உயர் நீதிமன்றத்தின் வழக்கு மொழியாகத் தமிழ்: கருணாநிதி வலியுறுத்தல்
சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்கு மொழியாகத்
தமிழைச் சட்டப்படி கையாளுவதற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை மத்திய அரசு
பெற்று தர வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். இது
தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்:-
சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் சவுதி அரேபியாவில் தவிக்கும்
கணவரை மீட்டுத் தரக் கோரிய வழக்கில் தமிழில் வாதாட அனுமதி
மறுக்கப்பட்டுள்ளது.உச்ச நீதிமன்றத்தின் அரசியல் அமைப்பு அமர்வு, உயர்
நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் ஆங்கிலத்தில்தான் வாதாட
வேண்டுமென்று ஆயிஷா பானு என்பவர் தாக்கல் செய்த மனுவையும் நீதிபதி தள்ளுபடி
செய்து உத்தரவிட்டுள்ளார்.நீதிபதியின் மீது எந்தவிதமான குறையையும் நான்
சொல்ல முன்வரவில்லை.
2006 டிசம்பர் 6-ல் உயர் நீதிமன்றத்தில் வழக்கு மொழியாகத் தமிழைக்
கொண்டு வரவேண்டுமென்று சட்டப்பேரவையில் நானே (கருணாநிதி) முன்மொழிந்து
தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இந்தத் தீர்மான நகலை தமிழக ஆளுநரின்
பரிந்துரையுடன் குடியரசுத் தலைவராக இருந்த அப்துல் கலாமை அவர் இல்லத்தில்
சந்தித்து, சட்டப்பேரவையின் தீர்மானத்தைக் கொடுத்து, வழக்கு மொழியாகத்
தமிழைக் கொண்டு வருவதற்கு அனுமதி பெற்றுத் தர வேண்டும் என்று
வலியுறுத்தினேன்.இந்த நடவடிக்கைகளுக்குப் பிறகும் உச்ச நீதிமன்றம் ஆட்சேபணை
தெரிவித்த காரணத்தினால் மத்திய அரசினால் அப்போது தமிழக அரசின்
தீர்மானத்துக்கு ஒப்புதல் வழங்க முடியவில்லை.
எனினும் தமிழகத்தில் அப்போது திமுக ஆட்சி நடைபெற்ற காரணத்தினால் சென்னை
உயர் நீதிமன்றத்தில் பெரும்பாலான வழக்குகளின் விசாரணைகள் எல்லாம் தமிழிலே
நடைபெற்றன.உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதாக எம்.ஒய்.இக்பால் இருந்தபோது
தமிழிலேயே வாதாட அனுமதித்தார்.தற்போது உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர்
தமிழில் வாதாட அனுமதி மறுத்ததைக் கண்டித்து, வழக்குரைஞர்கள் போராட்டத்தில்
ஈடுபட்டுள்ளனர்.அந்தப் போராட்டம் மிகவும் நியாயமான போராட்டம் என்பதை
வழக்குரைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.இந்தப் பிரச்னையில் மத்திய அரசு
உடனடியாகத் தலையிட வேண்டும்.
வட மாநிலங்களில் ஹிந்தி வழக்காடும் மொழியாக அனுமதிக்கப் பட்டுள்ளதுபோல,
தமிழகத்தில் உள்ள உயர் நீதிமன்றத்திலும் வழக்காடும் மொழியாக தமிழைச்
சட்டப்படி கையாளுவதற்கு உச்ச நீதிமன்றத்தின் ஒப்புதலைப் பெற்று, குடியரசுத்
தலைவரின் ஒப்புதலையும் பெற்று தர வேண்டும் என்று அவர்
வலியுறுத்தியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக