செவ்வாய், 4 டிசம்பர், 2012

"காணாமல் போகும் நீர் நிலை!'


சொல்கிறார்கள்

"காணாமல் போகும் நீர் நிலை!'
 நீர் நிலைகளைக் காப்பதற்காக, "வயலகம்' என்ற அமைப்பை நிறுவி உள்ள வாசிமலை: கண்மாய்களின் அழிவுக்கு, முக்கிய காரணம், ஆக்கிரமிப்பு. பல கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, சாலைகளாகவும், கட்டடங்களாகவும் மாறி விட்டதால், நீர் வரத்தின்றி கண்மாய்கள் அழிந்து வருகின்றன.கண்மாய்களின் எண்ணிக்கை குறைவதால், பாசன வசதி பெற முடியாத விவசாயிகள், விவசாயத்தைக் கைவிடும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். விவசாயம் செய்ய முடியாத நிலங்கள், ரியல் எஸ்டேட் நிறுவனங்களால் கைப்பற்றப்பட்டு, வீட்டு மனைகளாக மாறி வருகின்றன.நகர்மயமாதல், கண்மாய்களின் அழிவிற்கு, மற்றொரு முக்கிய காரணம். இவற்றை ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது என சட்டம் இருந்தாலும், அது முழு வீச்சில் செயல்படுத்தப் படுவதில்லை. அது மட்டுமல்ல, பல இடங்களில், அரசே ஆக்கிரமிப்பு செய்கிறது என்பது, கொடுமையான விஷயம். அரசு கட்டடங்கள் பலவும், கண்மாய்களை ஆக்கிரமித்தே கட்டப்பட்டு உள்ளன.நான்கு வழிச் சாலை திட்டத்திற்காக, பல கண்மாய்கள் அழிக்கப்படுவதை, நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். நகர் பகுதிகளில் கண்மாய்களை அழித்து வருவதால், நிலத்தடி நீர் மட்டம் குறைந்து, தண்ணீருக்காக மக்கள் அலைகின்றனர்; அதிகளவு தண்ணீர் கேன்கள், பாட்டில்கள், நகர்புறங்களில் தான் விற்பனை ஆகிறது. கண்மாய்கள் காப்பாற்றப்பட்டிருந்தால், இந்த நிலை ஏற்பட்டு இருக்காது.தென் மாநிலங்களில், நம் மூதாதையர்கள் வேறு எங்கும் காண முடியாத அளவிற்கு, கண்மாய்கள் மூலம் நீர் நிர்வாகம் செய்துள்ளனர்; அதைக் காக்க வேண்டும். முற்காலத்தில், நீர் நிலைகளை நிர்வகித்த மக்களிடம், தற்போது அந்த உரிமை இல்லை. அதை மீண்டும் அவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக