செவ்வாய், 17 செப்டம்பர், 2013

செப்டம்பர்19-இல் நடிகை டி.பி.இராசலட்சுமி நூற்றாண்டு விழா: முதல்வர் உத்தரவு

செப்டம்பர்19-இல் நடிகை டி.பி.இராசலட்சுமி நூற்றாண்டு விழா: முதல்வர்  உத்தரவு

தென்னிந்தியாவின் முதல் நடிகை மற்றும் பெண் இயக்குநர் டி.பி. ராஜலட்சுமியின் நூற்றாண்டு விழாவை செப்டம்பர் 19-ஆம் தேதி தமிழக அரசின் சார்பில் நடத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் 1911-ஆம் ஆண்டு பிறந்தவர் டி.பி.ராஜலட்சுமி. தனது இளமைக்காலம் முதலே நாடக்குழுவில் நடித்து வந்த ராஜலட்சுமி, எம்.கே.தியாகராஜ பாகவதர் நடித்த "பவளக்கொடி', "கோவலன்' ஆகிய நாடகங்களில் கதாநாயகியாக நடித்து பேரும் புகழும் பெற்றார். தனது 18-ஆம் வயதில்  "கோவலன்' என்னும் திரைப்படத்தில் மாதவி வேடத்தில் நடித்ததன் மூலம் திரைத்துறையில் முதன் முதலாக கால் பதித்தார். தமிழில் வெளிவந்த முதல் பேசும் படமான "காளிதாஸ்' திரைப்படத்தில் டி.பி.ராஜலட்சுமி நடித்துள்ளார். மேலும் ராஜம் டாக்கீஸ் என்ற தனது சொந்த பட நிறுவனம் மூலம் "மிஸ் கமலா' என்ற திரைப்படத்தை தயாரித்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார்.
தன்னுடன் திரைப்படங்களில் நடித்த டி.வி.சுந்தரம் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். 20 ஆண்டுகாலம் திரைப்படத்துறையில் புகழ் பெற்று விளங்கிய இவர் 1964- ஆம் ஆண்டு காலமானார். ஒரு நடிகையாக மட்டுமின்றி இயக்குநர், எழுத்தாளர் உள்ளிட்ட பல்வேறு பெருமைகளுக்குச் சொந்தக்காரராக விளங்கும் டி.பி.ராஜலட்சுமிக்கு செப்டம்பர் 19-ஆம் தேதி நூற்றாண்டு விழா நடத்த தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக