தமிழ்க் கலைஞர்களின் குரல் ஒலிக்க தனி அமைப்புகள்: பாரதிராசா
தென்னிந்தியத் திரை அமைப்புகளைப் போன்று, தமிழ்த்
திரைப்பட அமைப்புகள் தனியாக உருவாக வேண்டும் என கேட்டுக் கொண்டார்
இயக்குநர் பாரதிராஜா.
டிரீம் தியேட்டர் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் சேரன் எழுதி,
இயக்கியுள்ள "ஜே கே எனும் நண்பனின் வாழ்க்கை' திரைப்படத்தின் பாடல்
வெளியீட்டு விழா சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இயக்குநர்கள்
பாரதிராஜா, பாலுமகேந்திரா முன்னிலையில் நடிகர் சூர்யா ஒலிப்பேழையை வெளியிட
இயக்குநர் ஷங்கர் பெற்றுக் கொண்டார்.
விழாவில் இயக்குநர் பாரதிராஜா பேசியது:
தமிழ்த் திரையில் இப்போது வித்தியாசமான கதைக் களங்கள் வருகின்றன.
வித்தியாசமான சிந்தனைகள் வெளிப்பட்டு வருகின்றன. இளம் இயக்குநர்கள்
ஆச்சரியப்படுத்துகிறார்கள். ஆனால் அவர்கள் யாரும் பழைய பாதையை மறந்து விடக்
கூடாது.
ஒற்றையடி பாதையிலிருந்து வண்டிப் பாதை உருவாகி இப்போது வேறு பாதையில்
பயணித்துக் கொண்டிருக்கிறோம். பயணங்களில் மாற்றங்கள் வரலாம். ஆனால்
பாதையில் மாற்றங்கள் வந்து விடக் கூடாது. பயணம் எது மாதிரியாக இருந்தாலும்,
அடிப்படையில் மண் வாசனையை எடுத்து வைக்க வேண்டும்.இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிற இந்த வேளையில் எனக்கு ஒரு மனக்குறை உண்டு. தமிழக அரசின் துணையுடன் தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபை ஏற்பாடு செய்துள்ள இந்த விழாவில், நம் குரல் ஒலிக்கவில்லை என்பதே அந்தக் குறை. ""தெலங்கானா பிரச்னையில் நாங்கள் கவலை அடைந்துள்ளதால் நூற்றாண்டு விழாவில் நடக்க இருக்கும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாட்டோம்'' என்று தெலுங்கு சினிமா கலைஞர்கள் தங்களது கருத்தைப் பதிவு செய்திருக்கிறார்கள். ஆனால் அது மாதிரியான ஒரு முடிவை எடுக்க தமிழ்க் கலைஞர்களால் முடியுமா என்று தெரியவில்லை.
ஈழத்தில் தொப்புள் கொடிகளை இழந்து இருக்கிறோம். காவிரிப் பிரச்னையில் இன்னும் நியாயம் கிடைக்கவில்லை. முல்லை பெரியாறு பிரச்னையில் இன்னும் மூழ்கி கொண்டிருக்கிறோம். கச்சத்தீவை தேடிக் கொண்டிருக்கிறோம். தமிழ் மீனவர்கள் தினந்தோறும் சுடப்பட்டு சிறை பிடிக்கப்படுகிறார்கள்.
தமிழர்களுக்கு பிரச்னை இல்லையா? இந்த நேரத்தில் நாங்களும் கவலையில் இருக்கிறோம். அதனால் இந்த விழாவில் எங்களால் பங்கேற்க முடியாது என்று நம்மால் சொல்ல முடியுமா?
தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தென்னிந்திய நடிகர் சங்கம், பெப்சி அமைப்பு என்று தென்னிந்தியாவுக்குத் திரை அமைப்புகள் இருப்பது போல், தமிழ்த் திரைப்பட அமைப்புகள் தனியாக உருவாக வேண்டும். அப்போதுதான் நம் குரல் ஒலிக்கும். இது குறுகிய வட்டமல்ல.
தமிழ்த் திரை கலைஞர்களுக்குள் ஒற்றுமை இல்லை. கலைஞர்களிடம் இருந்த எதிர்ப்புணர்ச்சி குறைந்து விட்டது.
எதிர்ப்புணர்ச்சி இல்லாமல் போனால் இனம், மொழி, கலை இல்லாமல் போய் விடும். எதிர்ப்புணர்ச்சியுடன் தமிழ்க் கலைஞர்கள் ஒன்றுபட வேண்டும் என்றார் இயக்குநர் பாரதிராஜா.
விழாவில், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார், நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், பெப்ஸி அமைப்பின் தலைவர் அமீர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தன்னுடைய மகள்கள் தாமினி, நிவேதா ஆகியோருடன் சேரன் பங்கேற்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக