புதன், 17 ஜூலை, 2013

உடலுக்குள் ஒரு வெடிகுண்டு!

உடலுக்குள் ஒரு வெடிகுண்டு!


பேரழிவை ஏற்படுத்தும், காசநோய் பற்றிய விழிப்புணர்வு கருத்துகளை கூறும், மருத்துவர் சவும்யா சுவாமிநாதன்: நான், தேசிய காசநோய் ஆராய்ச்சி மையத்தின், இயக்குனராக பணியாற்றுகிறேன். எப்போது வேண்டுமானாலும் வெடிக்கக் கூடிய, ஒரு வெடிகுண்டின் விளிம்பில், நாம் உட்கார்ந்திருக்கிறோம் என்றால், அது டி.பி., எனும், காசநோய் தான். இந்நோயால், ஆண்டிற்கு, 3 லட்சம் பேர் இறக்கின்றனர்; 18 லட்சம் பேர், சிகிச்சை பெறுகின்றனர்.
காற்றில் பரவும், பாக்டீரியா கிருமி மூலம் தொற்றுவதே, காசநோய். குடிசை பகுதியில் வசிப்பவர்கள், ஊட்டச்சத்து குறைபாட்டால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள், மது, குடி பழக்கம் உள்ளவர்களை, டி.பி., பாதிக்கிறது. டி.பி.,க்கு எந்த ரத்த பரிசோதனையும், இதுவரை கண்டுபிடிக்கவில்லை. "எக்ஸ்-ரே' மற்றும் "சிடி' ஸ்கேனால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்.
தொடர்ச்சியான இருமல், உடல் எடை குறைதல், சளியில் ரத்தம் தெரிவது, இந்நோயின் அறிகுறிகள். இந்நோய்க்கு, மருந்துகளை எதிர்க்கும் சக்தி அதிகம் என்பதால், நோயாளிக்கு ஒரு வேளைக்கு, நான்கு வகையான, "ஆன்டிபயாடிக்' மாத்திரைகளை தருவதில் இருந்தே, இந்நோயின் வீரியத்தை அறிய முடிகிறது. அப்படி தரப்பட்டாலும், பலருக்கு இந்நோய் சரியாவதில்லை.
மூளை, முதுகுதண்டு, எலும்பு, வயிறு என, உடலின் எந்த பாகத்தையும் பாதித்து, அங்கு வலி மற்றும் வீக்கத்தை உண்டாக்கும். இன்று, இளம் பெண்களின் கழுத்தில், நெறி கட்டுவது அதிகரிக்கிறது. அசிங்கமாக நினைப்பரோ என, துப்பட்டாவால் மூடி மறைத்து, கட்டி முற்றிய நிலையில், மருத்துவரிடம் வருவது அதிகரிக்கிறது.
டி.பி., பாதிப்பு, ஏழை நாடுகளில் தான் அதிகம் என்பதால், லாபம் கிடைக்காது என்ற எண்ணத்தில், விரைவில் குணப்படுத்தும் மருந்தை, இதுவரை யாரும் கண்டுபிடிக்க முயற்சிக்காமல், நீண்ட கால சிகிச்சை முறையே உள்ளன. இதன் சிகிச்சைக்கு செலவு அதிகம். அரசு மருத்துவமனைகளில், இதற்கான மருந்து மாத் திரைகள், இலவசமாகவே கிடைக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக