செவ்வாய், 2 ஜூலை, 2013

தாய்மொழி மட்டுமே ஒருவரின் அடையாளம்: தினமணி வைத்தியநாதன்

தமிழ்ப்பற்றைப் பல வகைகளிலும் வெளிப்படுத்திப் பரப்பி வரும் ஆசிரியர் வைத்தியநாதன் அவர்கள், தினமணியில்  அயல்மொழிச்சொற்களும் அயல்மொழி எழுத்துகளும் இன்றி நல்ல தமிழில செய்திகளும் கட்டுரைகைளும் விளம்பரங்களும் வர நடவடிக்கை எடுக்கலாமே!  திருவள்ளுவர் ஆண்டையும் தமிழ்நாளையும் தினமணியில் குறிப்பிட நடவடிக்கை எடுக்கலாமே! பொன்மலர் நாற்றமுடைத்தாற்போன்ற சிறப்பு அமையுமே! வேண்டு்கோளை நிறைவேற்றுவாரா? அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/


தாய்மொழி மட்டுமே ஒருவரின் அடையாளமாக இருக்க முடியும்: "தினமணி' ஆசிரியர் கே. வைத்தியநாதன்








தாய்மொழி மட்டுமே ஒரு மனிதனின் அடையாளமாக இருக்க முடியும் என்றார் "தினமணி' ஆசிரியர் கே. வைத்தியநாதன்.
"எண்ணங்களின் சங்கமம்' அமைப்பு சார்பில் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்த ஆண்டு விழாவில் சமூகப் பணியாற்றும் 100
இளைஞர்களுக்கு விருதுகளை வழங்கி அவர் பேசியது:
சிலர் பேச்சால் மாற்றத்தைக் கொண்டு வருவார்கள். சிலர் எழுத்தால் மாற்றத்தை ஏற்படுத்துவார்கள். ஆனால், இங்கு விருது பெற்ற 100 இளைஞர்களும் செயலால் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறார்கள்.
பத்திரிகையாளர்களான நாங்கள் தவறுகளைச் சுட்டிக் காட்டுகிறோம், எண்ணங்களை விதைக்கிறோம். இவற்றால் எல்லாம் மாற்றம் ஏற்பட்டு விடுமா? என்று நான் சிந்திப்பது உண்டு. பரவலாகத் தூவப்படும் விதைகள் ஆங்காங்கே முளைத்து ஆலாகப் படர்வது போல, எண்ணங்களும் எங்கேயோ, ஏதோ ஒரு இடத்தில் தனது வீரியத்தை வெளிக் கொணராமல் இருக்காது.
ஒரு புறம் நாங்கள் எழுதிக் கொண்டிருக்கிறோம். மாற்றத்தை ஏற்படுத்த, சமுதாயத்தை சீர்திருத்த சிந்தனைத் தாக்கத்தை உருவாக்க முயன்று கொண்டிருக்கிறோம். மாற்றத்தை ஏற்படுத்த, சமுதாயத்தை சீர்திருத்த் சிந்தனைத் தாக்கத்தை உருவாக்க முயன்று கொண்டிருக்கிறோம். மறுபுறம் உங்களைப் போன்ற தன்னார்வலர்கள் இயங்கிக் கொண்டிருப்பதால்தான் எங்களின் எழுத்துக்கள் உயிர்ப் படைத்து, செயல்வடிவம் பெறுகின்றன.
வளர்ச்சியடைந்த நாடுகளில் உள்ள கட்டமைப்பு வசதிகளும், வளர்ச்சிகளும் நம் நாட்டில் இல்லையே என்கிற தார்மீகக் கோபம் ஏற்படவே செய்கிறது. மக்களின் நம்பிக்கையைப் பெற்ற அரசியல் தலைவர்களும், மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் பெறும் அதிகாரிகளும் அரசுச் செலவில் உலகம் சுற்றி வருகிறார்களே, அங்குள்ள வளர்ச்சியை இங்கே ஏற்படுத்த அவர்கள் ஏன் முனைப்புக் காட்டுவதில்லையே என்கிற ஆத்திரம் வரத்தான் செய்கிறது. ஆட்சியாளர்கள் ஏமாற்றினாலும் இந்தியா வளர்ந்து கொண்டு இருக்கிறது. ஒவ்வொரு கிராமத்திலும், தெருவிலும் உங்களைப் போன்றவர்கள் இயங்கிக் கொண்டிருப்பதுதான் அதற்குக் காரணம்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் உலகமே இந்தியாவைப் பார்த்து பிரமித்தது. இந்தியாவுக்குச் செல்ல வேண்டும் என்பது தான் பல நாட்டவரின் குறிக்கோளாக இருந்தது. வாஸ்கோடகாமா, கொலம்பஸ் போன்றவர்கள் அதற்காகத்தான் கடல் பயணம் மேற்கொண்டனர். இந்தியாவுடன் வியாபாரத் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள விழைந்தனர்.
ஆனால், இன்றோ தங்களது குழந்தைகளை அமெரிக்காவுக்கு அனுப்பிவிட வேண்டும் என்று துடிக்கிறார்கள். காரணம் அமெரிக்கா செல்வச்செழிப்பான நாடாக மாறியிருக்கிறது.
ஐரோப்பாவில் இருந்து நாடு கடத்தப்பட்டவர்களால் உருவான நாடு அமெரிக்கா. அவர்களுக்கென்று எந்த பாரம்பரியமும் இல்லை. செல்வச் செழிப்போடு வாழ வேண்டும் என்பது மட்டுமே அவர்களது லட்சியமாக இருந்தது. பல்லாயிரக்கணக்கான செவ்விந்தியர்களைக் கொன்று குவித்தனர். பணம் சம்பாதிப்பது மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருந்தனர். பழி, பாவத்திற்கு அஞ்சாமல், தர்மநீதி பற்றிக் கவலைப்படாமல் செயல்பட்டனர். அதுதான் அவர்களது இமாலய வெற்றி. ஆனால், இந்தியர்களான நாம், பழி பாவத்திற்கு அஞ்சக்கூடும். தவறு மூலம் பெறும் செல்வச் செழிப்பை வெறுக்கிறோம். பாரம்பரியம் நம்மைத் தவறுகளிலிருந்து தடுக்கிறது. அதனால்தான் அமெரிக்காவைப் போன்ற முன்னேற்றம் இங்கு இல்லை. ஆனால், தர்மம் இங்கே செத்துவிடவில்லை.
உலகுக்கு வழிகாட்டும் கலாசாரமாக இந்திய கலாசாரம் இருக்கும் என்று விவேகானந்தர் சொன்னது நிஜம். அமெரிக்காவைப் போன்ற செல்வச்செழிப்பு இல்லாவிட்டாலும் போதும் என்ற திருப்தி நம் நாட்டில் இருக்கிறது.
பொது இடத்தில் எப்படி பழக வேண்டும், வாழ வேண்டும் என்ற பொது ஒழுக்கம் மேலை நாட்டவர்களிடம் இருக்கிறது. ஆனால், தனி மனிதன் எப்படி வாழ வேண்டும் என்ற தனி மனித ஒழுக்கம் நம்மிடம் இருக்கிறது.
சாலையைத் தூய்மையாக வைத்துக் கொள்வது எப்படி, சாலையில் ஓரமாக நடப்பது எப்படி என்பதெல்லாம் நமக்குத் தெரியவில்லை. ஆனால், வீட்டையும், மனதையும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பது தெரிந்திருக்கிறது.
நம்மிடம் இருப்பதை தக்க வைத்துக் கொண்டு இல்லாததைப் பெறுவதுதான் புத்திசாலித்தனம். நமது பலவீனத்தை பலமாக மாற்றிக் கொள்ள வேண்டும். அப்போது எல்லாம் வெற்றியாக மாறும். ஒவ்வொரு கிராமத்திலும், நகரத்தின் பகுதிகளிலும் சமுதாய முன்னேற்றத்திற்காக, மற்றவர்கள் நன்றாக வாழ வேண்டும் என்பதற்காக உங்கள் சொந்த சுகத்தைக் கருதாமல் ஊருக்காக உழைக்கும் தொண்டர்கள் இங்கே கூடியிருக்கிறீர்கள். இது எண்ணங்களின் சங்கமம் மட்டுமல்ல, தொண்டர்களின் சங்கமமும்கூட.
பல்வேறு பகுதிகளில் அவரவருக்கு இயன்றாற்போல, ஏதாவது ஒரு சமுதாயப் பணியில் ஈடுபடுத்திக் கொண்டு செயல்படும் உங்கள் தொண்டு தடாகத்தை சுத்தப்படுத்தும் மீன், சுற்றுப்புறத்தைத் தூய்மைப்படுத்தும் காகம் போன்று இயல்பாக விளம்பரமே இல்லாமல் நடக்கிறது. உங்களுடன் இது நின்றுவிடக்கூடாது. நீங்கள் பலருக்கும் முன்னுதாரணமாக, வழிகாட்டிகளாகத் திகழ வேண்டும். உங்கள் செயல்பாடு உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டால்தான், அதைப் பார்த்து ஏனைய பலரும் சமுதாயத் தொண்டில் ஈடுபட முனைப்புக் காட்டுவார்கள்.
உங்கள் பணியில், "தினமணி' நாளிதழும், எங்கள் "தினமணி' நிருபர்களும் உறுதுணையாக இருப்பார்கள். அவர்களுடைய உதவியை நீங்கள் உரிமையுடன் கோரிப் பெறலாம். உங்கள் செயல்பாட்டில் இடையூறுகள் ஏற்பட்டால், "தினமணி' உங்களுக்குப் பக்கபலமாக இருக்கும் என்பதை மறுத்து விடாதீர்கள்.
தாய்மொழி மட்டுமே ஒருவனின் அடையாளமாக இருக்க முடியும். தாய்மொழி அழியாமல் காப்பாற்றப்பட்டால் மட்டுமே விவேகானந்தரும், மகாத்மா காந்தியும் கட்டிக்காத்த நமது கலாசாரத்தைக் காப்பாற்ற முடியும்.
எனவே, மக்களுக்கு சேவையாற்றும் இளைஞர்களாகிய நீங்கள் தாய்மொழியைக் காப்பாற்றும் பணியிலும் ஈடுபட வேண்டும் என்பது எனது வேண்டுகோள் என்றார் "தினமணி' ஆசிரியர் கே. வைத்தியநாதன்.
"எண்ணங்களின் சங்கமம்' அமைப்பின் நிறுவனர் ஜெ. பிரபாகர், "ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்' ஆன்மிக இதழின் ஆசிரியர் சுவாமி விமூர்த்தானந்தர், ராமநாதபுரம் மன்னர் பரம்பரையைச் சேர்ந்த என். குமரன் சேதுபதி, சுவாமி விவேகானந்தரின் சீடரான அளசிங்கப்பெருமாளின் பேரன் எம்.சி. அளசிங்கப் பெருமாள் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக