திங்கள், 16 செப்டம்பர், 2013

சுடுமண் சிற்பக்கலை: கலைப்பேழைகள்!

சுடுமண் சிற்பக்கலை: காப்பாற்றப்பட வேண்டிய கலைப்பேழைகள்!

Comment   ·   print   ·   T+  
தமிழர்களின் மரபுக்கலைகளில் பல கலைகள் இன்று மறைந்து வருகின்றன. சில கலைகள் முற்றிலும் வேறு வடிவம் கொள்கின்றன. கிராமக்கோயில்களில் கடவுளர் உருவங்களும் கடவுள்களின் வாகனங்களும் பல ஆண்டுகளுக்கு முன் சுடுமண் சிற்பங்களால் வடிவமைக்கப்பட்டன. இன்று களிமண்ணின் இடத்தை சிமென்ட் பிடித்துக்கொண்டது. ஆம், எல்லா கிராமக்கோயில்களிலும் இன்று சிமென்ட் சிலைகள் நிறுவப்படுகின்றன. இந்த மாற்றம் சுடுமண் சிற்பக்கலையை முற்றிலும் அழித்துவிட்டது. பழமையான ஒன்றிரெண்டு கோயில்களில் மட்டுமே சுடுமண் சிற்பங்கள் பராமரிப்பின்றி அழிந்து வரும் நிலையில் உள்ளன. இது தமிழகத்தின் பெரும்பானமை மாவட்டங்களில் நிலவி வரும் உண்மை.
அப்படி ஒரு பழமையான சுடுமண்சிற்பம் கடலூர் மாவட்டத்தில் காட்சிப்பொருளாக உள்ளது. அனேகமாக ஆசியாவின் பெரிய சுடுமண் சிற்பம் இதுவாக இருக்கலாம் என்று கலை இலக்கிய விமர்சகர் இந்திரன் கூறுகிறார். வாருங்கள் அந்த சிற்பத்தைப் பார்த்துவரலாம்.
பண்ருட்டியிலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் உளுந்தூர்பேட்டை செல்லும் வழியில் அமைந்துள்ளது சேமக்கோட்டை எனும் சிற்றூர். ஊருக்கு மேற்கே சாலையின் தென்புறம் ஒரு அய்யனார் கோயில் உள்ளது. அக்கோயிலின் தென்புறம் பாழடைந்த நிலையில் இரண்டு குதிரை, ஒரு யானை சிலைகள் உள்ளன. அவை மிகவும் பழசு என்பதனால், அதை அப்படியே விட்டுவிட்டு கோயிலின் முன்பு புதிதாக சிமிட்டியினால் குதிரை சிலை செய்து அதற்கு வண்ணமடித்து பராமரித்து வருகின்றனர் அவ்வூர் மக்கள். அந்தப் பழைய சிலைகளுக்கு அருகில்தான் மக்கள் காலைக்கடன்களைக் கழித்து வருகின்றனர், ஆடு மாடுகளை மேய்ப்பதும் அங்குதான். அச்சிலைகளின் அருமையை உணாராத அம்மக்கள் அவற்றைக் கண்டுகொள்வதில்லை.
அவை மூன்று தலைமுறைகளுக்கு முன்பு செய்யப்பட்டவை என்பதை மட்டும் தெரிந்து வைத்திருக்கின்றனர்.
நேரில் பார்த்த பிறகுதான் நம் முன்னோர்கள் சுடுமண் சிற்பக்கலையில் எவ்வளவு வல்லவர்களாக இருந்துள்ளனர் என்பதை உணரமுடிந்தது. அதற்கான இலக்கியச்சான்றுகளும் நம்மிடம் இருக்கின்றன.
மண்ணினும் கல்லினும் மரத்தினும் சுவரினும்
கண்ணிய தெய்வதம் காட்டுநர் வகுக்க. (மணிமேகலை 21:125-6)
நுண்மா ணுழைபுல மில்லா னெழினலம்
மண்மாண் புனைபாவை யற்று (திருக்குறள் - 407)
சுடுமணோங்கிய நெடுநகர் வரைப்பின்... (பெரும்பாணாற்றுப்படை - 405)
இந்தப் பாடல்கள் மூலம் தமிழர்களிடையே மண், சுடுமண் சிற்பங்கள் செய்யும் வழக்கமிருந்ததை அறிய முடிகிறது. இச்சிற்பங்களில் பல சிறப்பம்சங்களையும், நுட்பமான வேலைப்பாடுகளையும் சற்று உற்று நோக்கினால் கண்டுகொள்ளலாம். இவ்வளவு பெரிய சிற்பங்களைச் சுடுவதற்கு நம் முன்னோர்கள் கையாண்ட தொழில்நுட்பம் என்னவாக இருந்திருக்கும் என்று எண்ணிப் பார்க்கையில் வியப்புதான் மிஞ்சுகிறது.
குதிரையின் கழுத்தில் கட்டியிருக்கும் மணி, கயிறு ஆகியவற்றையெல்லாம் மிக நுட்பமாகவும், கவனமாவும் செய்துள்ள சிற்பியின் கைவண்ணம் அவரை பிறப்புக்கலைஞராகவே நமக்கு அடையாளம் காட்டுகின்றன.
யானையின் மீது அமர்ந்திருக்கும் இரு மனித உருவங்கள் கீழே தனியே செய்து ஒட்டப்பட்டதா அல்லது யானையோடு சேர்த்தே செய்யப்பட்டதா எனும் அய்யங்களைப் பார்ப்போர் மனதில் நிச்சயம் தோற்றுவிக்கும். குதிரையின் பற்கள், கடிவாளம்,சேணம் ஆகியவை துல்லியமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
இவ்வளவு சிறப்புமிக்க இச்சிற்பங்கள் நாட்டுப்புறக் கலைஞர்களால் உள்ளூர் வளங்களைப் பயன்படுத்தி மரபுவழித் தொழில்நுட்ப அறிவினால் உருவாக்கப்பட்டவை. மூன்று தலைமுறைகளுக்குப் பிறகும் முற்றிலும் சிதைந்து விடாமல் இயற்கைச்சீற்றங்களைத் தாங்கிக் கொண்டு இத்தனையாண்டுகள் நிலைத்து நிற்கின்றன.
இச்சிற்பங்களை இப்படியே விட்டுவிட்டால் இன்னும் சில ஆண்டுகளில் சிததிலமடைந்து அழிந்து போக வாய்ப்புள்ளது. பூமிக்கு அடியில் புதையுண்டுகிடக்கும் தொன்மையான நாகரிகச்சின்னங்களை தோண்டியெடுத்து பாதுகாக்கும் நம் தொல்பொருள் ஆய்வுத்துறையினர், பூமிக்குமேலே நம் கண்ணெதிரே அழிந்துகொண்டிருக்கும் இதுபோன்ற கலைப்பேழைகளையும் காப்பாற்ற வேணடும்.
கடலூர் மாவட்ட ஆட்சியர் சேமக்கோட்டைச் சிற்பங்கள் குறித்து தொல்பொருள் ஆய்வுத்துறைக்கு தெரிவித்து சிற்பங்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது ஊர்மக்களின் எதிர்பார்ப்பு. ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா? அரசு கவனிக்குமா? 

- தமிழ் இந்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக