திங்கள், 26 மார்ச், 2012

பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் செயலை மீண்டும் செய்துள்ளது இந்தியா!


வழமையாக இந்தியா தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளும் செயலைச் செய்யும். அதனையே இந்த விடயத்திலும் செய்திருக்கிறது.இரண்டு பேரையும் திருப்திப்படுத்துகின்ற வேலையை இந்தியா செய்திருக்கிறது. இதனை நாம் பெரிதாக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என தெரிவித்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், சர்வதேசத்தில் கவனிக்கும் ஒரு விடயமாக தமிழரின் பிரச்சினை சென்றிருக்கிறது என்பது மாத்திரமே தற்போதைய நிலையில் முக்கிய விடயமாகுமெனவும் அவர் தெரிவித்தார்.
கொக்கட்டிச்சோலை, இராமகிருஸ்ண மிஷன் வித்தியாலயத்தின் வருடாந்த மெய்வல்லுனர் போட்டியில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
அது அகிம்சை ரீதியான போராட்டமாக இருக்கலாம், ஆயுத ரீதியானதாக இருக்கலாம். நாங்கள் பல இடங்களில் கூறியிருக்கிறோம் அகிம்சை போராட்டமும் தோற்றிருக்கின்றது, ஆயுதப்போராட்டமும் தோற்றதாக அரசாங்கம் கூறுகின்றது.
ஆனால் எங்கள் பிரச்சினை இன்று சர்வதேசத்திற்கும் சென்றிருக்கிறது. என்பதனைத்தான் நாங்கள் கூறியிருந்தோம். அது நேற்று முன்தினம் ஜெனிவாவில் அது அரங்கேறியிருக்கிறது. ஆனால் 24 நாடுகள் எங்களது பிரச்சினைக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறது.
இதில் இருந்து எள்ளளவும் விலக முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இதில் பல சந்தேகங்கள் இருக்கின்றன. இந்த பிரேரணையின் போது, இந்தியா இரட்டைத்தன்மையான இராஜதந்திரத்தைக் கடைப்பிடித்திருக்கின்றது. இந்த இரட்டைத்தன்மை இராஜதந்திரம் என்பதை நாங்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.
இந்தியாவுக்கு ஒரு அழுத்தம் இருந்தது. தமிழ் நாட்டு மக்களைப் பொறுத்தவரையில் சிறிலங்காவை எதிர்க்க முடியாத நிலை இந்தியாவுக்கு இருக்கிறது. அந்த நிலையில் தமிழ் நாட்டு மக்களின் உணர்வுகளை மதிக்க வேண்டிய கடமை இந்தியாவிற்கிருந்தது. இந்த இடத்தில் தான் இந்தியா இந்த இராஜதந்திரத்தைக் கொண்டிருக்கிறது.
ஜெனிவா பிரேரணையில் இரண்டு விடயங்கள் திருத்தப்பட்டதாக நீங்கள் அறிந்திருப்பீர்கள், அது என்ன விடயம் என்றால், இறமையுள்ள ஒரு நாட்டில் ஐ.நா சபை நேரடியாக தலையிட வேண்டும் என்று அமெரிக்கா கொண்டு வந்த பிரேரணையை, இந்திய அரசாங்கம் இலங்கையின் ஒப்புதலுடனேயே செய்ய வேண்டும் என அதனைத்திருத்தியிருக்கிறது. இரண்டு இடத்தில் இந்த வசனம் வருகிறது.
எங்களைப் பொறுத்தமட்டில் அந்த வசனம் இருந்தாலோ இல்லை என்பதோ பிரச்சினையல்ல. ஒரு நாட்டில் ஐ.நா.சபை தலையிடவேண்டும் என்கிற விடயம் வந்திருக்கிறது. ஒரு நாட்டில் ஐ.நா சபை தலையிடும் போது, நிச்சயமாக தன்னிச்சையாக நாட்டின் அனுமதியில்லாமல் செய்ய முடியாது. ஆனால் அது இல்லாதிருந்த போதும் இந்தியா அதனைச் செய்திருக்கிறது. அந்த வகையில் உலகத்திலுள்ள தமிழ் மக்களையும் காப்பாற்றியிருக்கிறது, மஹிந்த ராஜபக்ஷ்வையும் காப்பாற்றியிருக்கிறது.
ஜெனிவாவில் இலங்கைப் பிரச்சினை சென்றிருப்பதன் நோக்கம் எதிர்வரும் காலத்தில் அமெரிக்கா இதில் எதனை வகுத்து வைத்திருக்கிறது என்பதற்குப் பலரும் பல விளக்கங்களைக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் இறுதி யுத்தத்தின் போது நடைபெற்ற மனித உரிமை மீறல்களுக்குத் தண்டனை வழங்குங்கள் என்றோ, முள்ளிவாய்காலில் கொல்லப்பட்ட இரண்டரை லட்சம் மக்கள் பற்றிக் கேட்கவில்லை.
இலங்கை அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றுதான் தான் அமெரிக்கா கேட்டிருக்கிறது. அதாவது, உங்களது அரசாங்கத்தால் நீங்களே நியமித்த குழு வழங்கிய சிபார்சுகளை நடைமுறைப்படுத்துங்கள் என்றுதான் கூறப்பட்டிருக்கறது. ஆனால் அதற்குக் கூட என்ன நடக்கிறது. அதனைக்கூட பரிசீலிக்க முடியாது என்று அமைச்சர் விமல் வீரவங்ச கூறுகிறார்கள்.
இலங்கையில் இருந்து சென்ற மூன்று ஊடகவியலாளர்கள் ஒரு தமிழர். பாக்கியசோதி சரவணமுத்து உடன் இன்னும் இரண்டு சிங்கள ஊடகவியலாளர்கள். மனித உரிமை விடயங்கள் பற்றி நேரடியாக ஜெனிவாவில் சொன்னார்கள். வாதிட்டார்கள். அவர்களுக்கு நாடு திரும்பியதும் காலை வெட்டுவோம் என்று அமைச்சர் மேர்வின் சில்வா கூறுகிறார். அவர் நினைக்கிறார் கால் என்பது முருங்கைத்தடியால் செய்யப்பட்டது, பப்பாசித்தடியால் செய்யப்பட்டது என்று நினைக்கிறார் அந்த அளவில்தான் இலங்கை அரசாங்கம் இன்று இருந்து கொண்டிருக்கிறது.
ஒரு அமைச்சர் ஒரு வார்த்தையை தேவையற்ற வகையில் வெளியிட்டால் அது நாட்டுக்குச் சொல்லுகின்றது என்றோ, அது நாட்டுக்கு அவமானது என்றோ இந்த நாடும் உணராது. இவ்வாறு அவர்கள் நடந்து கொள்வதும், கருத்துக்களை வெளியிடுவதும் தமிழ் மக்களுக்குக்கிடைக்கின்ற வரவு என்பதை அவர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். இதற்குப்பின்னால் நீங்கள் என்ன செய்யவெண்டும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
அந்த இடத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பற்றிக் கூறவேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜெனிவாவுக்குச் செல்லவில்லை எனப்பலர் குற்றம் கூறினார்கள், இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இராஜதந்திரம் வெற்றியளித்திருக்கிறது. எமது தலைவர் சம்பந்தன் ஐயாவின் இராஜதந்திரம் எந்த அளவில் இருக்கறது என்பதற்கு ஜெனிவாவில் கொண்டுவரப்பட்ட இலங்கைக்கு எதிரான பிரேரணை வெற்றியளித்திருக்கிறது.
ஆகவே தமிழ் தேசியக்கூட்டமைப்பானது, தமிழ் மக்களுக்கான உரிமையை, சுதந்திரவாழ்வை பெற்றுக்கொடுப்பதற்காக அதன் பங்களிப்பை எந்தெந்த வழியில், முறையில் செய்ய வெண்டுமோ அந்தந்த முறையில் செய்திருக்கிறது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
அந்த வகையில் நின்றுதான் நாங்கள் எங்களை தீர்மானிக்கக்கூடிய நாங்கள் எங்களைப் பாதுகாக்கக்கூடிய ஒரு நிரந்தர அரசியல் தீர்வை வென்றெடுப்பதற்கு இந்த ஜெனிவா தீர்மானம் ஒரு ஆரம்பப் படியாக கிடைத்திரப்பதையிட்டு கொக்கட்டிச்சோலை, மட்டக்க்களப்பு மாவட்டமாக இருந்தாலும் வடகிழக்காக இருந்தாலும் நாம் அடைந்த இழப்புகளுக்கெல்லாம் ஒரு பரிகாரம் கிடைப்பதற்கான வாய்ப்பு என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக