வெள்ளி, 19 ஜூலை, 2013

மண்ணில் புதையும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நடுகற்கள்

மண்ணில் புதையும் வரலாற்று ச் சிறப்பு வாய்ந்த நடுகற்கள்

தருமபுரியில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்ட, வரலாற்று ச் சிறப்பு வாய்ந்த நடுகற்கள், போதிய பராமரிப்பின்றி, மண்ணில் புதைந்து வருகின்றன. போதிய நிதி வசதியின்றி, தொல்லியல் துறை தள்ளாடி வருவதால், இப்பிரச்னை ஏற்படுகிறது. எனவே, "தமிழக அரசு, தொல்லியல் துறைக்கு அதிக நிதி ஒதுக்கி, வரலாற்று சிறப்பு வாய்ந்த சின்னங்களை காப்பாற்ற வேண்டும்' என, தொல்லியல் ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தனித்தன்மை:

தமிழகத்தில், தர்மபுரிக்கு என ஒரு தனித்தன்மை உள்ளது. கடையேழு வள்ளல்களில் ஒருவரான, அதியமான் ஆட்சி செய்த பகுதி அது. அக்காலத்தில், "தகடூர்' என்று அழைக்கப்பட்டு வந்தது. தர்மபுரி பேருந்து நிலையம் அருகில், தொல்லியல் துறையின் அருங்காட்சியகம் உள்ளது. 1974ல் துவங்கப்பட்ட இக்காட்சியகத்தில், வரலாற்று சிறப்பு வாய்ந்த நடுகற்கள், பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய கற்சிற்பங்கள், வெளிநாட்டினர் தமிழகத்துடன் வாணிபத் தொடர்பு வைத்திருந்ததற்கான பொருட்கள், ஒவ்வொரு நூற்றாண்டிலும் கண்டெடுக்கப்பட்ட, தெய்வச் சிலைகள், பண்டைய தமிழர் பயன்படுத்திய வீட்டுப் பொருட்கள், ஓலைச் சுவடிகள், எழுத்தாணிகள், முதுமக்கள் தாழி, ஈமப்பேழை போன்றவை, காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அது மட்டுமின்றி, தர்மபுரி பகுதியின் தனித்தன்மையைக் கூறும், பழங்கால மக்களின் கல்லாயுதங்கள், முதல் பெருங் கற்கால ஆயுதங்கள், சிற்பங்கள், கல்வெட்டுகள், சுடுமண் சுதைகள், தர்மபுரி மாவட்ட ஊர்களின் பெயர் காரணங்கள், நவகண்ட சிற்பங்கள், அக்காலத்தில் நடைமுறையில் இருந்த, "உடன்கட்டை ஏறுதல்' குறித்து விளக்கும் கற்சிற்பங்கள் போன்றவை, காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இவற்றில், தனிச்சிறப்பு வாய்ந்தது, இங்குள்ள நடுகற்கள். ஒவ்வொரு நடுகற்களிலும், வில் மற்றும் வாளேந்திய வீரர் இருக்கும் காட்சி செதுக்கப்பட்டிருக்கும். வீரரின் இடப்பக்கத்தில், அவர் பயன்படுத்திய பொருட்களும், வீரரின் தலைக்கு அருகில், அவரை பற்றிய குறிப்புகளும் காணப்படும். மேலும், வீரரின் போர் புரிந்த காட்சியும் செதுக்கப்பட்டிருக்கும். அக்காட்சி மற்றும் அவர் பயன்படுத்திய பொருட்கள், எழுத்தின் வடிவம் போன்றவற்றின் மூலம், எந்த காலகட்டத்தில் குறிப்பிட்ட வீரர் இறந்தார்; அதற்கான காரணம் என்ன என்பது பற்றிய விவரம் தெரியும். மேலும், வீரர்கள் பற்றிய குறிப்புகள், "வட்டெழுத்து'களில் குறிப்பிடப்பட்டிருக்கும். தமிழ் மொழியின் வளர்ச்சியை அறிவதற்கு, "வட்டெழுத்து'க்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. தமிழின் எழுத்து வடிவம் எந்த வகையில், மாற்றம் அடைந்தன என்பதற்கு நடுகற்களில் காணப்படும், "வட்டெழுத்து'க்களே சாட்சியாக விளங்குகின்றன.

மரமான கற்கள்:

பார்வையாளர்களின் காட்சிக்காக, 20க்கும் மேற்பட்ட நடுகற்கள், அருங்காட்சியகத்தின் வெளியே வைக்கப்பட்டுள்ளன. இவற்றில், ஒரு சில நடுகற்களைத் தவிர, மற்ற அனைத்தும், மண்ணில் புதைந்து போயுள்ளன. ஒரு சில நடுகற்கள், மரத்தின் அடிவாரத்தில் சாய்த்து வைக்கப்பட்டிருந்தன. நாளடைவில், மரத்தின் வளர்ச்சியோடு, அந்நடுகற்கள் மரத்தோடு மரமாக மாறி வருகின்றன. இக்கற்களை உடனடியாக மீட்டெடுக்கவில்லை எனில், அவை அழியும் அபாயம் உள்ளது. பல்வேறு துறைகளுக்கும், அதிக நிதி ஒதுக்கும் தமிழக அரசு, தொல்லியல் துறைக்கும் அதிக நிதி ஒதுக்க வேண்டும். தொல்லியல் துறையின் மூலமாகவே, தமிழகத்தின் ஒவ்வொரு காலகட்டத்தின் வரலாறும் தெரிய வந்தன. தொல்லியல் துறையில் உள்ள, ஒவ்வொரு நினைவுச் சின்னமும், வாழும் பொக்கிஷங்கள். அவற்றை முறையாக பராமரிக்க போதிய நிதியின்றி, தொல்லியல் துறை தள்ளாடி வருகிறது. தமிழக அரசு, தொல்லியல் துறைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

வரலாறு அழிந்து போகும் அபாயம்!

இது குறித்து, தொல்லியல் துறையின் முன்னாள் கண்காணிப்பாளர், நாகசாமி கூறியதாவது: தர்மபுரியில் உள்ள அருங்காட்சியகத்தை, "அகழ் வைப்பகம்' என்றே, தமிழக அரசு குறிப்பிடுகிறது. ஆனால், "அகழ் வைப்பகம்' என்ற வார்த்தையே, தவறானது. அதை, "வரலாற்று கூடம்' என்றே அழைக்க வேண்டும். ஏனெனில், அங்குள்ள பொருட்கள் அனைத்தும், அகழாய்வின் மூலம் பெறப்பட்டவை அல்ல. கடந்த, 25 ஆண்டுகளுக்கு முன், ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள, தொல்லியல் சிறப்பு தன்மையை அறிய, பல்வேறு முயற்சிகள் செய்தோம். குறிப்பாக, ஆண்டுக்கு, 40 வரலாறு, தமிழ் ஆசிரியர்களை, தமிழகத்தில் உள்ள, அனைத்து வரலாற்று சிறப்பு மிக்க பகுதிகளுக்கும் அழைத்துச் சென்று, நேரடியாக கற்பித்தோம். மேலும், வரலாற்று கூடங்கள் உள்ள பகுதிகளில், அந்த ஊரின் தொல்லியல், வரலாற்று சிறப்பு குறித்து, கையேடு தயாரித்து மாணவர்களுக்கு வழங்கினோம். இதன் மூலம், மாணவர்களிடம், தொல்லியல் சின்னங்களை, பாதுகாக்க வேண்டிய விழிப்புணர்வு அதிகரித்தது. ஆனால், தற்போது, வரலாற்று சிறப்பு மிக்க நடுகற்கள் அழிந்து வருவது வேதனை அளிக்கிறது. எங்களின் பணிக் காலத்தில், செங்கம், தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளில், ஊர் ஊராகச் சுற்றி, நடுகற்களை சேகரித்தோம். அவ்வாறு, கடும் முயற்சிக்கு பிறகு, கண்டுபிடித்த நடுகற்கள், பராமரிப்பின்றி இருப்பது, சொல்லொணா துயரை அளிக்கிறது. நடுகற்கள், தமிழர்களின் பண்பாடு, நாகரிகத்தை மட்டுமின்றி, தமிழ் மொழியின், எழுத்து வடிவத்தின் வளர்ச்சியையும் வெளிப்படுத்துகிறது. இவற்றில் காணப்படும் எழுத்து, "வட்டெழுத்து'க்களாகும்.

பல்லவ மன்னன் மகேந்திர வர்மன் காலத்தில், "வட்டெழுத்து'க்கள் வழக்கத்தில் இருந்ததை, நடுகற்கள் மூலமே அறிய முடிந்தது. பிராமி எழுத்துக்கள், "வட்டெழுத்து'க்களாக மாறியதை, நடுகற்கள் மூலமே அறிந்து கொள்ள முடியும். எனவே, நடுகற்கள் என்பவை, கண் முன்னே காணப்படும், வரலாற்றுப் பெட்டகம். அவற்றை முறையாக பராமரிக்க வேண்டும். இல்லையெனில், நம் வரலாற்றை, நாமே அழிப்பதாக மாறிவிடும்.இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -