ஞாயிறு, 15 செப்டம்பர், 2013

சேது சமுத்திர திட்டம் : மத்திய அரசு உறுதிசேது சமுத்திர திட்டம் :  மத்திய அரசு உறுதி

பச்சோரி கமிட்டி அறிக்கையையும், தமிழக அரசின் கோரிக்கையையும், நிராகரிக்கிறோம். தமிழகத்தின் தென் மாவட்டங்களில் வளர்ச்சி ஏற்படும் என்பதால், சேது சமுத்திர திட்டத்தை அமல்படுத்துவதில் உறுதியாக இருக்கிறோம்' என, சுப்ரீம் கோர்ட்டில், மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
ரூ.2,100 கோடி "அவுட்!' :

சேது சமுத்திர திட்டம் தொடர்பான வழக்கு, சுப்ரீம் கோர்ட்டின் விசாரணையில் உள்ளது. இந்நிலையில், இரு நாட்களுக்கு முன், மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில், மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. கப்பல் துறை இணை செயலர், ஜவ்கரி கையெழுத்திட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ள, அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த, 2005ல், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதலாவது ஆட்சியின் போது, சேது சமுத்திர திட்டம் துவக்கப்பட்டது. 2,100 கோடி ரூபாய் செலவாகும் என, மதிப்பிடப்பட்டு, இந்தத் திட்டம் துவக்கப்பட்டது.நாட்டின் மேற்குப் பகுதியிலிருந்து வரும் கப்பல்கள், இலங்கையைச் சுற்றி வராமல், நேரடியாக தூத்துக்குடி துறைமுகத்துக்கு வர வேண்டும் என்பதற்காகவே, இந்தத் திட்டம் துவக்கப்பட்டது.திட்டப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட பின், சிலர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். சேது சமுத்திர திட்டம் செயல்படுத்தப்பட்டால், ராமர் பாலம் இடிபடும் என, காரணம் கூறினர்.

கிடப்பில் போடப்பட்ட திட்டம்:

இதை விசாரித்த, அப்போதைய சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான, "பெஞ்ச்' பொதுமக்களின், மத உணர்வுகளை காயப்படுத்தாத வகையில், இந்த திட்டத்தை நிறைவேற்ற முடியுமா என, கேள்வி எழுப்பியது. இந்த அறிவுரையை தீவிரமாக பரிசீலித்து, மாற்றுப் பாதையில், சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற, மத்திய அரசு முடிவெடுத்தது.அதன்படி, 4ஏ என்ற பாதையை தேர்வு செய்து, அந்தப் புதிய பாதை வழியாக, சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றலாம் என, தீர்மானித்தது. இதையடுத்து, அந்த புதிய பாதையில், சுற்றுச்சூழல் குறித்து ஆராய்ந்து, அறிக்கை அளிக்கும்படி, பிரபல நிபுணர் பச்சோரி தலைமையில், கமிட்டி அமைக்கப்பட்டது. 2007ல் அமைக்கப்பட்ட கமிட்டி, பல்வேறு ஆய்வுகளுக்கு பின், 2013ல் அறிக்கை சமர்ப்பித்தது. அதில், சேது சமுத்திர திட்டத்தால், பயன் ஏதும் இல்லை என, குறிப்பிட்டுள்ளது.இருப்பினும், இந்த திட்டத்திற்காக, 2007ம் ஆண்டு வரை, 767 கோடி ரூபாயை, மத்திய அரசு செலவிட்டுள்ளது. வழக்கு காரணமாக, அப்படியே பணிகள் நிலுவையில் உள்ளன. சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற, மத்திய அரசு உறுதியாக உள்ளது. திட்டத்தை நிறைவேற்றினால், தமிழகத்தின் தென் மாவட்டங்கள், பெரிய அளவில், பொருளாதார ரீதியில் பயன் அடையும்.பொதுமக்கள் மத்தியிலும், இந்த திட்டத்திற்கு பெரிய அளவில் வரவேற்பு உள்ளது. பச்சோரி கமிட்டி அறிக்கையில் கூறப்பட்டுள்ள கருத்துகள் எல்லாமே, முன்னுக்கு பின் முரணாக உள்ளன.

ஆதாரமே இல்லை:

தவிர, ராமர் பாலத்தை தேசிய கலாசார சின்னமாக அறிவிக்க வேண்டும் என்ற யோசனையையும், ஏற்க முடியாது. காரணம், ராமர் பாலம் இருந்ததற்கான, எந்தவித ஆதாரத்தையும், இந்திய தொல்பொருள் ஆராய்ச்சித் துறை, இதுவரை கண்டுபிடிக்கவில்லை.பச்சோரி கமிட்டி அறிக்கை மற்றும் தமிழக அரசின் யோசனை ஆகியவற்றை, மத்திய அரசு நிராகரிக்கும் முடிவில் உள்ளது. எனவே, சேது சமுத்திர திட்டப் பணிகளை, மீண்டும் துவக்க வேண்டுமென்பதில், மத்திய அரசு உறுதியாக உள்ளது.இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

-   தில்லிச் செய்தியாளர் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக