வியாழன், 8 ஆகஸ்ட், 2013

'மெட்ராசு கபே' படத்தைத் தடை செய்: இராமதாசு


'மெட்ராசு கபே' இந்தி ப்  படத்தை த் தடை செய்யவேண்டும்:  மருத்துவர் இராமதாசு அறிக்கை
'மெட்ராஸ் கபே' இந்தி படத்தை தடை செய்யவேண்டும்: டாக்டர் ராமதாஸ் அறிக்கை
சென்னை, ஆக. 8–
பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிருப்பதாவது:–
ஹிந்தி திரைப்பட நடிகர் ஜான் ஆபிரகாம் 'மெட்ராஸ் கஃபே' என்ற பெயரில் ஹிந்தித் திரைப்படம் ஒன்றை தயாரித்து நடித்துள்ளார். இலங்கையில் நடைபெற்ற விடுதலைப் போராட்டத்தை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட இந்தத் திரைப்படத்தில் விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளாக சித்தரித்திருப்பதாக செய்திகள் வெளியானதை அடுத்து அப்படத்தை தமிழகத்தில் வெளியிடுவதற்கு ஈழ ஆதரவாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது.
ஈழ ஆதரவாளர்களின் ஐயங்களுக்கு இதுவரை தெளிவான விளக்கம் எதையும் அளிக்காத நடிகர் ஜான் ஆபிரகாம் இப்போது மெட்ராஸ் கஃபே திரைப்படம் தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வரும் 23–ஆம் தேதி தமிழகத்தில் வெளியிடப்படும் என்று அறிவித்திருக்கிறார்.
இந்தப்படத்தில் விடுதலைப் புலிகளை தீவிரவாதிகளாக சித்தரித்திருக்கிறீர்களா? என்று அவரிடம் செய்தியாளர்கள் கேட்ட போது, "விடுதலைப்புலிகளை நாங்கள் ஆதரிக்கவும் இல்லை எதிர்க்கவும் இல்லை" என்று மழுப்பலாக பதிலளித்திருக்கிறார். ஆனால், இந்தத் திரைப்படத்தின் பெரும்பகுதி இலங்கையில் படம் பிடிக்கப்பட்டிருக்கிறது; இலங்கையில் இராஜபக்சே அரசின் ஆதரவுடன் அதிக திரை அரங்குகளில் திரையிடப்பட உள்ளது என்பதிலிருந்தே இந்தப் படம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை யூகிக்க முடியும்.
1980–களின் இறுதியில் இந்திய அமைதிப்படை இலங்கைக்கு சென்றது முதல் 2009–ஆம் ஆண்டில் நடைபெற்ற ஈழப்போர் வரை விவரிக்கும் இப்படத்தில் விடுதலைப் புலிகள் மோசமானவர்களாக சித்தரிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஈழ விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையிலும் காட்சிகள் இடம் பெற்றிருப்பதாக தெரிகிறது. மொத்தத்தில் இலங்கை அரசின் பிரச்சாரப் படத்தைப் போன்று இது தயாரிக்கப்பட்டிருக்கிறது.
இலங்கையில் வரும் நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டை வேறு நாட்டிற்கு மாற்ற வேண்டும் என உலகம் முழுவதும் கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில், இலங்கைப் படையினரை உத்தமர்களாக காட்டி, அவர்களுக்கு எதிரான போர்க்குற்றங்களையும், எதிர்ப்புகளையும் நீர்த்து போகச் செய்யலாம் என்ற எண்ணத்தில் தான் இந்தத் திரைப்படத்தை தயாரிக்க இலங்கை அரசு பல்வேறு உதவிகளை செய்திருக்கிறது.
ஏற்கனவே, இந்தியாவில் ஈழத் தமிழர்களுக்கு எதிரான உணர்வுகளை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக மத்தியப் பிரதேசம், பிகார், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்குள்ள தலைவர்களை சந்தித்து பேசியுள்ளார். இந்த நிலையில் திரைப்படங்களின் மூலம் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு எதிராக இந்திய மக்களிடையே நச்சு விதைகளைத் தூவுவதற்காகவே, இராஜபக்சே ஏற்பாட்டில் இப்படம் எடுக்கப்பட்டிருக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.
இலங்கையில் நடைபெற்ற ஈழப்போர், இழந்த நாட்டை மீட்பதற்காக தமிழர்கள் நடத்திய போராட்டம்; இது மிகவும் உன்னத வரலாறு ஆகும். இத்தகைய ஒரு விடுதலை இயக்கத்தை கொச்சைப் படுத்தும் வகையில் திரைப்படம் தயாரித்திருப்பது உலகம் முழுவதும் உள்ள 10 கோடி தமிழர்களை அவமதிக்கும் செயலாகும். இதை நான் கடுமையாக கண்டிக்கிறேன்.
பொதுவாக கருத்து சுதந்திரம் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டும், திரைப்படங்கள் நல்ல விசயங்களை துணிச்சலாக எடுத்துக் கூற வேண்டும் என்பதுதான் எனது நிலைப்பாடு ஆகும். ஆனாலும், ஓர் இனத்தின் விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட படத்தை கருத்து சுதந்திரம் என்ற பெயரில் வெளியிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, மெட்ராஸ் கஃபே திரைப்படத்தின் அனைத்து மொழிப் பதிப்புகளுக்கும் தடைவிதிக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக