சனி, 8 டிசம்பர், 2012

காவிரியில் திறந்துவிடப்பட்ட நீர் மாயம்?


காவிரியில் திறந்துவிடப்பட்ட நீர் மாயம்?: எல்லையைத் தொடாததால் தமிழக அதிகாரிகள் அதிர்ச்சி

காவிரியில் நீர் திறந்துவிடப்பட்டதாக கர்நாடகம் கூறியுள்ள நிலையில், தமிழக எல்லைக்கு இன்னும் காவிரி நீர் வந்தபாடில்லை. ஆனால், இன்று காலை அதிகாரிகள் சிலர், பத்திரிகைகளுக்கு தவறான தகவலைக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால், தமிழக எல்லையை காவிரி நீர் தொட்டுவிட்டதாக இன்று காலை செய்திகள் பரவின.
இந்நிலையில், தமிழக எல்லையான பிலிகுண்டுலு பகுதியை இன்னும் காவிரி நீர் தொடவில்லை என்று பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறினர். இந்தக் குழப்பத்தால், தமிழக அரசு பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு வாய் மொழி உத்தரவு ஒன்றும் இட்டுள்ளதாம். அதிகாரிகள் யாரும் காவிரி நீர் தொடர்பாக பத்திரிகையாளர்களுடன் தொடர்பு கொள்ளக்கூடாது என்றும், ஒரு நாளைக்கு ஒரு முறை... அதாவது காலை 8 மணிக்கு மட்டும் நீர் மட்ட நிலவரத்தை அளித்தால் போதும் என்றும் உத்தரவு இடப்பட்டுள்ளதாம்.
காவிரி நீர் தொடர்பாக அவரவர் தமக்குத் தெரிந்த தகவலை பத்திரிகைகளுக்கு அளிப்பதால், அதிகாரிகள் மட்டத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளது என்றும், இன்னும் அதிகார பூர்வமாக காவிரி நீர் தமிழக எல்லையைத் தொட்டது குறித்து அறிவிக்கப்படவில்லை என்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறினர். எனவே, கர்நாடகம் காவிரியில் திறந்து விட்டதாகக் கூறிய நீர் எங்கே? அது எப்படி மாயமானது என்பது குறித்து அதிகாரிகள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். நேற்று முந்தின நாள் வியாழன் இரவு 10 மணி அளவில் கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து நீர் திறந்துவிடப்பட்டதாக கர்நாடகம் கூறியுள்ள நிலையில், இந்நேரம் தண்ணீர் மேட்டூரில் சேர்ந்திருக்க வேண்டும். ஆனால், தமிழக எல்லையான பிலிகுண்டுலுவையே இன்னும் தொடவில்லை என்பது அதிர்ச்சி அளிப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக