பழங்காலத் தமிழர்களின் நீர் மேலாண்மையை உணர்த்திய
13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த குமிழி கல்வெட்டு, மதுரை அருகே
கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மதுரை- மேலூர் சாலையில் அரிட்டாபட்டி கிராமத்தின் அருகே உள்ள
கழிஞ்சமலையில் இந்தக் கல்வெட்டை தொல்லியல் துறையினர் கண்டெடுத்துள்ளனர்.
இந்தக் கல்வெட்டில், 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில்
வாழ்ந்த சமண துறவிகளுக்கு, படுக்கைகள் அமைத்துக் கொடுத்த விவரம் தமிழ்
பிராமி எழுத்துகளால் பொறிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கி.மு. 2-ம் நூற்றாண்டில் நெல்வேலி சிழிவன் அதினன் வெளியன் என்பவனும்,
இலஞ்சி எளம்பேராதான் மகன் எமயவன் என்பவனும் சமணத்துறவிகளுக்கு குகைத்
தளங்களையும், படுக்கைகளையும் (முழாகை) அமைத்துக் கொடுத்துள்ளனர்.
கழிஞ்சமலைக்கருகில் ஆப்டான் மலை, இராமாயி மலை ஆகிய 2 மலைகள் உள்ளன.
மூன்று மலைகளில் இருந்து வரும் நீரை குடிநீர்த் தேவைக்காகவும்
வேளாண்மைக்காகவும் தேக்கி வைப்பதற்கு கண்மாய் வெட்டி, கரை அமைத்து தண்ணீரை
ஒழுங்குபடுத்தி முறையாக வழங்கிட மதகு (குமிழி) அமைக்கப்பட்டுள்ளது.
இதனை கி.பி. 13 ஆம் நூற்றாண்டில் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன்
ஆட்சிக்காலத்தில் ஆணைமேல் கொண்டான் என்ற பாண்டிய நாட்டு அதிகாரி
செய்துள்ளான். இந்நிகழ்வைப் பற்றிய குமிழி கல்வெட்டு அரிட்டாபட்டி
கண்மாயில் புதிதாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கி.பி. 13 ஆம் நூற்றாண்டிலேயே நீர் மேலாண்மையும், நீர் ஒழுங்குமுறை
திட்டமும் பாண்டிய நாட்டில சிறப்பாக நடைமுறையில் இருந்துள்ளதை இந்தக்
கல்வெட்டு உணர்த்துவதாக, இதனைக் கண்டெடுத்த தொல்லியல்துறை மண்டல உதவி
இயக்குநர் நா. கணேசன் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக