சனி, 21 செப்டம்பர், 2013

பாடத்தைப் பாடலாக்கிய ஆசிரியர்!

பாடத்தை ப் பாடலாக்கிய ஆசிரியர்!

நாட்டுப்புற பாடல் மூலம் கணித சூத்திரம், வேதியியல் சமன்பாடு மற்றும் தனிமங்களை, மாணவர்களுக்கு எளிதில் புரிய வைக்கும்,
ஆசிரியர் தவமணி: நான், கொட்டாம்பட்டி அருகில் உள்ள, நாகப்பன் செவல்பட்டி கிராமத்தை சேர்ந்தவன். எங்கள் ஊரில், பேருந்து வசதி இல்லாததால், தினமும், 8 கி.மீ., தூரம் நடந்தே, அரசு பள்ளிக்கு செல்வேன். இதனால், நாட்டுப்புற பாடல் பாடிக் கொண்டே, பள்ளிக்கு செல்லும் பழக்கம், சிறுவயதிலேயே ஏற்பட்டது. ஆசிரியர் பணியின் மீதான ஆர்வத்தால், 1989ல் பி.எட்., படித்தாலும், ஏனோ ஆசிரியர் வேலை கிடைக்கவில்லை. நாட்டுப்புற பாடல்களை நன்கு பாடும் திறமை இருந்ததால், நண்பர்கள் வலியுறுத்தலின்படி, அகில இந்திய வானொலியில், நாட்டுப்புறப் பாடல்களை பாடி வந்தேன். கடந்த, 1996ல், என் விருப்பப்படியே, ஆசிரியர் பணி கிடைத்தது. அறிவியல் மற்றும் கணித பாடங்களை படிக்க, கிராமத்து மாணவர்கள் படாத பாடு பட்டனர். சிலர், இதற்காகவே பள்ளிப் படிப்பை, பாதியிலேயே கைவிட்ட செய்தியையும் அறிந்தேன். அதனால், கணித சூத்திரம், வேதியியல் சமன்பாடு மற்றும் தனிம அட்டவணைகளை, நாட்டுப்புற பாடல் வடிவில் மாற்றியமைத்து, மாணவர்களை பாட வைத்தேன். நாட்கள் செல்ல செல்ல, என் முயற்சிக்கு பலன் கிடைக்க ஆரம்பித்தது. மாணவர்கள் ஆர்வத்துடன் கற்று, 100 சதவீத தேர்ச்சி பெற்றனர். சுனாமி பாதித்த அதிர்ச்சியிலிருந்து மீளாத, நாகப்பட்டினம் கடற்கரையோர மாணவர்கள், பள்ளிக்கு செல்லவே ஆர்வமின்றி, மன உளைச்சலுடன் இருந்தனர். 2005ல் அங்கு சென்று, நாட்டுப்புற பாடல் வழியாக பாடம் நடத்தினேன். இதையறிந்து, மற்ற குழந்தைகளும் மீண்டும் பள்ளிக்கு வர ஆரம்பித்தனர். பழையபடி கல்வியில் கவனம் செலுத்தியது, மனதிற்கு மகிழ்ச்சியாக அமைந்தது. கிராமப்புற பெற்றோருக்கு, போதுமான படிப்பறிவு இல்லாததால், தங்கள் குழந்தைகளையும் படிக்க விடுவதில்லை. எனவே, கிராமப்புற பகுதிகளுக்கு சென்று, நாட்டுப்புற பாடல்கள் வழியாக, அறிவொளி இயக்கம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக