வெள்ளி, 9 ஆகஸ்ட், 2013

மறக்கப்பட்டவர்களின் மரண வரலாறு

தின இதழ் Home / அபூர்வ தகவல்கள் / மறக்கப்பட்டவர்களின் மரண வரலாறு
மறக்கப்பட்டவர்களின் மரண வரலாறு

மறக்கப்பட்டவர்களின் மரண வரலாறு

எத்தனைப் பேருக்கு த் தெரிந்திருக்கும் இந்தத் தமிழர்களை? இவர்களுக்காக ஏன் ஒரு நினைவுக்குறிப்பு கூட இல்லை? ஏன் இவர்களின் வரலாறு மறக்கப்பட்டது? இவர்களைப் பற்றி எழுத ஏன் இவ்வளவு காலம் ஒருவருக்குக்கூட மனம் வரவில்லை? ஏன்? எதற்கு? எப்படி? எங்கே? என்ற உங்கள் அனைத்து கேள்விகளுக்கும் பதில்… கீழே… அது இரண்டாம் உலகப் போர். தோட்டாக்களும், பீரங்கிகளும், விமானம் மூலமாகவும், கப்பல் மூலமாகவும் கந்தகத்தை டன் கணக்கில் வாரியிறைக்க… கொத்துக் கொத்தாய் செத்துக் கொண்டிருந்தது மனிதம். அதே வேகத்தில் எரிகிற வீட்டில் பிடுங்கிய வரை லாபம் என்ற பழமொழியை உண்மையாக்கும் வகையில் நாடுகள் தங்கள் எல்லைகளை விரித்துக் கொண்டிருந்தன. அந்த சமயத்தில் ஜப்பான், அப்போதைய நிலைமையை சாதகமாக்கி தன் எல்லைகளை விரிவாக்கும் முயற்சியில் இறங்கியது.
மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, மற்றும் பர்மாவும் அதன் பிடியில் விழுந்தது. அப்போது தான் நேதாஜி காங்கிரஸை விட்டு விலகி இங்கிலாந்துக்கு எதிரான நாடுகளின் உதவியை நாடினார். அவரது இந்திய தேசிய ராணுவம் சிங்கப்பூரில் இருந்து இயங்கிக் கொண்டிருந்தது. அதில் பணியாற்றிவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள். அப்போது ஜப்பானுடன் உறவு வைத்துக் கொண்டார் நேதாஜி. இந்தக் காரணத்தை முன்னிட்டு இந்தியாவைக் கைப்பற்றும் திட்டத்தில் இறங்கியது ஜப்பான். இந்தியாவை கைப்பற்ற பெரும் எண்ணிக்கையிலான படைகள் தேவை. அவற்றை ஜப்பானிலிருந்து கடல் வழியாக கப்பல் மூலமாக கொண்டுவருவது சிரமம் என்பதால் தரைவழி பாதையை தேர்ந்தெடுத்து, சயாம் முதல் பர்மா வரை ஒரு ரயில் பாதை ஒன்றை இட முடிவு செய்தது.
அதன் ஐந்தாவது படை அணி மேற்பார்வையிட, 16 மாதங்களுக்குள் அந்த இரயில் பாதையை நிர்மாணித்து முடிக்க வேண்டுமென கட்டளையிட்டது.அதற்கு ஏராளமான ஆள்பலம் தேவைப்பட்டது. தொழில் நுட்ப வேலைகளுக்கு, தங்களிடம் போர்க் கைதிகளாய் இருந்த ஆங்கிலேய மற்றும் ஆஸ்திரேலிய படைவீரர்களை பயன்படுத்திக் கொண்டனர். சுரங்கம் வெட்டுதல், மண் அள்ளுதல் போன்ற வேலைகளுக்கு அடிமட்டத் தொழிலாளிகள் நிறைய பேர் தேவைப்பட்டனர். இதற்காக பெருமளவில் ஆசியத் தொழிலாளர்கள் கொண்டு செல்லப்பட்டனர். சயாமியர், மலாய் இனத்தவர்கள் தவிர, ஒரு லட்சத்திற்கும் மேலான தமிழர்களும் அவர்களிடம் சிக்கினர் என மதிப்பிடப்படுகிறது. ரப்பர் தோட்டத்தில் வேலை செய்த, தனியார் நிறுவனங்களில் பணி புரிந்த, தோட்டங்களையும் வயல்களையும் கவனித்துக்கொண்டிருந்த, ஏன் சாலைகளில் சென்று கொண்டிருந்தவர்களைக்கூட விடவில்லை ஜப்பானின் ராணுவத்தினர். ஏமாற்றி, வலியுறுத்தி என எப்படி பணியவைக்க வேண்டுமோ அப்படி.போரினால் கடும் பஞ்சம் வேறு.
உணவுக்காக தவித்த, உயிருக்கு பயந்த, குடும்பத்தைக் காப்பாற்ற, தன் பிள்ளைகளை அழைத்துச்செல்லாமல் தடுக்க என ஒவ்வொருவருக்கும் அடிபணிந்து போக ஒவ்வொரு காரணம். ஒரு லட்சம் தமிழர்களில் போர் முடிந்தவுடன் திரும்பியவர்கள் பத்தாயிரத்தை கூட தாண்ட மாட்டார்கள் என குத்துமதிப்பான புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மீதமுள்ளவர்கள் கதி. அதோகதிதான்.இதில் பணியாற்றிய ஆஸ்திரேலிய படைவீரர்கள் சிலர் தங்கள் அனுபவங்களை நூல்களாகக் கொண்டு வந்துள்ளனர். ஆங்கிலேயர்களோ “ஜிலீமீ ஙிக்ஷீவீபீரீமீ ஷீஸீ tலீமீ ஸிவீஸ்மீக்ஷீ ரிஷ்ணீவீ” என்ற திரைப்படத்தின் மூலம் தங்கள் அனுபவத்தை நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே உலகத்திற்கு சொல்லிவிட்டனர். அவர்களின் வலிகள் ஆவணப்படுத்தப்பட்டுவிட்டன. நம் பாடுதான் திண்டாட்டம். வெகு சில நூல்களே அதைப் பதிவு செய்திருந்தன. எப்போதோ நடந்த நிகழ்வுகளைப் பதிவு செய்ய எண்ணி 1993’ஆம் ஆண்டு சண்முகம் எழுதியது தான் ”சயாம் மரண ரயில் சொல்லப்படாத மௌன மொழிகளின் கண்ணீர்”.
இதை தமிழோசை பதிப்பகம் 2007ம் ஆண்டு மறுவெளியீடு செய்திருக்கிறது.ஜப்பானிடம் சிக்கிய இந்த தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமை, யூதர்களுக்கு நாஜி இழைத்த கொடுமைகளுக்கு இணையானது என இந்நூலின் பதிப்புரையில் சொல்லப்பட்டிருக்கிறது. மரவள்ளிகிழங்கும், கருவாடும், ஆகியவையே பெரும்பாலும் அவர்களின் உணவு. உடம்பு முடியாவிட்டாலோ, விஷப்பூச்சிகளோ, பாம்போ கடித்துவிட்டாலோ, அவர்களுக்காக யாரும் நிற்பதில்லை. ஆங்காங்கே விழுந்து அப்படியே இறக்க வேண்டியது தான், முகாம்களில் நோய்வாய்ப்பட்டால், மருத்துவமனை அழைத்து செல்கிறோம் என்ற பெயரில், ஒதுக்குபுறமான ஒரு கொட்டகையில் போய் விட்டு விடுவார்கள். கும்பல் கும்பலாய் வயிற்று போக்கும், காய்ச்சலுமாய் இறப்பை நோக்கி செல்ல வேண்டியது தான். அழுகி நாறி இருந்தாலும், தங்களுக்கு வசதிப்பட்ட என்றாவது ஒரு நாளில் மொத்தமாய் குப்பை அள்ளுவது போல தள்ளுவண்டியில் ஏற்றி வந்து ஒரே பெரிய குழியாய் வெட்டி மொத்தமாய் போட்டு புதைத்து விடுவார்களாம்.
எண்ணிக்கை மிக அதிகமாக இருந்தால்அந்த கொட்டகையோடு கொளுத்திவிடவும் செய்வார்கள் போல. குற்றுயிரும் குலையுயிருமாய் கிடப்பவர்களுக்கும் மொத்தமாய் மோட்சம். மறுபடியும் ஒர் கொட்டகை முளைக்கும். இதில் எல்லாம் தவறி பிழைத்தவர்கள் அவ்வப்போது போர்விமானங்கள் போட்ட குண்டுகளில் மடிந்தார்கள். எந்தப் பக்கம் திரும்பினாலும் அவர்களுக்கு மரணம் காத்திருந்தது. அப்படிப்பட்ட காலகட்டத்திலும், இரண்டு பெரிய குன்றுகளை குடைந்து, இரும்புப் பாதை அமைக்க உதவிய நம் மக்கள், ஆற்றுப் பாலத்திற்கும் மலைக்கும் நடுவில், தூண்கள் கட்ட முடியாமல், ராட்சத சங்கிலிகளால் பிணைக்கப்பட்ட தொங்கும் பாலத்திலும் தண்டவாளத்திலும் உயிரைப் பிடித்துக் கொண்டு பயணித்துள்ளனர்.இத்தனை வேதனைகளிலிருந்தும் மீண்டு வீடு திரும்பியவர்களில் சிலர், தங்கள் குடும்பம் சிதைந்ததைக் கண்டு, மறுபடியும் சயாமுக்கே சென்றிருக்கின்றனர் என்பதும் மிகுந்த வேதனைக்குரியது. இறுதியில் ரயில்பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்ட 90ஆயிரம் ஆசிய தொழிலாளர்களும், 30ஆயிரம் போர்க் கைதிகளும் இறந்து போயினர்.
இதில் குவாய் ஆற்றுப் பாலத்தில் கட்டப்பட்ட பாலம்தான் புகழ் பெற்றது. தொழிலாளிகள் சிந்திய ரத்தத்தினால் குவாய் ஆறு முழுவதும் சிவப்பாக ஓடியதாக கூறப்படுகிறது.அப்படிப்பட்ட பாலம் கடந்த 1943ம் ஆண்டு ஜூன் 27ம் நாள் குண்டு வீச்சில் முற்றிலும் சேதமடைந்தது. இறுதியில் ஜப்பானிய ராணுவம் சரணடைந்ததும் தாய்லாந்து, பர்மா எல்லையில் போடப்பட்டிருந்த 4 கி.மீ. நீளத்திற்கான தண்டவாளத்தை பிரிட்டன் ராணுவம் பெயர்த்தெடுத்தது. அதன் பின்னர் சயாம் மரண ரயில்பாதை கட்டுமானத்தை ஒரு போர்க்குற்றமாக உலக நாடுகள் அறிவித்தன. ஜப்பான் மீது வழக்கு தொடரப்பட்டது. அந்தக் கட்டுமானத்தின் தலைமை கண்காணிப்பாளராகப் பதவி வகித்த ஹிரோஷி ஆபே (பிவீக்ஷீஷீsலீவீ கிதீமீ) என்பவர் மீது தலையாயக் குற்றம் சுமத்தப்பட்டது. 3000 போர்க்கைதிகள் இறப்பதற்கு அவர் தான் மூலகாரணம் என்று குற்றப்பதிவுகள் எழுதப்பட்டன. போர்க்குற்றங்கள் புரிந்ததற்காக அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. அனைத்தும் முடிந்த பின்னர் காசனாபுரி என்ற இடத்தில் உள்ள கல்லறை ஆராய்ச்சி செய்யப்பட்டது. அதில் 7 ஆயிரம் போர் கைதிகள் உடல்கள் புதைக்கப்பட்டிருந்தன. இவையெல்லாம் ஆதாரங்களாகப் பதிவு செய்யப்பட்டன. ஆனால் ஆயிரக்கணக்கான தமிழர்களின் உயிர்… வழக்கம் போல் என்ன ஆனது என்றே தெரியவில்லை.

1 கருத்து:

  1. நாடோடிகள் கலைக்குழு பெயரில் “சயாம் பர்மா மரணரயில் பாதை” என்ற ஆவணப்படம் தயாரித்துள்ளோம். கடந்த பத்தாண்டுகளாக மேற்கொண்ட ஆய்வின் ஒரு சோகம் தோய்ந்த கலை வடிவம் தான் “சயாம் பர்மா மரணரயில் பாதை (PG)” ஆவணப்படம்.

    Facebook : https://www.facebook.com/Nadodigalcreations
    IMDB : http://www.imdb.com/title/tt3883834/

    ஆவணப்படம் பற்றிய சில தகவல்கள் :

    தமிழுலகம் அதிகம் அறிந்திடாத ஒரு துயரம் சயாம்(தாய்லாந்து) – பர்மா மரணரயில் பாதை. சிங்கப்பூர் – மலாயாவை இரண்டாம் உலகப்போர் நேரத்தில் கைப்பற்றிய ஜப்பானிய இராணுவம், அங்கிருந்து இந்தியாவுக்குள் நுழைவதற்காக மிக நீண்ட ரயில்பாதை ஒன்றை அமைத்தது. அதை அமைக்கும் பணியில் 30,000 பிரிட்டீஷ் – ஆஸ்திரேலியப் போர்க்கைதிகளோடு, ஒன்றரை இலட்சம் (மலாயாவின் ரப்பர்த்தோட்டத் தொழிலாளர்கள்) தமிழர்களையும், 50,000 பர்மியர்கள், சீனர்கள், இந்தொனேசியர்கள் மற்றும் மலாய் இனத்தவர்களையும் கொண்டு சென்றது.

    ஒரே நாளில் சயாம் மற்றும் பர்மா ஆகிய இருமுனைகளில் தொடங்கப்பட்ட இந்த இரயில்பாதை என்னும் துயரக்கதையின் பக்கங்கள் கனமானவை. ஏறத்தாழ 72 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த இக்கொடியச்சம்பவத்தில் 80,000 தமிழர்கள் உள்ளிட்ட 1,50,000 ஆசியத்தொழிலாளர்கள் தம் இன்னுயிரைத் தியாகம் செய்துள்ளனர். கண்ணீரைப் பெருக வைக்கும் இச்சம்பவம் குறித்து 64 நிமிடங்கள் கொண்ட ஒரு ஆவணப்படம் தமிழிலும் ஆங்கிலத்திலும் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது.

    மரணரயில்பாதையில் பணியாற்றி உயிருடன் மீண்டு, இன்று தங்களது வாழ்நாளின் இறுதிக்கணங்களை எண்ணிக் கொண்டிருக்கும் முதியவர்கள் பலர் அந்த நினைவலைகளை இப்படத்தில் பகிர்ந்துள்ளனர். மனித உரிமைகள் பற்றிக் கவலைப்படும் எவரின் உள்ளத்திலும் ஆழமான காயங்களை உருவாக்கும் பல சம்பவங்களை அவர்கள் பகிர்ந்துள்ளனர். மேலும் பல்வேறு வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த வரலாற்றுப் பேராசிரியர்கள், ஆய்வாளர்களும் பங்கேற்க உரிய ஆவணங்கள்/ஆதாரங்களோடு இப்படம் நிறைவடந்துள்ளது.

    பர்மா, தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் இந்தியா ஆகிய 5 நாடுகளில் படப்பதிவு செய்யப்பட்டுள்ள இந்த ஆவணப்படம் இந்த இரயில்பாதையில் தம் அரிய பிறவியைத் தியாகம் செய்த இலட்சக்கணக்கான ஆசியத்தொழிலாளர்களுக்குச் செலுத்தும் அஞ்சலியாகவே அமைந்துள்ளது. இப்படத்திற்கான ஆதாரங்கள்/தகவல்கள் ஆகியவை கனடா, ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, இங்கிலாந்து ஆகிய நாடுகளின் ஆவணக்காப்பகங்கள் மற்றும் நூலகங்களில் இருந்து பெறப்பட்டுள்ளன.

    இப்பணியில் இறந்த (இழப்பீடு உள்ளிட்டச் சலுகைகளைப் பெற்ற) பிரிட்டீஷ்-டச்சு-அமெரிக்காவைச் சேர்ந்த 16000 வீரர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 25 ஆம் நாள் ANZAC DAY என்ற பெயரில் நினைவுத்தினங்கள் உலகம் முழுக்க அனுசரிக்கப்படுகின்றன. 1,50,000 ஆசியத்தொழிலாளர்கள் பற்றி எவரும் கவலை கொண்டதில்லை.

    SIAM BURMA DEATH RAILWAY (Buried tears of asian labourers) என்னும் தலைப்பில் ஆங்கிலத்திலும் சயாம்-பர்மா மரணரயில் பாதை (எழுதப்படாத ஆசியத் தமிழர்களின் கண்ணீர்க் கதை) என்ற தலைப்பிலும் உருவாக்கப்பட்டுள்ளது.

    நன்றி.

    இப்படிக்கு,
    ராஜ்சங்கர்

    பதிலளிநீக்கு