வெள்ளி, 19 ஜூலை, 2013

வரலாற்றுச் சின்னங்களை பாழ்படுத்துவது கவலை அளிக்கிறது

வரலாற்று ச் சின்னங்களை பாழ்படுத்துவது கவலை அளிக்கிறது

சென்னை:""பாரம்பரியமிக்க கட்டடங்கள், சின்னங்களை பாதுகாக்கவில்லை என்றாலும் பரவாயில்லை; அதை பாழ்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடாதீர்கள்,'' என, வரலாற்று ஆய்வாளர் நரசைய்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.தொல்லியல் துறையின் முக்கியத்துவத்தை, மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில், சென்னை, மீனாட்சி மகளிர் கல்லூரியின் வரலாற்றுத் துறை, "ரீச் பவுண்டேஷன்' அமைப்புடன் இணைந்து ஒப்பந்தம் செய்யும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.இதில், மீனாட்சி மகளிர் கல்லூரி செயலர் லட்சுமி, ஒப்பந்தத்தை வெளியிட, "ரீச் பவுண்டேஷன்' நிறுவனர் சத்தியமூர்த்தி பெற்றுக் கொண்டார். மேலும், கல்லூரியில் தொல்லியல் மையமும் திறக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், வரலாற்று ஆய்வாளர் நரசைய்யா பேசியதாவது:வேகமாகச் செல்லும் உலகத்தோடு, நாமும் போட்டி போட்டு செல்கிறோம். பழமையை மறந்து, நாகரிக உலகத்திற்கேற்ப மாறி வருகிறோம். இதனால், நாட்டுப்புறக் கலைகள், பாடல்கள், சமையல் என அனைத்தும், இருந்த இடம் தெரியாமல் அழிந்து வருகின்றன.சென்னையில் உள்ள, பழமை வாய்ந்த நினைவுச் சின்னங்கள் நிலை, மிகவும் பரிதாபமான நிலையில் உள்ளது. நினைவுச் சின்னங்களின் மதிப்பு தெரியாமல் கிறுக்குதல், உடைத்தல், அசுத்தம் செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளில், சிலர் ஈடுபடுகின்றனர்.

பாழ்படுத்துகிறோம்:கோவில் குளங்களிலும் பாரமரிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதில்லை. நம் வரலாற்று அடையாளங்களை, நாமே பாழ்படுத்தி வருகிறோம். வெளிநாடுகளுடன் ஒப்பிடும் போது, நம் நாட்டில், வரலாற்று சின்னங்கள் பாதுகாப்பு, மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இவற்றை பாதுகாக்க சட்டம் இருந்தும், நடைமுறைப்படுத்தப்படுவது இல்லை.
தொல்லியல் கட்டடங்கள், நினைவுச் சின்னங்களை பாதுகாக்கும் பணியில், அரசுடன், பொதுமக்கள் இணைந்து செயல்பட வேண்டும். இதுகுறித்த விழிப்புணர்வை, பொதுமக்களுக்கு கொண்டு செல்லும் பணியில், மாணவர்கள் ஈடுபட வேண்டும். மாணவர்களால் மட்டுமே, வரலாற்றுச் சின்னங்களை பாதுகாக்கவும் முடியும்; பாழ்படுத்துவதை தவிர்க்கவும் முடியும்.இவ்வாறு நரசைய்யா கூறினார்.

இந்த ஒப்பந்தம் மூலம், இந்தியாவின் பண்பாடு, கலாசாரத்தின் முக்கியத்துவம் குறித்து மாணவர்கள் அறிய கொள்ள முடிகிறது. பழமை வாய்ந்த இடங்களுக்கு கல்விச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர். தொல்லியல் துறை குறித்த கருத்தரங்குகள், பயிற்சிப் பட்டறைகள் நடத்தப்பட உள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக