வியாழன், 18 ஜூலை, 2013

புறநானூற்றில் யானை அறிவியல் : Science of Elephant in Pura Naarnuuru

புறநானூற்றில் யானை அறிவியல் : Science of Elephant in Pura Naarnuuru



புறநானூற்றில் யானை அறிவியல்
  புறநானூறு இலக்கிய நூலாக இருந்தாலும் பல்வகை அறிவியல் செய்திகளும் இடம் பெற்றுள்ள சிறந்த தொகுப்பு நூலாகும்.   புறநானூறு மக்கள் இலக்கியம். எனவே,  மக்களோடு தொடர்புடைய விலங்கினங்கள் பற்றிய குறிப்புகள் இதில் இடம் பெற்றிருப்பதில் வியப்பில்லை. அணில், ஆடு/மறி/ மடங்கல், ஆமை, உடும்பு, எருமை, எலி, எறும்பு, கழுதை, காளை/ ஏறு/ பகடு/ எருது, குதிரை/மா/ பரி/ கலிமா/ கலிமான்/ புரவி/ இவுளி/ குரங்கு/கலை/மந்தி/கடுவன், சிங்கம்/மடங்கல், நத்தை/நந்து/ நரி, நாய்/ஞமலி, நீர்நாய், பசு//ஆன்/நிரை/ கறவை, பல்லி, பன்றி/கேழல், பாம்பு/நாகம்/ அரா/அரவு, புலி/உழுவை/ ஒருத்தல்/வரிவயம், பூனை/வெருகு/ வெருக்கு, மான்/கலை/ கவரி/ பிணை/கடமான்/ மறி/ புல்வாய்/ இரலை, முதலை/கரா/கராம், முயல், முள்ளம்பன்றி/முளவு, யானை/களிறு/பிடி/ வேழம்/பகடு/கைம்மா/கைமான் எனப் பல்வகை விலங்கினங்கள் புறநானூற்றில் குறிக்கப் பெற்றுள்ளன. புறநானூற்றில் பரவலாகக் குறிக்கப்பெறும் விலங்கினம் யானை ஆகும். யானைகளை  வளர்க்கவும் போர்த்தொழிலுக்குப் பழக்கவும் யானையைக் கொண்டு மற்றொரு யானையைப் பழக்கவும் நன்கு அறிந்திருந்தனர் பழந்தமிழர்கள். உயரமாக இருத்தலால் உம்பல், கரு நிறம் என்பதால் கரி, துதிக்கையுடைய விலங்கு என்பதால் கைம்மா, பெரிய விலங்கு என்பதால்  பெருமா, கையையுடைய மலை போன்ற தோற்றத்தைக் கொண்ட விலங்கு என்பதால் கைம்மலை எனவும் மேலும் இவை போன்ற காரணப் பெயர்களும் தமிழர்களால் யானைக்குச் சூட்டப்பட்டவையாகும். இவ்வகைப்பாட்டு அறிவியலறிவு, யானை முதலான விலங்கறிவியலில் நம் தமிழ் முன்னோர் சிறப்புற்றிருந்தனர் என்பதற்கு    எடுத்துக்காட்டாகும். புறநானூற்றில்  யானைபற்றி வரும் குறிப்புகள், அவற்றின் தன்மை,   உணவுப்  பழக்கம் முதலியனவற்றை நமக்குத் தெரிவிக்கின்றன. அத்தகைய குறிப்புகளுள் சிலவற்றை நாம் பார்ப்போம்.
யானையின் தோற்றம் பற்றியன
  யானையின் கை பெரியது -  பெருங் கை யானை (இரும்பிடர்த்தலையார் : புறநானூறு 3.11)
  யானையின் கண் சிறியதாக இருக்கும் - சிறுகண் யானை (காரிகிழார்: புறநானூறு 6.13; உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் : புறநானூறு 170.10; மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார் : 316.12; மதுரை நக்கீரர் : புறநானூறு 395.18 )
  யானையின் மருப்பு ஒளிரும் வெண்மை மிக்கது - ஒளிறு மருப்பின் களிறு (நெட்டிமையார்: புறநானூறு 15.9); இலங்கு மருப்பு யானை (எருமைவெளியனார் : புறநானூறு 303.9)
  யானையின் மருப்பு நீண்டு வளைந்து இருக்கும்; யானை முகத்தில் புள்ளிகள் இருக்கும் - உயர்மருப்பு யானைப் புகர் முகத்து (மதுரைத் தமிழக்கூத்தனார் : புறநானூறு 334.8)
  யானை மருப்பு சொரசொரப்பாக இருக்கும் - பிணர் மருப்பு யானை: புறநானூறு 387.29)
  நெடியதோற்றம் கொண்டது யானை - நெடுநல் யானை (காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் : புறநானூறு 57. 11 ; பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்: புறநானூறு 72.4; இளவெளிமான்: புறநானூறு 162.6)
 மலைபோல் தோற்றமளிக்கும் பெரிய யானை  - மலை .... யானை (குறுங்கோழியூர் கிழார்: புறநானூறு 17.34-35); வரைபோல் யானை (பெருஞ்சித்திரனார்: புறநானூறு 238.9) யானையும் மலையின் தோன்றும் (இடைக்காடனார் : புறநானூறு 42.2)
யானையின் காலடி உரல் போல் இருக்கும் - கறையடி யானை  (மாறோக்கத்து நப்பசலையார் : புறநானூறு 39.1 ; (உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் : புறநானூறு 135.12)
யானையின் காலடி பரந்துபட்டிருக்கும்-பாவடியானை (வெள்ளெருக் கிலையார்: புறநானூறு 233.2)
யானையின் செவி, முறம் போல் இருக்கும் -முறஞ்செவி யானை (பாடியவர் பெயர் தெரிந்திலது: புறநானூறு 339.13)
யானையின் கை கரும்பனை போன்று பெரியதாக இருக்கும் -  இரும்பனை யன்ன பெருங்கை யானை (அள்ளூர் நன்முல்லையார்: புறநானூறு 340.7)
யானையின் நெற்றி செந்நிறமாகவும் இருக்கும் - செந்நுதல் யானை (பரணர் : புறநானூறு 348.9)
யானையின் கால்கள் பருத்து இருக்கும்-பணைத் தாள் யானை
(மதுரைப் படைமங்க மன்னியார் : புறநானூறு 351.1)
மதம் கொண்ட யானையின் அடிச்சுவடு தடாரிப்பறையின்   நடுவிலுள்ள கண்பகுதி போன்று இருக்கும்.
கடாஅ யானைக் கால்வழி யன்னவென்
தெடாரித் தெண்கண்  (கழாத் தலையார் : புறநானூறு 368.14-15)
  யானையின் கை பெரியது - கருங்கை யானை (பரணர்: புறநானூறு 369.2)
யானைச்சித்திரம்
புலவர் குறுங்கோழியூர்க்கிழார்,
தூங்கு கையான் ஓங்கு நடைய,
உறழ் மணியான் உயர் மருப்பின,
பிறை நுதலான் செறல் நோக்கின,
பா வடியால் பணை எருத்தின,
தேன் சிதைந்த வரை போல,
மிஞிறு ஆர்க்கும் கமழ்கடா அத்து,
அயறு சோரூம் இருஞ் சென்னிய,
மைந்து மலிந்த மழ களிறு
கந்து சேர்பு நிலைஇ வழங்க (புறநானூறு 22.1-9)
என  அடுத்தடுத்து யானை பற்றிய காட்சிச்சித்திரத்தை நமக்கு அளிக்கிறார்.
  இப்பாடலில், துதிக்கையை அசைத்து ஆட்டிக்கொண்டு  தலையைத் தூக்கிக் கொண்டு உயர்ந்த நடையுடன், அந்நடைக்கேற்ப அதன்மீது அணியப்பெற்றிருக்கும் இருபுற மணிகளும் மாறி மாறி  ஒலிக்க,  உயர்ந்த மருப்புகளுடன், பிறை போன்ற நெற்றியுடன், சினம் மிகு பார்வையுடன், பரந்த காலால் அடி எடுத்து வைத்து,  பருத்த கழுத்துடன் நடந்து வருகையில் மதநீர் மணத்தால்  மலைத்தேன் எனத் தேனீக்கள் ஆரவாரிக்கும்  வலிமை மிக்க இளங்களிறு, கட்டப்பட்ட கம்பத்தில் தான் நின்ற இடத்திலேயே அசை நடைபோட்டுக்கொண்டுள்ளது என யானையின் முழு உருவத்தை நமக்குப் பல வகையில் புலவர் படம் பிடித்துக்காட்டுகிறார்.
யானையின் திறம் பற்றியன
  போர்க்களத்தைத் தனதாக்கிக்கொள்ளும் திறன் மிக்கது யானை- களங்கொள் யானை (பொருந்தில் இளங்கீரனார் : புறநானூறு 53.5) 
  யானைகள் விரைவாகச் செல்லும்-கடும்பகட்டு யானை (சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்: புறநானூறு 265.8)
  போர்க்களத்தில் தடுத்தாலும் தொடர்ந்து முன்னேறும் யானை - தொடர்கொள் யானை  (ஒரூஉத்தனார் : புறநானூறு 275.7)
  போர்வினைப் பயிற்சி உடைய இனச்சிறப்பு  உடையது யானை – சினப்போர் இனக்களிற்று யானை (ஔவையார்: புறநானூறு290.1-2)
  யானை மதம் பொருந்தி இருக்கும் - களியியல் யானை (வெண்ணிக் குயத்தியார் : புறநானூறு 66.3 ; கடாஅ யானை (பரணர்: புறநானூறு 141.12 ; 142.4; கபிலர் 145.3)
யானைகள் வினைமாட்சியுடன் திகழ்கின்றன - மாண்வினை யானை (மதுரை வேளாசான்: புறநானூறு 305.6)
யானைகளுக்குப் போர்வினைப் பயிற்சி அளித்திருப்பர் - வினை நவில் யானை (கபிலர்: புறநானூறு 347.11)
யானையின் வலிமை பற்றியன
கொல்லும் வலிமை மிகுந்த யானை-கொல் களி(ற்)று (நெட்டிமையார்:புறநானூறு 9.7.)
   வீரத்தன்மையைச் சினம் மிகு கண்ணால் வெளிப்படுத்தும் கொல்லும் யானை-கடுங்கண்ண கொல்களிற்றால் (கபிலர்: புறநானூறு14.1.) கடுங்கண் யானை (கபிலர் : புறநானூறு 337.10)
  முதிர்ந்த  கொம்பினை உடைய கொல்லுங் களிறு - கோடு முற்றியகொல் களிறு (குறுங்கோழியூர் கிழார் : புறநானூறு 17.17)
  யானை வலிமை மிக்கது - மைந்துடை யானை (கூடலூர் கிழார் : புறநானூறு 229.18)
  அங்குசத்திற்கு அடங்காத யானை - நிறப்படைக்கு ஒல்கா யானை (நொச்சிநியமங்கிழார் : புறநானூறு 293.1)
யானையை அழகுபடுத்தல்
  யானைக்கு அணிகலன்கள் அணிவித்து  அழகு செய்வர் - அணி பூண் அணிந்த யானை  (ஒளவையார் : புறநானூறு 101.4 )
  யானையின் நெற்றியில் பொற்பட்டம் அணியப்பெற்றிருக்கும்- பூநுதல் யானை (நெட்டிமையார்:புறநானூறு12.2; யானைப் புகர்முகத்து  அணிந்த பொலம்புனைஓடை (மதுரைத் தமிழக்கூத்தனார்: புறநானூறு 334.9)
  யானையின் மருப்பில் பொற்பூண் அணிவிக்கப்பெற்றிருக்கும் - பொற்கோட்டு யானை (உலோச்சனார்  : புறநானூறு 377.23)
  யானைக்குப் பொன் அணிகலன் அணிவர்-பொன்னணி யானை  (மாங்குடி மருதனார் : புறநானூறு 24.21;  ஆவூர் மூலங்கிழார்: புறநானூறு 177.3;) இழையணி யானை (வண்பரணர் : புறநானூறு 153.2 ; பாடியவர் பெயர் தெரிந்திலது: புறநானூறு 323.6)
  யானைக்குக் கச்சு அணிவிப்பர் - வம்புஅணி யானை  (மாறோக்கத்து நப்பசலையார்: புறநானூறு 37.12; பாடியவர் பெயர் தெரிந்திலது: புறநானூறு 333.17)
(வெற்றி பெற்ற புகர் நுதலை உடைய) யானையின் மீது இடப்படும் மணி அதன் இருபுறத்தாள்வரை தாழ்ந்து அமைந்து மணி யோசையை எழுப்பும் -
தாள் தாழ் படு மணி இரட்டும்  பூ  நுதல்   ஆடியல்
யானை (பெருந்தலைச் சாத்தனார்: புறநானூறு 165.6-7)
படு மணி இரட்டும் பாவடிப் பணைத்தாள்
யானையின் கழுத்தில் மணி கட்டியிருப்பர் - படுமணி யானை (கபிலர்: புறநானூறு 201.4)
மன்னர்களும் வள்ளல்களும் யானைகளைப் பரிசாக வழங்குவர்
  இரவலர்க்கு யானைகளைப் பரிசாக வழங்குவது தமிழ் மன்னர்கள் வழக்கம் - இரவலர்க்கு ஈத்த யானை (உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் : புறநானூறு 129.6)
  கொங்கரைப் போர்க்களத்தில்  எதிர்த்த பொழுது அவர்கள் போட்டு விட்டுப் போன வேல்களின் எண்ணிக்கையை விட மிகுதியான யானைகளை வேள் ஆய் அண்டிரன் பரிசாக அளித்தான்.
அண்ணல் யானை யெண்ணிற் கொங்கர்க்
குடகட லோட்டிய ஞான்றைத்
தலைப்பெயர்த் திட்ட வேலினும் பலவே
(உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் : புறநானூறு  130.5-7)
  பகைவர்களின் யானைகளைக் கொன்று அவற்றின் முகபடாத்தில் உள்ள பொன்னைக் கொண்டு  தாமரைப்பூக்கள் செய்து பாணர்க்குப் பரிசாக வழங்குவதைப் பண்டைத்தமிழர்  மரபாகக்  கொண்டிருந்தனர்.
ஒன்னார் யானை யோடைப்பொன் கொண்டு
பாணர் சென்னி பொலியத் தைஇ
வாடாத் தாமரை சூட்டி
(மாறோக்கத்து நப்பசலையார்: புறநானூறு 126.1-3)
  யானை பற்றிய உவமைகள்
  வீரனின் வீரப் பாய்ச்சலை விளக்குவதற்கு, வரிவயம் பொருத வயக் களிறு போல (ஔவையார் : புறநானூறு 100.7) எனப் புலியுடன் சண்டையிட்ட யானையின் வலிமையை ஒப்பிடுகிறார் புலவர் ஔவையார்.
  யானை பற்றிய உவமைகளுள் மேலும் ஒன்றைப் பற்றி மட்டும் பார்ப்போம்.
யானை புக்க  புலம் போலத்
தானும் உண்ணான் உலகமும் கெடுமே (புறநானூறு 184.10-11)
என அறிவுரை கூறுகிறார் புலவர்  பிசிராந்தையார்
  நெல்லை அறுத்து உணவுக் கவளங்களாக யானைக்குக் கொடுத்தால் ஒரு மா அளவுகூட இல்லாச் சிறுநிலத்தில் விளைந்த நெல் பல நாள்களுக்கு உணவாக வரும். அதே நேரம், நூறு  செய் நிலமாக இருந்தாலும், யானையே புகுந்து உண்டால், அதன் வாயில் புகுவதை விடக் காலில்   மிதிபட்டு அழியும் நெல் மிகுதியாகும். இதைப்போல், வரி நெறிக்கிணங்க வரி பெற்றால், கோடிக்கணக்கில் பொருள்  திரட்ட முடியும்;  அதனால், நாடு  தழைக்கும்.  ஆனால், முறையற்று வரி பெற்றால்  யானை புகுந்தநிலம் போல் தானும் பயன்பெறாமல், மக்கள் அழிவிற்கும் காரணமாகும். இவ்வுவமை மூலம்,  வரி திரட்டுதல் குறித்த பொருளியல் நெறி அக்காலத்தில் இருந்ததை உணரலாம்.
கடந்த நூற்றாண்டு  மேனாட்டுப் பொருளியலறிஞர்கள் கட்டாய வரி  பெறுவதைத் திருட்டாகவும் கொள்ளையாகவும் குறிப்பிடுகின்றனர்.
வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு (குறள் 552) என ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இதனைத் தெய்வப்புலவர் திருவள்ளுவர் கூறியுள்ளார்.  எனவே, ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நெறிமுறைக்கு உட்பட்டே வரிவிதிப்பு முறை இருந்ததை உணரலாம். இவ்வரி முறை நெறிமுறைக்கிணங்க இருக்க வேண்டும் என்பதைத்தான் புலவர் பிசிராந்தையார்  கூறுகிறார். யானை உண்ணும் முறையைக் கொண்டு அருமையான அறநெறிப்பாடல் நமக்குக் கிடைத்துள்ளது. புறநானூறு தரும் பரிசுகளுள் இதுவும் ஒன்று.
யானை பற்றிய பிற செய்திகள்
  யானை மூங்கிலைத் தின்னும் - கழைதின் யானை (சோழன் நலங்கிள்ளி : புறநானூறு 73.9;  பசித்துப்பணை முயலும் யானை 
(சாத்தந்தையார்  : புறநானூறு  80.7)
துன்பத்தால் வருந்தும்  யானை இடியோசைபோல் பிளிறும்  - அலமரல் யானை உருமென முழங்க (கோவூர் கிழார் : புறநானூறு 44.5)
  பாகர் இல்லாத யானை மதுச் சகதியில் ஆடும் - நறுஞ்சேறு ஆடிய வறுந்தலை யானை ( கோவூர்கிழார்  : புறநானூறு 68.16)
யானைகள் நல்லினச்சால்புடையனவாக இருந்தன - இனம் சால் யானை (ஒருசிறைப் பெரியனார் : புறநானூறு 137.1; கழாத்தலையார்: புறநானூறு 270.2)
கட்டப்பட்டுள்ள கம்பத்தை அறுத்துக்கொண்டு ஓட முயன்று பெருமூச்சு விடும் யானை - கந்துமுனிந் துயிர்க்கும் யானை (ஆவூர் மூலங்கிழார் : புறநானூறு 178.1)
யானையின் கழுத்தில் வெற்றி மாலை சூடியிருப்பர் - தார் அணி யானை  (கபிலர்: புறநானூறு 201.13)
படைக்கொடியையும் வெற்றிக்கொடியையும் யானைகள்மீது கட்டுவர் - கொடிநுடங்கு யானை (ஐயூர் முடவனார் : புறநானூறு 228.10)
யானைகள் மீது மரங்களை ஏற்றி வருவர் - யானை தந்த முளிமர விறகில  (மதுரைப் பேராலவாயர் : புறநானூறு 247.1); கான யானை தந்த விறகின் (மாற்பித்தியார்: புறநானூறு 251.5) மதத்தால் யானை மயங்கிப் பெருமூச்சு விடும் - மையல் யானை அயாவுயிர்த்து (ஆவூர் மூலங்கிழார்  : புறநானூறு 261.7)
போர்க்களத்தில் வேந்தர்கள் யானை மீது ஏறிப் போரிடுவர்- வேந்தூர் யானை (ஆவூர் மூலங்கிழார் : புறநானூறு 301.15 ; கோவூர் கிழார்: புறநானூறு 308.5)
கருங்கல் பாறைகளுக்கிடையே மேயும் யானைகள் -  கருங்கல் லிடைதோ, றானிற் பரக்கும்  யானைய (நரிவெரூஉத் தலையார்:  புறநானூறு 5.1-2)
பட்டத்து யானை அல்லது தலைமை யானையை அண்ணல் யானை என்பர் - அண்ணல் யானை (நெடும்பல்லியத்தனார், புறநானூறு 64.8 ; ஔவையார்: புறநானூறு 93.13; கபிலர்: புறநானூறு 115.5; மாறோக்கத்து நப்பசலையார்: புறநானூறு 126.20; உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் புறநானூறு 130.5; சாத்தந்தையார் புறநானூறு 287.5; தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்: புறநானூறு 326.14; மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்: புறநானூறு 388.15 ; ஔவையார்: புறநானூறு 390.28)
யானையைக் கட்டுப்படுத்துவதற்கான அங்குசம் நூல் இலக்கணத்தின் படியும் அழகு புனைந்தும் உருவாக்கப்பட்டது என்பதை பொன்னியற் புனைதோட்டி (கபிலர்: புறநானூறு 14.3) என்னும் தொடர் குறிப்பிடுகிறது. அங்குசம் நூல் இலக்கணத்தின்படி உருவாக்கப்பட்டது எனில், யானை வளர்ப்பிற்கும் நூல்கள் இருந்திருக்க வேண்டும். அவற்றுள் என்னென்ன அறிவியல் உண்மைகள் இருந்திருக்குமோ!
 யானை பற்றிய மேலும் பல குறிப்புகள் புறநானூற்றில் உள்ளன. அவை இடம் பெற்றறுள்ள பாடல் எண்கள் வருமாறு :-
வேழம்:  23, 152, 369, 373,  374, 394;  பிடி: 40, 44, 98, 129, 151, 181, 234, 303, 308, 345, 369, 389; களிறு:  7, 15, 16, 17, 22, 23, 26, 30, 31, 40, 41, 46, 55, 69, 94, 98, 100, 103, 104, 114, 125, 131, 135, 140, 159, 220, 227, 239, 240, 277, 301, 302, 306, 312, 325, 335, 336, 341, 342, 345, 368, 394;ஒருத்தல்: 52, 190.
 இவை யாவும் யானையின்  உருவம், இயல்பு,  வீரம், ஆற்றல் முதலான சிறப்புகளைக் குறிப்பன. இவற்றை வெறும் குறிப்புகளாகப் பார்க்கக் கூடாது. சான்றாக, மெல்லிய தலையை உடைய இளமையான பெண்யானையைக் கயந்தலை மடப்பிடி (புறநானூறு 303.8)   எனப் புலவர் எருமை வெளியனார்  குறிப்பிடுகிறார். யானையின் தலை, எலும்புகள் இன்றி மென்மையாக இருக்கும். இந்த அறிவியல் உண்மையையே இச் சொல் குறிப்பிடுகின்றது. அறிவியலில் யானைபற்றிப் படிக்கும் பொழுது தக்கவாறு பயன்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் அறிவியலும் சிறக்கும்! தமிழியலும் சிறக்கும்! 
 இலக்கியக் குறிப்புகளுள் உயர்வு நவிற்சி யாவை, இயல்புரை யாவை எனப் பகுத்து அறிந்து அவற்றுள் தெரிவிக்கப்படும் அறிவியல் உண்மைகளை அடையாளம் காண வேண்டும். மக்கள் இலக்கியங்களில்  அறிவியல் உண்மைகள் தெரிவிக்கப் படுகின்றன என்றால், அவை மக்களுக்கு நன்கறிந் தனவாகத்தானே இருக்க வேண்டும். இவற்றின் அடிப்படையில் அக்காலத் தமிழ் அறிவியல் வளத்தை அறிந்து பரப்ப வேண்டும். தமிழ் இலக்கியக் கடலில் மறைந்து கிடக்கும் அறிவியல் வளத்தை உலகறியச் செய்ய வேண்டும்.
எப்பொருள் எத்தன்மைத்தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பதறிவு (குறள் 355)
என்னும் தெய்வப்புலவர் திருவள்ளுவர் வழியில் ஆராய்ந்தால் தமிழ் கூறும் அறிவியல் வளத்தை உணரலாம்.
அருந்தமிழ் உரைக்கும் அறிவியல் பரப்புவோம்!
அறிவியல் பரப்பி அருந்தமிழ் வளர்ப்போம்!
 
- இலக்குவனார் திருவள்ளுவன்


1 கருத்து:

  1. Great effort to put all these together. I just finished working on an article on elephant names in Sanskrit and Tamil. Will be publishing it in a journal soon.

    பதிலளிநீக்கு