சனி, 31 மார்ச், 2012

Anhinga or Darter : பாம்பு தாரா

இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம்:பாம்பு தாரா


பதிவு செய்த நாள் : 30/03/2012


பாம்பு தாரா என்று ஒரு பறவை.  நீர் நிலைகளில் வாழ்ந்திடும் பறவையிது.  இப் பறவையை ஆங்கிலத்தில் அனிங்கா அல்லது டார்டர் (Anhinga or Darter) என்று அழைப்பார்கள்.


இந்தப் பறவையின் உணவு மீன்கள்.  இப்பறவை மீன் பிடிப்பததற்கும் மீன் கொத்தி, கொக்கு, நாரை போன்ற மற்ற மீனுண்டு வாழும் பறவைகள் மீன் பிடிப்பதற்கும் ஒரு வித்தியாசம் உண்டு.  மற்ற பறவைகள் மரக் கிளைகளிலோ அல்லது ஆகாயத்தில் பறந்த படி இருந்து கொண்டோ நீரின் மேல் பரப்பிற்கு வரும் மீன்களைக் கொத்திப் பிடிக்கும்.  ஆனால் இந்தப் பறவையோ தண்ணீரில் தலையை மட்டும் வெளியே நீட்டிக் கொண்டு நீந்திக் கொண்டிருக்கும்.  அப்போது எதிர்ப் படும் மீனைப் பிடித்து தண்ணீரில் இருந்த படியே உண்ணும்.

இது தன் உடல் பூராவையும் நீருள் வைத்துக் கொண்டு நீந்திடும் போது பாம்பு நீரில் நீந்திச் செல்வது போலவே தோன்றும்.  இப்பறவைக்கு பாம்பு தாரா எனப் பெயர் வரக் காரணமும் இதுவே.

மீன் ஒன்றைப் பிடித்த உடன் கழுத்தை மட்டும் நிருக்கு வெளியே நீட்டி அந்த மீனின் தலை முதலில் வாயுள்ளே செல்லும்படி தூக்கிப் போட்டு பிடித்து பின் விழுங்கும்.  இந்தக் காட்சி பார்த்து ரசித்திட வேண்டிய ஒன்று.


மற்ற நீர் வாழ் பறவைகள் தண்ணீரில் இருக்கும் போது அவற்றின் உடல் நீரில் மூழ்கிடாது மிதந்திடும்.  அவற்றின் சிறகுகளில் தண்ணீர் ஒட்டாது.  காரணம் அவற்றின் சிறகுகளில் ஒரு வகை எண்ணைப் பசை இருக்கும்.  தவிறவும் சிறகுகளுக்கிடையே இருக்கும் காற்று அப்பறவைகளை மிதக்கச் செய்யும்.  ஆனால் பாம்பு தாராவின் சிறகுகளில் அந்த எண்ணைப் பசை இல்லாதலால் தண்ணீர் சுலபமாக ஒட்டிக் கொண்டு, பளுவாக்கி, அதன் உடலை நீருக்கடியில் கொண்டு செல்லும். 

வயிறு முட்ட மீன் உண்டாயிற்று.  இனி பறந்திட வேண்டுமே?  சிறகுகள் நன்றாக நனைந்திருக்கும் போது எப்படிப் பறப்பது?  கஷ்டப் பட்டு மெல்லப் பறந்து அருகில் உள்ள ஒரு கல்லின் மீதோ, கிளையின் மீதோ அமர்ந்து தன் சிறகுகளை விரித்துப் பிடித்துக் கொண்டு வெய்யிலில் உலர வைத்துக் கொள்ளும்.  சிறகுகள் உலர்ந்த பின் பறந்து சென்று விடும்.




இனப் பெருக்கக் காலத்தில் பாம்பு தாரா குடும்பம் நடத்துவது நீர் நிலைகள் அருகே மரக் கிளைகளில் குச்சி சுள்ளிகளைக் கொண்டு கட்டிய கூடுகளில்.

பாம்பு தாராவை தமிழ் நாட்டில் வேடந்தாங்கல் போன்ற பறவைகள் சரணாலயத்திலும், கர்னாடகாவில் ரங்கன திட்டு பறவைகள் சரணாலயத்திலும் பார்க்கலாம்..

http://www.natpu.in/?p=22696 

                                                                          - கல்பட்டு நடராசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக