செவ்வாய், 6 ஆகஸ்ட், 2013

மருமகளுக்குத் தோலைத் தானம் செய்த மாமனார்

மருமகளின் மீதுள்ள பாசத்தால் தனது தோலை த் தானம் செய்த மாமனார்
மருமகளின் மீதுள்ள பாசத்தால் தனது தோலை தானம் செய்த மாமனார்
அகமதாபாத் ; ஆகஸ்ட் 6 ; 

இப்போதெல்லாம் பத்திரிகைகளைப் பிரித்தாலே மருமகள்,மாமனார்,மாமியார் பிரச்சினைகளும், கொலை முயற்சிகளுமே பெரும்பான்மையாக காணப்படுகின்றன. அதற்கு மாற்றாக ஒரு வித்தியாசமான சம்பவம் தற்போது அகமதாபாத்தில் நடந்துள்ளது. 

அகமதாபாத்தில் ஹிம்மத் நகரில் வாழ்ந்துவருபவர் மோனிகா ரதோட் (26) என்பவர். இவர் கடந்த மே மாதம் 26ஆம் தேதி தனது வீட்டில் மதிய உணவைத் தயாரித்துக் கொண்டிருந்தபோது அடுப்பில் மண்ணெண்ணெய் தீர்ந்துவிட்டது. சமையலை முடிக்கவேண்டிய அவசரத்தில் மோனிகா அடுப்பை நிறுத்தாமலேயே அப்படியே எண்ணெய்யை ஊற்றியுள்ளார்.

அப்போது அடுப்பு வெடித்துப் தீ பரவியது. அதில் அவரது மார்பு, கைகள், வயிறு, தொடை போன்ற பகுதிகளில் இருந்த தோலைப் பொசுக்கிவிட்டது. 64 சதவிகித தீக்காயங்களுடன் அவர் அகமதாபாத்தில் உள்ள வி.எஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.அவர் உயிர் பிழைக்கவேண்டுமானால் அவருக்கு தோல் மாற்று அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்று அங்குள்ள மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

அவரது உடலின் முன்புறம் பெரும்பான்மையான பகுதிகள் கருகியதால் அவரது உடம்பில் இருந்து தோலை எடுப்புப் பொருத்துவது சாத்தியமில்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.தனது மூத்த மருமகளின் உயிரைக் காப்பாற்ற நினைத்த மாமனார்ஹிம்மத்சின்ஹ் ரதோட் தனது தொடையிலிருந்து தோலை தானமாகத் தர முன்வந்தார்.

இவரது செயல் அங்கிருந்த மருத்துவர்களுக்கே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.எத்தனையோ அறுவை சிகிச்சைகளைத் தான் செய்திருந்தபோதிலும், மாமனார் மருமகளுக்காக சிகிச்சைக்கு உட்படுவது இதுவே முதன் முறையாகும் என்று மோனிகாவிற்கு தோல் மாற்று அறுவை சிகிச்சை செய்த டாக்டர் விஜய் பாட்டியா தெரிவித்தார். 

சிகிச்சை முடிந்து தற்போது ஆபத்திலிருந்து மீண்டு உடல்நலம் தேறிவரும் மோனிகா, தான் பெரிய துன்பத்தை அனுபவிக்க நேரிட்டபோதிலும் தனக்கு இத்தகைய மாமனார் கிடைத்தது குறித்து மிகவும் மகிழ்ச்சியடைவதாகக் கூறினார். 

மோனிகாவின் மாமனார் ஹிம்மத்சின்ஹ் குண்டா கிராமத்தில் ஒரு விவசாயியாக வாழ்க்கை நடத்திவருபவர். தனக்கு மூன்று மகன்கள் என்றும், மோனிகா திருமணமாகி வந்தபோது அவரை மகளாகவே வரவேற்றதாகவும், மகளது உயிரைக் காப்பாற்றவே தான் முன்வந்ததாகவும் அவர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக