சிங்கள வதைமுகாம் கமுக்கங்கள்
– அம்பலப்படுத்துகிறார் மருத்துவர் து.வரதராசா! 1/6
நான்காம் கட்ட
ஈழப்போரில் தமிழீழத் தாயகத்தில் மக்களோடு மக்களாக நின்று பெரும்
எதிர்வுகளுக்கு(சவால்களுக்கு) மத்தியில் உயர்பெரும் மருத்துவச் சேவை
புரிந்தவர் மருத்துவர் து.வரதராசா. தமிழீழத் தாயக மக்களுக்குத் தொண்டாற்ற
வேண்டும் என்கிற உயரிய நோக்கத்திற்காக மருத்துவப் படிப்பை மேற்கொண்ட இவர்,
மருத்துவரானதும் அதனை நிறைவேற்றும் நோக்கத்துடன் மக்கள் மத்தியில் வாழ்ந்து
மருத்துவப் பணி புரிந்தார்.
போர் வெடித்த
பொழுது திருமலை ஈச்சிலம்பற்று முதல் வாகரை வரையான பகுதியில் மக்களின் உயிர்
காக்க முன்வந்தார். அங்கிருந்து பின்வாங்கிய பொழுது இவரைத் தம்முடன்
வன்னிக்கு வருமாறு தமிழீழ விடுதலைப் புலிகள் அழைத்ததற்கு “மக்களின் உயிரைக்
காப்பதற்கு வன்னியில் எனது பணி உங்களுக்குத் தேவைப்படும் என்றால்
வருகின்றேன். இல்லாது போனால், நானும் மக்களோடு போகின்றேன். அப்பொழுது
எனக்கு ஏதாவது நடந்தால், மக்களுக்கு நடந்தது எனக்கும் நடந்ததாக
இருக்கட்டும்” என்று கூறியவர். அதன் பின், வன்னியில் மக்களுக்கு ஆற்ற
வேண்டிய பணிகளைக் கருத்தில் கொண்டு அங்கு சென்றவர்.
இனப்படுகொலை
முடிவடைவதற்குப் பல நாட்களுக்கு முன்னரே, மக்களைக் கைவிட்டு எத்தனையோ பேர்
ஓடியபொழுதும், வைகாசி 01, 2040 / 15.05.2009 அன்று சிங்களப் படைகளின்
எறிகணைத் தாக்குதலில் காயமடையும் வரை மக்களோடு மக்களாக நின்று அவர்களின்
உயிரைக் காப்பதற்கு ஓயாது உழைத்தவர்.
இப்பொழுது
அமெரிக்காவில் வாழ்ந்து வரும் மருத்துவர் வரதராசா அவர்கள் இலண்டன்
வந்திருந்தபொழுது அவரை நாம் சந்தித்தோம். அப்பொழுது அவர் எமக்கு வழங்கிய
நேர்காணலைத் தருகின்றோம். ஈழமுரசு இதழின் சார்பில் மருத்துவர் வரதராசா
அவர்களைச் செவ்வி கண்டவர் கலாநிதி இர.சிறீகந்தராசா.
இர.சிறீகந்தராசா: நீங்கள்
இறுதிப் போரின்பொழுது வன்னியில் பணிபுரிந்த மருத்துவர். அந்த வகையில்
இறுதிப் போரில் பல எதிர்வுகளை (சவால்களை) எதிர்கொண்டிருப்பீர்கள். அந்த
வகையிலே நீங்கள் எதிர்கொண்ட குறிப்பிடக்கூடிய எதிர்வுகளைப் பற்றி விவரிக்க
முடியுமா?
து.வரதராசா: வன்னியில் மட்டுமில்லை, வாகரையிலும் கடமையாற்றிய பொழுது, அது
போர்ப் பகுதியாக இருந்ததால் பல விதமான எதிர்வுகளைச்(சவால்களை) சந்திக்க
வேண்டி இருந்தது. எடுத்துக்காட்டாகத், தாக்குதல் நடந்து கொண்டிருக்கும்
வேளையில் மக்களுடைய இடப்பெயர்வு, பெரும் எண்ணிக்கையான காயங்கள், இறப்புகள் – வழக்கத்துக்கு மாறான சூழ்நிலை – பல
எதிர்வுகளைத் தந்திருந்தன. அதே நேரம், காயமடைந்த நோயாளர்களை அடுத்த கட்ட
பண்டுவத்துக்காக(சிகிச்சைக்காக) அரசு கட்டுப்பாட்டு மருத்துவமனைகளுக்கு
அனுப்புவதிலும், காயமடைந்த நோயாளர்களுக்குப் பண்டுவம்(சிகிச்சை) வழங்குவதற்குப் போதிய அளவு ஆளணி, மருத்துவ வசதி இல்லாததாலும் நாங்கள் பெரும் எதிர்வுகளை எதிர்நோக்கியிருந்தோம்.
அதே நேரம், மக்கள் பல தடவைகள் இடம்பெயர வேண்டிய ஒரு நிலைமை இருந்தது. பல முறைகள் இடம்பெயர்ந்து, இடம்பெயர்ந்து அடிப்படை வசதிகள் – சாப்பாடு, தங்குமிடங்கள் போன்றவை – கிடைக்காமல் பல்வேறு வகையான எதிர்வுகளை மக்களும் எதிர்நோக்கியிருந்தார்கள். மேலும், மருத்துவமனைகள் அனைத்தும் – நாங்கள் கடமை செய்த அனைத்து மருத்துவமனைகளும் – திட்டமிட்ட வகையில் தாக்குதல்களுக்கு உள்ளாகியிருந்தன. நாங்கள் இயல்பாக மருத்துவ ப்பணி வழங்க முடியாத நிலைமையும் காணப்பட்டது.
இர.சிறீகந்தராசா: இந்த எதிர்வுகளை நீங்கள் எவ்வாறு கையாண்டீர்கள்?
து.வரதராசா: அந்தந்த நேரத்தில் பொருத்தமான முடிவுகளை எடுப்பதன் மூலம்தான். அதாவது, எமது மருத்துவமனைகளும், மக்கள் குடியிருப்புகளும் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கின்ற செய்தியைப் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தெரியப்படுத்தியும், மருத்துவப் பற்றாக்குறை, நோயாளர்களின் எண்ணிக்கை, காயமடைந்த நோயாளர்களை அடுத்த கட்ட பண்டுவத்துக்கு(சிகிச்சைக்கு) அனுப்புவதற்கு இருக்கின்ற எதிர்வுகள், தேவைகள் ஆகியவற்றை உரிய நேரத்தில் தெரிவித்தும் அந்த முடிவுகளை எடுத்திருந்தோம். எமது மருத்துவமனையில் கடமை புரிந்த ஊழியர்கள், மருத்துவர்கள் அனைவரும் வழமையை விடக் கூடுதல் நேரங்கள் கடுமையாக உழைத்து, சிரமப்பட்டு,
உறக்கம் கொள்ளாமல் இருந்து, எங்களுடைய சொந்தத் தேவைகளை எல்லாம் மறந்து
மிகவும் ஒப்படைப்பு உணர்வுடன் செயல்பட்டதன் மூலமும் இந்த எதிர்வுகளை
எதிர்கொண்டோம்.
இர.சிறீகந்தராசா: இதுவரை
நீங்கள், குறிப்பிட்ட அந்த எதிர்வுகளை எதிர்கொண்ட விதத்தைப் பொதுவாகக்
குறிப்பிட்டீர்கள். குறிப்பிடத்தக்க, தனிச்சிறப்பாக நீங்கள் எதிர்கொண்ட ஓர்
எதிர்வையும், அதை நீங்கள் எதிர்கொண்ட விதத்தையும் சற்று விரிவாக விளக்க
முடியுமா?
து.வரதராசா: எடுத்துக்காட்டாகச் சொல்வதென்றால், பெரிய ஒரு காயம் – அல்லது பெரிய அறுவைப் பண்டுவம் (சிகிச்சை) – நீண்ட நேரம் செய்ய வேண்டிய அறுவைப் பண்டுவங்கள் – அப்படியான நிலைகள் வருகின்ற பொழுது, அவர்களுக்கு மயக்க மருந்து பெரும் அளவில் தேவைப்படும். மருந்து, உப்புக் கரைசல்(saline), குருதி
போன்றவை நிறையத் தேவைப்படும். நீண்ட நேரம் எடுத்து அந்த அறுவைப்
பண்டுவங்களைச் செய்ய வேண்டும். சில நேரங்களில், சில நோயாளர்களுக்கு
அப்படியான ஒரு பண்டுதத்தைச் செய்தாலும் காப்பாற்றுவதற்குரிய வாய்ப்பு
குறைவாக இருக்கும். சில நேரம் காப்பாற்ற முடியாமல் இருக்கும். அப்படிப்பட்ட
நேரங்களில் நாங்கள் அப்படியான பண்டுவங்களைத் தவிர்த்து, வேறு
சிறிய காயங்களை அல்லது வேறு காயங்களுக்கான அறுவைப் பண்டுவங்களை அந்த
நோயாளர்களைத் தவிர்த்துச் செய்திருக்கின்றோம். அதே போல, ஒரு நோயாளருக்குத்
தேவையான மருந்தின் அளவுகளைக் குறைத்துக் கூட – அவர்களுக்கு கொடுக்கின்ற உப்புக் கரைசல்(saline), மருந்துகள், மயக்க மருந்துகளைக் குறைத்துக் கூட – அவர்களுக்கு அறுவைப் பண்டுவங்களையும் ஏனைய பண்டுவங்களையும் வழங்கியிருக்கிறோம்.
இர.சிறீகந்தராசா: இவ்வாறான நேரங்களில் உங்களுடைய உணர்வுகள் எவ்வாறு இருந்தன?
து.வரதராசா: எங்களுடைய உணர்வுகள் போர் தொடங்கிய நாட்களில் இருந்து மிகவும் இடர்ப்பாடாக இருந்தன. மக்கள் பாதிக்கப்படுவது, காயமடைந்து உறுப்புகளை இழப்பது, இறப்பது, மருந்தில்லாமல் இறப்பது, அடுத்த கட்ட பண்டுவத்துக்கு அனுப்ப முடியாமல் இறப்பது போன்ற நிகழ்வுகள் எங்களுடைய மனத்தை மிகவும் பாதித்துக் கொண்டிருந்தன.
இர.சிறீகந்தராசா: நீங்கள்
வாகரையிலும், வன்னியிலும் – இரண்டு இடங்களிலும் – கடைசி வரை பணிபுரிந்த
மருத்துவர் என்கிற வகையில் சிங்கள அரசின் எறிகணை வீச்சுக்கள், பல்வேறு
வகையான வான்வழித் தாக்குதல்கள் மூலம் படுகொலை செய்தது இன
அழிப்பு என்றாலும், இனவழிப்பிற்கு அப்பால் வேறு என்ன நோக்கம் இருந்தது
என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்? அஃதாவது, மக்களுடைய மன உறுதியைக்
குலைப்பது – இப்படியான நோக்கம் – அல்லது போராட்டத்தில் இருந்து அவர்களை
விலக வைப்பது – இப்படியான எண்ணங்களோடுதான் இந்தத் தாக்குதல்களைச்
செய்தார்கள் என்று கூறுவீர்களா?
து.வரதராசா: இலங்கையில் ஏற்பட்ட இந்தப் போர் வாகரையிலோ முள்ளிவாய்க்காலிலோ ஏற்பட்டது இல்லை. அதற்கு முன்பு, ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வரும் போர். தமிழின அழிப்பிற்கான போர். 83ஆம் ஆண்டுக் கலவரத்திலும், அதற்கு
முன்பும் கூட இந்தச் சிக்கல் தொடங்கியிருந்தது. இஃது ஒவ்வொரு
காலக்கட்டத்திலும் தமிழ் மக்கள் மீது திட்டமிட்ட வகையில் இந்த இனவழிப்பை, ஆயுதங்களால் மட்டுமல்லாமல், உணவுக் கட்டுப்பாடு, போக்குவரத்துத் தடை, மருந்துப் பொருட்களுக்கான தடை, எரிபொருட்களுக்கான தடை போன்றவற்றை இட்டு, எந்த அரசு ஆட்சியில் வந்தாலும் இந்தத் தடைகள் – குறிப்பாக, புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் – நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தன. இன அழிப்பின் உச்சக் கட்டமாகத்தான் இந்த வாகரை, முள்ளிவாய்க்கால் பகுதித் தாக்குதல்களை நாம் பார்க்க வேண்டும்.
இர.சிறீகந்தராசா: ஆனால்,
இதன் மூலமாக மக்களைக் கொல்ல வேண்டும் என்பது மட்டும்தான் நோக்கமாக
இருந்ததா? அல்லது வேறு ஏதாவது அரசியல் நோக்கங்கள் – அதாவது, கொல்வதன் மூலம்
மக்களின் மன உறுதியை உடைப்பது, போராளிகளிடமிருந்து மக்களைப் பிரிப்பது –
இப்படியான நோக்கங்கள் இருந்திருக்கும் எனக் கூற முடியுமா?
து.வரதராசா: பல நோக்கங்கள் இருந்திருக்கும். ஓர் இடத்தில் இருக்கிற மக்களை அழிப்பது என்பது மட்டுமில்லாமல், அவர்களை இடம்பெயரச் செய்து அவர்களின் சொத்துகளை அழிப்பது, அந்த மக்களை – இடம்பெயர்ந்த மக்களைக் கூட நீங்கள் பார்த்திருந்தால் தெரிந்திருக்கும், வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து சென்ற மக்களை வவுனியாவில் உள்ள தடுப்பு முகாம்களில் வைத்து – அவர்களுடைய முகாம்கள் எல்லாம் மிகவும் இறுக்கமான முகாம்களாக, அந்த இடத்திற்கு வெளியில் இருந்து ஆட்கள் செல்ல முடியாது – முகாமிற்குள் உள்ள மக்கள் வெளியில் – மருத்துவத் தேவைகளுக்குக் கூடத் தாங்கள் நினைத்த மாதிரி வர முடியாத ஓர் இறுக்கமான சூழலில் அடைத்து வைத்திருந்து, பல்வேறு விதமான தடைகளையும் அங்கு ஏற்படுத்தி, பண்பாட்டுச் சீரழிவைக் கூட ஏற்படுத்தக் கூடிய மாதிரிதான் போர் நடந்தது. உயிரிழப்பிற்கு அப்பால் மக்களுடைய சொத்துகள், கல்வி வளர்ச்சி எல்லாவற்றையுமே அந்தப் போர் மூலம் அழித்திருந்தார்கள்.
இர.சிறீகந்தராசா: இந்த
இறுதிப் போர் நடைபெற்றபொழுது புலம்பெயர் நாடுகளில் போராட்டங்கள் நடைபெற்றன –
போரை நிறுத்த வேண்டும் என்று கோரி. அதே நேரத்தில் சில வெளிநாட்டுத்
தலைவர்கள், அமைச்சர்கள், அரசியல் வல்லுநர்கள் போன்றோரும் இலங்கைக்குச்
சென்று போர்நிறுத்தம் பற்றிக் கதைத்திருந்தார்கள். ஆனால், எதுவுமே
நடக்கவில்லை. உண்மையில் நீங்கள், அங்கிருந்த மருத்துவர் என்ற வகையில்
பன்னாட்டுக் குமுகத்திடம் (சமூகத்திடம்) அந்த நேரத்தில் எதனை
எதிர்பார்த்திருந்தீர்கள்?
து.வரதராசா: நான் மட்டுமில்லை, எங்கள் மக்கள் அனைவருமே அமைதிக்கான முன்னெடுப்பொன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என்று எதிர்பார்த்திருந்தோம். மக்களை இடப்பெயர்விலிருந்தும், அழிவிலிருந்தும் பன்னாட்டுக் குமுகம் (சமூகம்) பாதுகாக்க வேண்டும் என்று நினைத்தும், பாதுகாப்பார்கள் என்று நம்பியும் இருந்தோம். மக்கள் அனைவருமே பன்னாட்டுக் குமுகம் இதில் தலையிட்டு உடனடியாகத் தங்களைப் பாதுகாப்பார்கள், அல்லது
பாதுகாப்பான ஓர் இடத்திற்கு அழைத்துச் செல்வார்கள் அல்லது அமைதிக்கான
முன்னெடுப்புக்களைச் செய்வார்கள் என்று எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால், எதுவும் நடக்கவில்லை.
இர.சிறீகந்தராசா: அந்தக் காலக் கட்டத்திலே நடைபெற்ற புலம்பெயர் மக்களின் போராட்டங்களால் ஏதாவது பலன் கிடைக்கும் என்று நீங்கள் நம்பியிருந்தீர்களா?
து.வரதராசா: எங்களுக்கு எதிர்பார்ப்பு இருந்தது. நம்பிக்கையும் இருந்தது. ஏதோ ஒரு வழியில், புலம்பெயர்ந்த மக்களுடைய போராட்டத்தால், இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகள் தலையிட்டுப் பாதுகாப்பார்கள் என்ற நம்பிக்கை மக்களுக்கும், எங்களுக்கும் இருந்தது.
இர.சிறீகந்தராசா: இறுதி வரை பன்னாட்டுக் குமுகம் எதையுமே செய்யவில்லை என்றபொழுது உங்களுடைய மனநிலை எப்படியிருந்தது?
து.வரதராசா: சினம் கலந்த வெறுப்பு, அல்லது ஏமாற்றம் எங்களுக்கு இருந்தது. முதலில், கிளிநொச்சியில் இருந்த பன்னாட்டுத் தொண்டு நிறுவனங்களை இலங்கை அரசு வெளியேற்றி விட்டது. பன்னாட்டு நிறுவனங்கள், தன்னார்வமாக இயங்கக்கூடிய இதழாளர்கள் எவரையுமே அந்த இடத்தில் இருக்க விடவில்லை. தொடக்கத்தில் இருந்தே எங்களுக்கு ஓர் அச்சம் இருந்தது. எந்தப் பன்னாட்டு நிறுவனத்தையும் இருக்க விடாமல், மக்களை
அழிப்பதற்கான திட்டத்தைத் தொடக்கத்திலேயே மேற்கொண்டு விட்டார்கள்.
அப்பொழுது மக்களுக்கு அந்த அச்சம் மிகவும் கொடுமையாகத்தான் இருந்தது.
ஏனென்றால், எல்லாரையும் அழிக்கப் போகின்றார்கள் என்ற எண்ணமும் அச்சமும்
முதலிலிருந்தே மக்களின் மனத்தில் இருந்தது. அதே நேரம், குறிப்பாக
உங்களுக்குத் தெரிந்திருக்கும், 2009 ஆம் ஆண்டு தை மாதம் இலங்கை அரசு
திட்டமிட்டே, அந்தப் பகுதியில் மூன்றரை நூறாயிரம்(மூன்றரை இலட்சம்) மக்கள் இருந்தபொழுது, எண்பதினாயிரம் மக்கள் மட்டும்தான் இருக்கின்றார்கள் என்ற ஒரு பொய்ச் செய்தியை உலகத்திற்குக் கூறி, ஏறத்தாழ இரண்டரை நூறாயிரம் (இரண்டரை இலட்சம்) மக்களை அழிப்பதற்கான முயற்சியை முதலிலிருந்தே மேற்கொண்டிருந்தார்கள். அந்த நேரத்தில் உலக நாடுகளும், பன்னாட்டு நிறுவனங்களும் உண்மையை எடுத்துக் கூறி மக்களைக் காப்பாற்றுவதற்குத் தவறி விட்டார்கள்.
நன்றி: ஈழமுரசு
தரவு: தமிழ் அருள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக