வெள்ளி, 30 மார்ச், 2012

Medicinal plant cultivation in school :பள்ளியில் மூலிகைச் செடி வளர்ப்பு : ஆர்வமூட்டும் தலைமை ஆசிரியர்



ஈரோடு : ஈரோடு மாணிக்கம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், பல்வேறு மூலிகைச் செடிகள் அமைத்து, அதன் பெயர், பலன்களையும் தெளிவுபடுத்தி, மாணவர்களிடையே ஆர்வத்தை வளர்க்கின்றனர்.
பள்ளி தலைமை ஆசிரியர் ராஜமாணிக்கம் கூறியதாவது: பள்ளி வளாகத்தை தூய்மையாக, பசுமையாக வைத்திருக்கவும், மாணவர்களிடையே அறிவுத்திறனை வளர்க்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டது. பள்ளியின் நுழைவுப்பகுதியில் தலைவர்கள், சுதந்திர போராட்ட வீரர்கள், தமிழக முதல்வர்கள், ஜனாதிபதிகள், பிரதமர்கள் போன்றோரின் படங்கள், பெயர் போன்றவை வைக்கப்பட்டுள்ளது. இவற்றை பார்க்கும் மாணவர்களுக்கு, தங்களுக்கு முன்னோடியாக ஒருவரை நினைத்து செயல்பட யோசனை ஏற்படும். பொது அறிவும் வளரும். அதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பள்ளியின் நடுப்பகுதியில் பல்வேறு வகை மூலிகைச்செடிகள் வைக்கப்பட்டு, செடியின் சாதாரண பெயர், தாவரவியல் பெயர், அதன் பலனையும் எழுதி வைத்துள்ளோம். இங்கு தண்ணீர் விட்டு, குப்பை சேர்க்காமல், பசுமையாக பராமரிக்கிறோம்.
இங்கு நீரிழிவை குணப்படுத்தும் இன்சுலின் செடி, சிறுகுறிஞ்சி, வல்லாரை, சங்குப்பூ, காசரளி, கற்றாழை, கற்ப்பூரவல்லி போன்ற பல செடிகள் வைக்கப்பட்டுள்ளன. தவிர, இங்கு வந்து செல்பவர்கள், குறிப்பிட்ட செடிகள் தங்களுக்கு தேவை என்றால், எங்களுக்கு தெரிந்தவர்கள் மூலம் அச்செடிகளை வீட்டில் வளர்க்கவும் வாங்கிக் கொடுக்கிறோம்.
இதனால், மூலிகை செடி மற்றும் செடிகள் வளர்ப்பில் மாணவர்களுக்கு ஆர்வம் ஏற்படுவதுடன், அதுபோன்ற செடிகள் அழியாமல் காக்கப்படுகிறது. பல்வேறு பள்ளிகளில் பல்வேறு நல்ல பழக்கங்கள் ஊக்கப்படுத்துவதுபோல, இங்கு பொது அறிவு, செடிகள் வளர்ப்பு, மூலிகை செடிகளின் பலன்கள் போன்றவற்றை மாணவர்கள் அறியச் செய்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக