சொல்கிறார்கள்
அரிசியை மொத்தமாக சாக்குகளாகத் தூக்குவது தான் பெரும்பாலான வீடுகளில் வழக்கம். பத்து நாள் வெளியூர் சென்று வந்து பார்த்தால், சின்ன பூச்சிகள் வந்திருக்கும். இதைத் தடுக்க, கடையில் இருந்து சாக்கு அல்லது பையில் வாங்கி வரும் அரிசியை, அண்டா, தூக்குவாளி என்று பெரிய எவர்சில்வர் பாத்திரத்திலோ, பிளாஸ்டிக் டப்பாவிலோ மாற்றி, மூடிவைத்து விடவேண்டும். அரிசியின் மேற்புறம் கொஞ்சம் வேப்பம் தளிர் அல்லது காய்ந்த மிளகாய் வற்றலைப் போட்டு வைத்தால், பூச்சி, வண்டு எதுவும் அண்டாது.அரிசிக்கு மட்டுமல்ல, பருப்பு, தானிய வகைகளைச் சேமிக்கும்போது, அதன் மேற்புறமாக வேப்பந்தளிர், காய்ந்த மிளகாய் வற்றலைப் போட்டு வைக்கலாம். வண்டு விழாமல் இருக்க, பயறு, மொச்சை இவற்றை வறுத்து, அதன்பின் சேமிக்கலாம். சிறு பயறு வாங்கும் போதே ஈரத்தன்மை குறைவாக, உலர்ந்த நிலையில் வாங்க வேண்டும்; இவை தான் சேமிக்க ஏற்றது.வெள்ளைப் பூண்டு, சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் இவையெல்லாம் சூட்டில் வெதும்பிவிடும் என்பதால், காற்றோட்டமான இடத்தில் பரப்பி வைக்க வேண்டும். ஆண்டிற்கு ஒரு முறை சீசன் நேரத்தில் மட்டும் கிடைக்கும் புளியை, ஆண்டு முழுமைக்கும் சேமித்துப் பாதுகாக்க வேண்டும். அதற்கு புளியுடன் கொஞ்சம் கல் உப்பையும் சேர்த்து, ஈரமில்லாமல், நன்றாக உலர்த்தி, ஒரு பீங்கான் ஜாடியில் சேமித்தால், அந்தப் புளிக்கு ஆயுள் கெட்டி; புளியை சமையல் பயன்பாட்டிற்கு எடுக்கும்போது, கையில் ஈரம் இருக்கக் கூடாது.மழைத் தண்ணீரையும் முறைப்படி சேமித்தால், மாதக் கணக்கில் பயன்படுத்தலாம். மழைக் காலங்களில் பெரிய அண்டா, டிரம்களில் தண்ணீர் பிடித்து, அதை ஒரு வெள்ளைத் துணியில் வடிகட்டி, மண் பானையில் ஊற்றி மூடிவிட்டால், அதிக நாட்களுக்குப் பயன்படுத்தலாம். குளோரின் நெடியுடன் வரும் கார்ப்பரேஷன் தண்ணீரையும், மண் பானையில் ஊற்றி வைத்தால், அதன் ரசாயனத் தன்மை குறையும், தண்ணீரும் சுத்தமாகும், சுவையாகும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக