ஞாயிறு, 2 டிசம்பர், 2012

பாலசுதீனத்தைப் போல் ஈழத்தையும் ஐ.நா. ஏற்கும் நாள் வரும்: வைகோ


பாலசுதீனத்தைப் போல் ஈழத்தையும் ஐ.நா. ஏற்கும் நாள் வரும்: வைகோ

பாலஸ்தீனத்தை அங்கீகரித்தது போல் தமிழ் ஈழத்தையும் ஐ.நா., அங்கீகரிக்கும் நாள் வெகு விரைவில் வரும் என்று நம்பிக்கை தெரிவித்தார் மதிமுக பொதுச் செயலர் வைகோ.
இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கை...

தமிழ் ஈழ விடுதலைக்காக, உலகம் இதுவரை கண்டும் கேட்டும் இராத, வீரம் செறிந்த மகத்தான போர் புரிந்து, இரத்தம் சிந்தியும், உயிர்நீத்தும், தியாக காவியம் தீட்டிய மாவீரர்களுக்கு, 1989 முதல், தமிழ் ஈழத்திலும், தரணி எங்கணும், வீர வணக்கம் செலுத்தும் மாவீரர் நாள், கடைபிடிக்கப்படுகிறது.
1989 ஆம் ஆண்டு, வன்னிக்காட்டில் முதன்முதலாக இதனை அறிவித்தவர், மாவீரர் திலகம் பிரபாகரன் ஆவார். இந்திய அரசின் உதவியோடு, கொடூரமான இராணுவத் தாக்குதலை நடத்தி, உலகம் தடை செய்த ஆயுதங்களைப் பயன்படுத்தி, சிங்கள இனவாத அரசு, இலட்சக்கணக்கான தமிழர்களைப் படுகொலை செய்தது. ஏழு வல்லரசுகளின் ஆயுத உதவியால், கொலைகார இராஜபக்சே ஏவிய இராணுவம் நடத்திய தாக்குதலில், விடுதலைப்புலிகளுக்கு சமர்க்களத்தில் பின்னடைவு ஏற்பட்டது.
உலகில் எந்த அரசும் செய்யத் துணியாத அக்கிரமத்தை, சிங்கள அரசு, தமிழ் ஈழத்தில், தமிழர்கள், மாவீரர்களுக்கு எழுப்பி இருந்த கல்லறைகளை, துயிலகங்களை, இடித்துத் தரை மட்டமாக ஆக்கி, தன் கோர முகத்தை வெளிப்படுத்தியது.
இந்த ஆண்டு, நவம்பர் 27 ஆம் தேதியன்று, இலங்கையில், தமிழர் தாயகத்தில், மாவீரர்களுக்கு, வீரவணக்கம் செலுத்திய, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவ, மாணவியர்களை, சிங்கள இராணுவத்தினர் தாக்கி உள்ளனர். இதில் பலர் காயமுற்று உள்ளனர்.
இந்த நாள், முருக வழிபாடு நடத்தும் தமிழர்கள் வீடுகளில், தீபங்களை ஏற்றிக் கொண்டாடும், கார்த்திகைத் திருநாள் ஆகும்.  அப்படி, தீபங்கள் ஏற்றப்பட்ட தெருக்களில் இராணுவத்தினர் சென்று, அத்தீபங்களை எட்டி உதைத்து, மிலேச்சத்தனமாக நடந்து உள்ளனர்.
பல்கலைக்கழக மாணவ, மாணவியர் தாக்கப்பட்டதற்கு, அமெரிக்கத் தூதரகம் கண்டனம் தெரிவித்து உள்ளது.
27 ஆம் தேதி, சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், இந்தத் தாக்குதலைப் பற்றிக் குறிப்பிட்டு, ஈழத்தமிழர்கள் நாதி அற்றவர்கள் என்று, கொலைகார சிங்கள அரசு மனப்பால் குடிக்க வேண்டாம்; சிங்களவரின் கொலைக்கரங்களை முறிப்பதற்கு, தாய்த் தமிழகம் பொங்கி எழும் நாள், தொலைவில் இல்லை என்று எச்சரித்தேன்.
ஈழத்தில், தமிழ் இனத்தையே அழித்து விடலாம் என்ற மூர்க்கத்தனமான வெறியோடு, சிங்களக் காடையர் கூட்டம், செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றது என்பதைக் கருத்தில் கொண்டு, தமிழ் ஈழ மக்களைக் காக்க, மிக விழிப்போடு இருந்து, உலகெங்கும் உள்ள, தன்மானத் தமிழர்கள் கடமை ஆற்ற வேண்டும்.

பாலஸ்தீனம் போல் தமிழ் ஈழம்!

இதோ, நேற்றைய தினம், பாலஸ்தீனத்துக்கு, ஐ.நா. மன்றத்தில், பெருவாரியான ஆதரவோடு, தனிநாடு என்ற அங்கீகாரம் கிடைத்து விட்டது.
அதைப்போலவே, சுதந்திரத் தமிழ் ஈழ தேசமும் அமைந்து, அதனை ஐ.நா. மன்றம் அங்கீகரிக்கும் நாளும் வரத்தான் போகிறது!
- இவ்வாறு அந்த அறிக்கையில் வைகோ கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக