வியாழன், 19 செப்டம்பர், 2013

மூளைச்சாவு - ஏழுபேருக்கு உறுப்புகள் தானம்

http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_807024.jpg

மதுரையில் மூளைச்சாவில் இறந்தவரிடம் இருந்து ஏழுபேருக்கு உறுப்புகள் தானம்
மதுரை: மதுரை அண்ணாநகர் தொழிலதிபர் மீனாட்சிசுந்தரம், 49, மூளைச்சாவில் மரணம்அடைந்ததால், அவரது உறுப்புகள் ஏழு பேருக்கு தானம் செய்யப்பட்டன. மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை தலைமை சிறுநீரகவியல் நிபுணர் சம்பத், டாக்டர் முரளி கூறியதாவது: மீனாட்சிசுந்தரம் தொழில் ரீதியாக புதுக்கோட்டை சென்றபோது, பஸ்சில் இருந்து இறங்குகையில் மயங்கி விழுந்தார். அங்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, பின் திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நிலைமை மோசமானதால், மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது.இவரின் உடலில் இருந்து உறுப்புகள் தானம் செய்யலாம், என அறிந்த உறவினர்கள், தானாக முன்வந்தனர். நோயாளிக்கு செயற்கை முறையில் சுவாசத்திற்காக "வென்டிலேட்டர்' பொருத்தப்பட்டது. நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் செல்வமுத்துக்குமரன் தலைமையில், தலையில் "சிடி' ஸ்கேன் செய்யப்பட்டது. மூளை நிரந்தரமாக செயலிழந்து விட்டதை, டாக்டர்கள் உறுதிசெய்தனர். உடலின் மற்ற பாகங்கள் நன்றாக இயங்கின. உறுப்பு தானத்திற்கு உறவினர்கள் சம்மதித்ததால், தமிழக அரசிடம் இருந்து அனுமதி பெற்றோம்.சென்னை அப்போலோ மருத்துவமனை ஈரல் மாற்று அறுவை சிகிச்சை
நிபுணர் கர்க்கார் மற்றும் மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவமனை நிபுணர்கள் 20 பேர் அடங்கிய குழுவினர், உடல்உறுப்புகளை எடுக்கும் பணியில் ஈடுபட்டனர். அவரது ஈரல் சென்னை அப்போலோவுக்கும், இருதயம் மெட்ராஸ் மிஷனுக்கும், சிறுநீரகங்கள் மீனாட்சி மிஷன், திருச்சி காவேரி மெடிக்கல் சென்டருக்கும் அனுப்பப்பட்டன. கண்கள், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது, என்றனர்.

உறவினர்கள் சம்மதம் போதும்: உடல் உறுப்பு தானம் செய்ய விரும்புவோர், உயிருடன் இருக்கும் போது, அதற்கான படிவத்தில் கையெழுத்திட வேண்டும். உடல் தானம் செய்யாமல் ஒருவர் இறந்து விட்டால்,
உறவினர்கள் அனுமதித்தால் கூட, உடலைப் பெற முடியாது. அதே நேரம் மூளைச்சாவு ஏற்பட்ட நோயாளியின் உடலில் இருந்து உறுப்புகளை தானமாக பெற, நோயாளியின் உறவினர்கள் சம்மதித்தால் போதும். மூளைச்சாவு நோயாளிக்கு செயற்கை சுவாசத்தை நிறுத்தி விட்டால், மற்ற பாகங்களின் இயக்கமும், இருதயத்தின் இயக்கமும் நின்று விடும். இதை உறவினர்கள் புரிந்து கொண்டால், பிறருக்கு பயன்படும் உடல் உறுப்புகள், வீணாக மண்ணில் புதையாது. இதன் மூலம் எத்தனையோ பேர் உயிர்வாழ முடியும்.

ஹிதயேந்திரன் நினைவு வந்தது : மீனாட்சிசுந்தரம் மகன் ராஜவிக்னேஷ், 27, கூறியதாவது: அப்பாவால் இனி உயிர்வாழ முடியாது என்ற போது, சென்னையில் விபத்தில் இறந்த 16வயது மாணவன் ஹிதயேந்திரன் நினைவுதான் வந்தது. அப்பாவின் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தோம். அப்பா இருந்த போது,
எங்களின் ஒரு குடும்பத்திற்கு வாழ்வு தந்தார். இப்போது, இறந்து நான்கு பேரின் குடும்பத்திற்கு வாழ்வு தருகிறார் என்றால், அதை விட வேறென்ன பெருமை இருக்க முடியும், என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக