செவ்வாய், 17 செப்டம்பர், 2013

வழிகாட்டும் தமிழ்ப் பள்ளி!


வழிகாட்டும் தமிழ்ப் பள்ளி!

குடிசை ப் பகுதி மாணவர்களுக்கு, பள்ளிக் கல்வியுடன், நீதி போதனைகள் மூலம், நல்லொழுக்கத்தை கற்று தரும், முத்துகிருட்டிணன்: நான், காரைக்காலை சேர்ந்த வழக்கறிஞர். மனைவி, மருத்துவராக பணியாற்றுகிறார். குடிசைகள் நிறைந்த, படிப்பறிவில்லாத, பின்தங்கிய மக்கள் வாழும் பகுதியில், வசித்து வந்தேன். வறுமையால், அவர்கள், குழந்தைகளை படிக்க வைக்கவில்லை. அதனால், பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு, அக்குழந்தைகளின் எதிர் காலமே, பாழானதை கண்டேன். எனவே, இக்குழந்தைகளுக்கு பள்ளி கல்வியுடன், அறநெறி மற்றும் நல்லொழுக்கத்தை கற்று தந்தால், நலமாக இருக்கும் என, எண்ணினேன். அதனால், நண்பர் மருதமுத்துவுடன் இணைந்து, 1995ல், திருவள்ளுவர் தமிழ் உயர்நிலை பள்ளியை, 22 குழந்தைகளுடன் ஆரம்பித்தேன். தற்போது, 250 பேர் படிக்கின்றனர். ஆங்கிலவழி கல்வி தான் சிறந்தது என, இச்சமூகம் தவறாக நினைப்பதால், தமிழ்வழி கல்விக்கு முன்னுரிமை தந்தேன். அதனால், மாணவர்கள், தூய தமிழில் உரையாடுவதை ஊக்குவித்தாலும், ஆங்கிலத்தின் அவசியத்தை புறக்கணிப்பதில்லை. ஆங்கிலம் மற்றும் கணித பாடத்திற்காக, சிறந்த ஆசிரியர்கள் மூலம் தினமும், "ஸ்கைப்' தொழில்நுட்பம் வழியாக, பாடம் நடத்துவதால், பாடங்களை எளிதில் புரிந்து படிக்கின்றனர். பள்ளிக் கல்வியுடன் நீதி போதனை, தனித்திறன் வளர்க்கும் பயிற்சிகள், இயற்கை வேளாண்மை, கையெழுத்து பயிற்சி, உடற்கல்வி, மழைநீர் சேகரிப்பதன் அவசியம் மற்றும் தமிழர் பாரம்பரிய கலைகளான கரகம், சிலம்பம், காவடி போன்ற கலைகளையும் கற்று தருகிறோம். வாரம் ஒரு முறை, நல்ல தலைவர்களின் வாழ்க்கை வரலாறு பற்றிய, திரைப்படங்களை திரையிட்டு, நல்லெண்ணத்தை வளர்க்கிறேன். அனைத்து மாணவரும், குடிசை பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால் கல்வி, மதிய உணவு என, அனைத்தையும், இலவசமாக வழங்கிறோம். கடந்த, 10 ஆண்டுகளாக, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், 100 சதவீத தேர்ச்சியை பெற்று, சாதனை படைத்தது மகிழ்ச்சியாக உள்ளது.

2 கருத்துகள்: