சனி, 10 ஆகஸ்ட், 2013

அகவை அறுபதில் தடுமாறக்கூடாது!

60 வயதில் தடுமாறக்கூடாது!

வயது முதிர்ந்தவர்கள் லேசாக தடுமாறி கீழே விழுந்தாலே, எலும்பு முறிவு ஏற்படுவதை தடுக்கும் வழிமுறைகளை கூறும், மருத்துவர் நடராசன்: நான், முதியவர்களுக்கான மருத்துவ நிபுணராக இருக்கிறேன். 60 வயதை கடந்தாலே, பெண்களுக்கு வரக்கூடிய நோய்களில் முக்கியமானது, எலும்பு பலவீனமடைதல் ஆகும். இதனால், உடனே எழுந்து அமர முடியாது. தடுமாறி கீழே விழுந்தாலே, எலும்பு முறிவு அல்லது எதிர்பாராத மரணம் ஏற்படுகிறது. உடலில், "ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்' சுரப்பு குறைவதாலும், வைட்டமின்-டி மற்றும் கால்சியம் குறைபாட்டாலும், எலும்புகள் பலவீனம் ஆவதே இதற்கு காரணம். உடலுக்கு, தேவையான கால்சியம் கிடைக்காத போது, எலும்புகளில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் கால்சியம் எடுக்கப்படுவதால், எலும்புகளை நொறுங்க வைக்கும், "ஆஸ்டியோ போராசிஸ்' பிரச்னை ஏற்படுகிறது. ஆண்களை விட பெண்களுக்கு தான், கால்சியம் மற்றும் வைட்டமின் - டி சத்து, வேகமாக கரைகிறது. இதனால், பெண்களுக்கு இடுப்பு எலும்பு முறிவது அதிகமாகிறது. எலும்பு முறிவு பிரச்னைக்கு தீர்வு காண ஒரே வழி, தினசரி உணவில் பால், தயிரை சேர்ப்பதுடன், மருத்துவரின் ஆலோசனைக்கு ஏற்ப, கால்சியம் மாத்திரைகளை சாப்பிடலாம். வைட்டமின்-டி கிடைக்க, தினமும் அரை மணி நேரம் காலை நேர வெயிலில் நடப்பதுடன், சின்ன சின்ன உடற்பயிற்சிகள் செய்தால், எலும்புகள் பலப்படும். வெளிச்சம் மங்கிய நேரத்தில் மேடு, பள்ளம் உள்ள இடங்களில் நடப்பதை தவிர்ப்பது; வழவழப்பான தரையில், "கிரிப்'பான செருப்பு அணிவது; ஈரம் நிறைந்த பாத்ரூம் போன்ற இடங்களில், பக்கவாட்டு கைப்பிடிகள் அல்லது கைத்தடிகளை பயன்படுத்துவதை கடைபிடிக்கலாம். வயது முதிர்ந்தவர்கள், இதை கடைபிடித்து வந்தாலே, கால் தடுக்கி கீழே விழுந்து எலும்பு முறிவு ஏற்படுவதை, முன்னரே தடுக்கலாம். முடிந்த வரை, கால்சியம் மற்றும் வைட்டமின்-டி சத்துக்களை அதிகம் சாப்பிட்டு, எலும்புகளை வலுவாக்கினாலே, எந்த பிரச்னையும் இன்றி நீண்ட நாட்கள் வாழலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக