ஞாயிறு, 15 செப்டம்பர், 2013

அ) அறிவியல்ஆர்வத்தைஏற்படுத்தினேன்! ஆ.) திருமணமானால் உரிமையரை மாற்றுங்கள்!

http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_80367220130914215016.jpg

அறிவியல்ஆர்வத்தைஏற்படுத்தினேன்!


வீணான பொருட்களை விளையாட்டு பொருட்களாக மாற்றி, குழந்தைகளிடம் அறிவியல் ஆர்வத்தை ஏற்படுத்தும், அரவிந்த் குப்தா:

என் பெற்றோர், படிப்பறிவு அற்றவர்கள். எனவே, வறுமையிலும் என்னை, ஐ.ஐ.டி., வரை படிக்க வைத்தனர். 1970ல் கான்பூர் ஐ.ஐ.டி., யில், "எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்' படித்து, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் பணியாற்றினேன். மேற்கொண்டு படிக்க, ஓராண்டு விடுமுறை எடுத்து, மத்திய பிரதேச மாநிலம் சென்றேன்.அங்கு, குழந்தைகளுக்கு அறிவியலை கற்றுத் தருவது குறித்த திட்டத்தில் பங்கேற்றேன். கிராம பள்ளிகளில், அறிவியல் சோதனையை செய்து காட்ட, உபகரணங்கள் இருக்காது. எனவே, "வேஸ்ட்' என, பலராலும் தூக்கி எறியப்படும் பழைய செய்தித் தாள், பாட்டில்கள், சைக்கிள் டியூப், மேக்னட், பென்சில், பேட்டரி, தீக்குச்சிகள் மூலம், பல அறிவியல் விளையாட்டு பொருட்களை, குழந்தைகளிடம் நேரடியாக உருவாக்கி காட்டி, அவர்களையும் உருவாக்க செய்தேன்.
இச்செய்முறை சோதனைகள் மூலம், குழந்தைகளிடம் அறிவியலை எளிதாக புரிய வைத்தேன். இப்பணியே, பிற்காலத்தில் முழு நேரமாக மாறி கடந்த, 30 ஆண்டுகளாக எவ்வித பிரதிபலனும் எதிர்பார்க்காமல், செய்து வருகிறேன். குழந்தைகளுக்காக உருவாக்கிய ஒவ்வொரு விளையாட்டிலும், ஒரு அறிவியல் கோட்பாடு இருக்கும்.இதை என், "வெப்சைட்'டிலிருந்து இலவசமாக, "டவுண்லோடு' செய்யலாம். தற்போது புனேயில் உள்ள, "இன்டர் யுனிவர்சிட்டி சென்டர் பார் அஸ்ட்ரானமி அண்ட் அஸ்ட்ரோ பிசிக்ஸ்' அமைப்பின், குழந்தைகள் அறிவியல் மையத்தில் பணியாற்றுகிறேன்.கிராமத்து குழந்தைகளிடம், அறிவியலை பிரபலப் படுத்தியதற்காக, 1988ல் தேசிய விருதும்; 2001ல் ஐ.ஐ.டி.,யின் சிறந்த முன்னாள் மாணவர் விருதும்; 2008ல் இந்தியன் நேஷனல் சயின்ஸ் அகடமியின், "இந்திரா காந்தி' விருதும் கிடைத்தது. எனினும், பரிசுக்கும், பாராட்டுக்கும் அப்பாற்பட்டு, தொடர்ந்து இச்சேவையில், ஈடுபட்டு வருகிறேன். தொடர்புக்கு:www.aravindguptatoys.com.

திருமணமானால்  உரிமையரை மாற்றுங்கள்!

முதலீடு மற்றும் இன்ஷூரன்ஸ்களில், அடுத்த உரிமையாளரை மாற்ற வேண்டியதன் அவசியத்தை கூறும், இராசன்: நான், நிதி ஆலோசகராக, சென்னையில் பணியாற்றுகிறேன். இன்றைய காலத்தில் பங்கு முதலீடு, மியூச்சுவல் பண்ட், பிராவிடெண்ட் பண்ட், வங்கி சேமிப்பு, இன்ஷூரன்ஸ் என, பல வழிகளில் பணத்தை முதலீடு செய்கிறோம். அச்சமயத்தில், நமக்கு நெருக்கமாக இருப்பவர் அல்லது பெற்றோர் பெயரை, "நாமினி'யாக நியமிக்கிறோம்.சூழ்நிலை மாறும் போது அல்லது திருமணத்திற்கு பின், நம்மையே நம்பியிருக்கும் துணைவர்களின் பெயரை, நாமினியாக மாற்ற மறந்து விடுகிறோம். குறிப்பாக, திருமணத்திற்கு முன் செய்யப்படும் முதலீடுகளில், இருபாலருமே, தம் பெற்றோரையே, நாமினி யாக நியமிப்பர்.திருமணத்திற்கு பின்னும், இதே நிலை தொடரும். அப்போது, ஏதாவது அசம்பாவிதம் நடந்தால், நாமினியாக நியமிக்கப்பட்டவரிடமே, இழப்பீடு அல்லது முதலீட்டிற்கான மொத்த தொகையும் தரப்படும். நாமினியாக உங்கள் துணைவர் இல்லாத பட்சத்தில், உங்களின் வாரிசு என்கிற தகுதி பெற்றோர், சகோதரர், சகோதரி போன்றவர்களுக்கு சட்டப்படி போய்விடும்.அச்சமயத்தில், குடும்பத்தினருக்கும், உங்கள் துணைக்கும் பிரச்னை இல்லாதிருந்தால், உங்கள் துணைக்கு பணம் கிடைக்க உதவுவர். மாறாக, இருவருக்கும் இடையே, பிரச்னை இருந்தால், உங்கள் துணைக்கு முழுப் பணமும் சென்று சேர்வதில், சிக்கல் ஏற்படும். எந்த பணமும் கிடைக்காதபட்சத்தில், நீதிமன்றத்தை நாடவேண்டியிருக்கும். எனவே, திருமணம் ஆனதும், துணையாளரை நாமினியாக நியமிக்க வேண்டும்.நாமினியை மாற்றும் நடைமுறை மிக எளிதாகவும், எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்ற தக்கதாகவுமே, மேற்கூறிய அனைத்து முதலீடுகளில் இருக்கும். நாமினி மாற்றத்திற்கு, எவ்வித கூடுதல் ஆவணமும் தேவையில்லை. விண்ணப்ப படிவத்தில் கையெழுத்திட்டாலே போதும். இதன் மூலம், பிற்காலத்தில், பணத்தை, வேறு யாரும் பெறுவது, முற்றிலும் தடுக்கப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக