ஞாயிறு, 30 ஜூன், 2013

மாற்றிச் சிந்தித்தால் வெல்லலாம்!

மாற்றிச் சிந்தித்தால் வெல்லலாம்!
மின்வெட்டால், நெசவுத் தொழில் முடங்கினாலும், மாற்று சக்தியால், உற்பத்தியை அதிகரித்து, முதல் பரிசு பெற்ற வேலு: நான், திருவண்ணாமலையில் இருந்து, 65 கி.மீ., தூரத்தில் உள்ள, அத்திமலைப்பட்டு கிராமத்தை சேர்ந்தவன். கிராமத்திற்குள் நுழைந்தாலே, தறி நெய்யும் சத்தம், காதுகளில் இசையாய் கேட்கும். சாமுத்ரிகா, ஜரிகை, கல்யாணப் பட்டு என, பல ரகங்களை தயாரித்து, ஆண்டிற்கு, 3 கோடி ரூபாய்க்கு, பட்டு புடவை உற்பத்தி செய்து வந்தோம்.
ஏறக்குறைய, 200 குடும்பங்கள் வசிக்கும் எங்கள் கிராமத்தில், மூன்று தலைமுறையாக, நெசவு தொழிலே செய்ததால், வேறு தொழில் தெரியாது. வீட்டின் வெளியிலோ அல்லது கொஞ்சம் பலமாக காற்றடித்தாலோ, பட்டு புடவையை நெய்ய முடியாது. அழுக்கானாலும் விற்க முடியாது என, பல கஷ்டங்கள் இருப்பதால், வீட்டிற்குள்ளேயே தறி வைத்து, "லைட்' வெளிச்சத்தில், மாதத்திற்கு, ஆறு புடவை நெய்வோம்.மின்வெட்டால், இரண்டு புடவை கூட நெய்ய முடியாமல், வறுமையில் தத்தளித்தோம். இந்நிலை தொடர்ந்தால், எதிர்காலமே கேள்விக்குறியாகும் என்ற எண்ணத்தில், மாற்றி யோசித்தோம். சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் பெற முடிவதை அறிந்து, கூட்டுறவு சங்க மேலாளர் உதவியுடன், முயற்சியில் இறங்கினோம்.நபார்டு வங்கி உதவியுடன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில், 27 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றோம். அரசு மானியமாக, 10,800 கிடைத்தது. மீதி தொகையை தவணையாக கட்டினோம். மற்ற கிராமங்களில் நெசவுதொழில் முடங்கினாலும், நாங்கள், தொடர்ச்சியாக தறியை இயக்கி, திருவண்ணாமலையின், 27 பட்டு நெசவு கூட்டுறவு சங்கங்களில், சிறந்த சங்கமாக, முதல் பரிசை தட்டி சென்றோம்.
நெசவுக்கு மட்டுமின்றி, வீட்டிற்கும், சோலார் மின்சாரத்தை பயன்படுத்தி, மின்கட்டணத்தை குறைத்தோம். ஒரு வாசல் மூடினால், இன்னொரு வாசல் கதவை, நாம் தான் தட்டி திறக்க வேண்டும். மாற்றி யோசித்ததால் தான்,எங்கள் கிராமத்தால் வெற்றி பெற முடிந்தது.

உலகின் கவனத்தை ஈர்த்தேன்!
மருந்தில்லா புரோஸ்டேட் கேன்சருக்கு, தீர்வு ஏற்படுத்திய, சென்னையைச் சேர்ந்த, 27 வயதே ஆன ஆராய்ச்சி மாணவி, பிரீத்தி: நான், சென்னையைச் சேர்ந்தவள். ராஜலட்சுமி பொறியியல் கல்லூரியில், பி.டெக்., பயோ டெக்னாலஜி பிரிவில், தங்க மெடலுடன் தேர்ச்சி பெற்றேன். அமெரிக்காவின், "டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில்' முதுநிலை பட்டம் பெற்று, அங்குள்ள சவுத் வெஸ்ட் மெடிக்கல் சென்டரில், சிறுநீரகவியல் துறை ஆராய்ச்சி மாணவியாகப் பணியாற்றுகிறேன். படிப்பிலும், ஆராய்ச்சியிலும், நான் ஆர்வத்துடன் ஈடுபட, பெற்றோர் தந்த ஊக்கமே காரணம்.

ஆண்களின் உடலில் இருக்கும், புரோஸ்டேட் சுரப்பியின் திசுக்களில் ஏற்படும் புற்று நோயே, "புரோஸ்டேட் கேன்சர்' இந்த வகை கேன்சரால், 50 வயதிற்கு மேற்பட்ட ஆண்களே, அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். என் ஆராய்ச்சியின் பயனாக, புரோஸ்டேட் கேன்சருக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படுத்தி, சென்னை பெண்ணாக இருந்தாலும், மருத்துவ உலகின் கவனத்தை ஈர்த்தேன்.

அதிகப்படியாக வளரும் கேன்சர் புரத செல்களை, ஒரு நுண்ணிய மூலக்கூறை கொண்டு சிதைப்பதன் மூலம், கேன்சர் செல்களை அழிக்க முடியும். "பெப்டிடாமிமெடிக் டி2' என்ற மூலக்கூறு, இந்த வகை கேன்சர் செல்களை முற்றிலும் அழிக்கும் என்பதைக் கண்டறிந்தேன். இவை, நச்சு தன்மை இல்லாதவை. ஹார்மோனில் ஏற்படும் மரபியல் மாற்றத்தையும் தடுக்க வல்லது.சுண்டெலிக்கு, இம்மருந்தைக் கொடுத்து சோதித்ததில், கேன்சர் செல்களின் வளர்ச்சியை முற்றிலும் கட்டுப்படுத்துவதை உறுதிபடுத்தி, அதை, ஆராய்ச்சி கட்டுரையாகத் தயாரித்தேன். உலகின் எல்லா மருத்துவ ஆராய்ச்சியாளரும், தங்கள் ஆராய்ச்சிக் கட்டுரைகள், சர்வதேச மருத்துவ இதழில் வெளிவருவதைக் கனவாக நினைப்பர்.

சமீபத்தில், என் ஆராய்ச்சி முடிவுகளும், சர்வதேச மருத்துவ இதழான, "நேச்சர் கம்யூனிகேஷனில்' வெளி வந்தது, மகிழ்ச்சியாக உள்ளது. இக்கட்டுரை, புரோஸ்டேட் கேன்சருக்குச் சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுக்கு, புதுநம்பிக்கையை ஏற்படுத்தும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக