திங்கள், 26 மார்ச், 2012

Joined through face-book






போபால்: பெற்றோரை விட்டு பிரிந்த மகன், 24 ஆண்டுகளுக்குப் பின், கூகுள் மற்றும் பேஸ்புக் சமூக வலைதளத்தின் உதவியால் மீண்டும் ஒன்று சேர்ந்தான்.

மத்திய பிரதேச தலைநகர் போபாலில் இருந்து, 200 கி.மீ., தொலைவில் உள்ள காந்த்வா மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாத்திமா. இவருக்கு குட்டு, கால்லு (சலீம்), ஷேரு என்ற மூன்று மகன்களும், ஷகீலா என்ற மகளும் உள்ளனர். இதில், குட்டு தன் சகோதரர்கள் உதவியுடன் அருகே உள்ள பர்ஹான்பூர் ரயில் நிலையத்தில், டீ வியாபாரம் செய்து, அதன் மூலம் கிடைக்கும் வருவாயில் அந்த குடும்பம் வாழ்ந்து வந்தது. பாத்திமாவின் கணவர் அவரை விட்டு பிரிந்து, வேறு பெண்ணை மணந்து கொண்டார். இந்நிலையில், 1988ம் ஆண்டு ஒரு நாள், டீ வியாபாரத்தை முடித்துக் கொண்டு, சகோதரர் ஷேருவுடன் குட்டு, ரயிலில் சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்படி வரும் போது, ஷேரு தூங்கி விட்டார். ஆனால், ரயிலில் இருந்து திடீரென குட்டு கீழே தவறி விழுந்து விட்டார். ஒரு வழியாக தட்டுத் தடுமாறி எழுந்த குட்டு, பின் சொந்த ஊர் சென்றார். ஆனால், நடந்தது எதையும் அறியாமல், ரயிலில் தூங்கிக் கொண்டிருந்த ஷேரு, அப்படியே கோல்கட்டா சென்று விட்டார். அவரை அங்கிருந்த பிச்சைக்காரர்கள் தங்களுடன் சேர்த்து வலுக்கட்டாயமாக பிச்சை எடுக்க வைத்தனர். அவர்களிடம் இருந்து தப்பித்த ஷேரு, மீனவ குடும்பத்தின் உதவியுடன் தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த நவ்ஜீவன் சான்ஸ்தா என்பவரது அனாதை இல்லத்தில் சேர்ந்தார்.

அனாதை இல்லத்திற்கு வந்த ஆஸ்திரேலிய தம்பதி ஷேருவை தத்து எடுத்து, தங்கள் நாட்டுக்குக் கூட்டிச் சென்றது. அவரது பெயரை ஷேரு பிரேலி என்று மாற்றி, தங்களுடன் வளர்த்து வந்தனர். ஆண்டுகள் உருண்டோடின. ஆஸ்திரேலியாவில் அவர் கல்வி பயின்று பி.பி.ஏ., பட்டம் பெற்றார். இருந்தாலும், அவருக்கு அடிக்கடி தன் தாய், சகோதரர்கள், சகோதரி ஆகியோரது நினைவு வந்தது. அவரிடம் தன் தாய் மற்றும் சகோதர, சகோதரிகளுடன் எடுத்த புகைப்படம் இருந்தது. அறிவியல் வளர்ச்சி காரணமாக, கூகுள், பேஸ்புக் இணைய தளங்களில் தன் குடும்ப புகைப்படத்தை வெளியிட்டு, தன் ஊர் மற்றும் குடும்பத்தை தேடி கண்டுபிடித்தார். தாய் மற்றும் குடும்பத்தை விட்டு ஆறு வயதில் பிரிந்த அவர், 24 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் அவர்களை சந்தித்தார். அளவற்ற மகிழ்ச்சி அடைந்தார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக