திங்கள், 15 ஜூலை, 2013

47 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்த இலங்கை உறவுகள்

இலங்கையில் பிரிந்து மதுரையில் சந்தித்த உறவுகள் :47 ஆண்டுகளுக்கு ப் பின் நெகிழ்ச்சி

புதூர் : இலங்கையில் குடும்பச் சூழ்நிலையால் பிரிந்த சகோதரிகள், 47 ஆண்டுகளுக்கு பின், மதுரையில் மீண்டும் சந்தித்து, மகிழ்ச்சியை உணர்ச்சிபூர்வமாக பகிர்ந்து கொண்ட சம்பவம், நெகிழ வைத்தது.நெல்லை மாவட்டம் வால்வீச்சு ரஸ்தாவை சேர்ந்தவர் கண்ணையா. இவரது மனைவி குருவம்மாள். மூத்த மகள் வள்ளி. இவர் 2 வயது குழந்தையாக இருந்தபோது, 1942 ல் வேலை தேடி, இலங்கைக்கு குடும்பத்துடன் கண்ணையா சென்றார். கொழும்பு நகராட்சியில் கூலித் தொழிலாளியானார்.பின், அவருக்கு 9 குழந்தைகள் பிறந்தனர். இதில், 2 பேர் இறந்த நிலையில், 5 பெண்கள், 3 ஆண்கள் இருந்தனர். வள்ளிக்கு, இலங்கையில் சுப்பையா என்ற கூலித் தொழிலாளியுடன் திருமணம் நடந்தது. 1966ல், கண்ணையா இறக்க, செய்வதறியாமல் தவித்த குருவம்மாள், குடும்ப சூழ்நிலை காரணமாக, வள்ளியை தவிர்த்து, மற்ற பிள்ளைகளுடன் மீண்டும் இந்தியா திரும்பினார். காலப்போக்கில், வாரிசுகள் திருமணம் செய்துகொண்டு, தூத்துக்குடி, நெல்லை பகுதிகளில் குடியேறினர். மகள் வள்ளியின் ஞாபகம் தினமும் குருவம்மாளை வாட்டினாலும், பண வசதி இல்லாததாலும், தகவல் தொடர்பு விழிப்புணர்வு அறியாததாலும், இலங்கையில் வசிக்கும் அவரை தொடர்புகொள்ள முடியாதமல் அவரது உயிரும் பிரிந்தது. விளைவு... இலங்கையில் இருக்கும் வள்ளி, தனது சகோதர, சகோதரிகளை 47 ஆண்டுகள் பிரிய நேரிட்டது. மீண்டும் தொப்புள்கொடி உறவு: வள்ளியின் சகோதரிகளில் ஒருவரான கிருஷ்ணம்மாள்,56, பாளையங்கோட்டையில் வசிக்கிறார். இங்கு உறவினரை சந்திக்க, இலங்கையை சேர்ந்த சரஸ்வதி, 2 மாதங்களுக்கு முன்பு வந்தார். இவர், வள்ளி வசிக்கும் பகுதியை சேர்ந்தவர். அப்போது, யதார்த்தமாக கிருஷ்ணம்மாளுடன் பேசும்போது, வள்ளி பிரிவை சொல்லி வருந்தினார். ""இலங்கை சென்று, வள்ளியை தேடி உங்களுடன் சேர்த்து வைக்கிறேன்,'' என நம்பிக்கையூட்டிய சரஸ்வதி, இலங்கை சென்று, வள்ளியை கண்டுபிடித்து, கிருஷ்ணம்மாளுக்கு தகவல் தெரிவித்தார்.47 ஆண்டுகளுக்கு பின், மீண்டும் கிடைத்த சொந்தங்களை பார்க்க துடித்த வள்ளி, விமானம் மூலம் நேற்று மதியம் மதுரை வந்தார். ஆத்திக்குளத்தில் உள்ள கிருஷ்ணம்மாள் மகள் மோகனம்பாள்,32, வீட்டில், சகோதர, சகோதரிகளை (ஜெயலட்சுமி,65, கிருஷ்ணம்மாள் 56, தேவி,52, பரமேஸ்வரி,48, மாணிக்கம்,61, வசந்தகுமார்,58, அருணாசலம்,50) சந்தித்து, ஆனந்த கண்ணீர் வடிக்க, உறவுகள் தேற்ற, பார்ப்போரை நெகிழ்ச்சி அடைய செய்தது.வள்ளி கூறுகையில், ""வாழ்க்கையில் எனது தங்கை, தம்பிகளை பார்ப்பேன் என, கனவில் கூட நினைக்கவில்லை. எங்கள் குடும்பத்தில் பேரன், பேத்தி உட்பட மொத்தம் 65 பேர் ரத்த பந்தங்கள். அனைவரையும் பார்த்தபிறகே, இலங்கை திரும்ப முடிவு செய்துள்ளேன்,'' என்றார்.