாடு இட
வேண்டும் என்று கோரப்படவில்லை. எனவே, வழக்கில் தொடர்பில்லாத ஒன்றுக்கு
உத்தரவு பிறப்பிப்பதை ஏற்க இயலாது. தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை
நீக்குகிறோம்” என்று அவர்கள் தீர்ப்பளித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக