புதன், 18 செப்டம்பர், 2013

உச்ச நீதிமன்ற நீதிபதியாக சி.நாகப்பன் நியமனம்

உச்ச நீதிமன்ற நீதிபதியாக சி.நாகப்பன் நியமனம்

Comment   ·   print   ·   T+  
உச்ச நீதிமன்ற நீதிபதியாக ச் சி.நாகப்பன் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றிய இவர், கடந்த பிப்ரவரி மாதம் ஒடிசா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், அவர் தற்போது உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி திங்கள்கிழமை பிறப்பித்துள்ளார். இம்மாதம் 19-ம் தேதி அவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்பார் எனத் தெரிகிறது.
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக தமிழ்நாட்டைச் சேர்ந்த பி.சதாசிவம் தற்போது உள்ளார். அதேபோல் நீதிபதி இப்ராஹிம் கலிஃபுல்லா உச்ச நீதிமன்ற நீதிபதியாக உள்ளார். இந்நிலையில் தற்போது சி.நாகப்பன் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளதன் மூலம், உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நீதிபதிகளின் எண்ணிக்கை 3 ஆக உயர்கிறது.
வாழ்க்கைக் குறிப்பு:
தொழிலதிபர் மறைந்த வி.என்.சொக்கலிங்கம் – வைரம் தம்பதியினரின் மகனாக 4.10.1951 அன்று கரூரில் நாகப்பன் பிறந்தார். கரூரில் பள்ளிப் படிப்பை முடித்த நாகப்பன், திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் பி.யு.சி.யும், மதுரை மதுரா கல்லூரியில் பி.எஸ்.சி. வேதியியல் படிப்பையும் முடித்தார். சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்ற அவர், 1974-ம் ஆண்டு பல்கலைக்கழக இறுதித் தேர்வில் மூன்றாமிடம் பெற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் எம்.எல். கிரிமினல் சட்டப் படிப்பில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் வென்றார்.
இந்திய அரசின் முன்னாள் அட்டர்னி ஜெனரல் கே.பராசரனின் ஜூனியர் வழக்குரைஞராக சேர்ந்த சி.நாகப்பன், சென்னை சட்டக் கல்லூரியில் பகுதி நேர பேராசிரியராக 7 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.
கடந்த 1987-ம் ஆண்டு மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதியாக தேர்வு செய்யப்பட்ட சி.நாகப்பன், பல்வேறு மாவட்டங்களில் நீதிபதியாகப் பணியாற்றியுள்ளார். கடந்த 27.9.2000 அன்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட அவர், இந்த ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி ஒடிசா மாநில உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். இந்நிலையில் அவர் தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது உள்பட முக்கியமான வழக்குகளில் நீதிபதி நாகப்பன் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக