செவ்வாய், 10 ஜனவரி, 2012

still hurting: "இன்றளவும் வலிக்கிறது!'

 
"இன்றளவும் வலிக்கிறது!'



செயற்கைக் காலுடன் மாரத்தான் பந்தயத்தில் பங்கேற்கும் ராணுவ வீரர் தேவேந்தர் பால்சிங்: என் பெற்றோருக்கு அரசு வேலை என்பதால், பல ஊர்களுக்கு மாற்றலாகிச் செல்லும் சூழ்நிலை இருந்தது. அதனால், தாத்தா வீட்டில் வளர்ந்தேன். ரூர்க்கி ராணுவ முகாமில் என் தாத்தா பணியாற்றினார். ராணுவச் சூழலில் வளர்ந்ததால், அதன் மீது ஒருவித ஈர்ப்பு ஏற்பட்டது. டிகிரி முடித்ததும், ராணுவத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றேன். கடந்த, 1999ல் நடந்த கார்கில் போரின் போது, இந்திய - பாகிஸ்தான் எல்லையில் பணியாற்றினேன். அதில், "ஆபரேஷன் விஜய்' என்ற போர் நடவடிக்கையில், தற்காலிக மேஜராக பதவி உயர்வு பெற்று, 30 பேர் கொண்ட ராணுவக் குழுவிற்கு தலைமை தாங்கினேன். போரின் போது, நாங்கள் சற்றும் எதிர்பாராத நேரத்தில், பாகிஸ்தான் பகுதியில் இருந்து குண்டுகளை சரமாரியாக ஏவினர். ஒரு குண்டு என் தலையை உரசிச் சென்றது; அடுத்த குண்டு என்னருகே வெடித்துச் சிதறியது. அதன் சிதறல்கள் என் உடலைக் கிழித்துப் புகுந்தன. உயிருக்கு ஆபத்தான நிலையில், புனே மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனாலும், 40 இரும்புத் துகள்களை அகற்ற முடியவில்லை. அவை இன்றளவும் வலியை ஏற்படுத்துகிறது. சிதைந்து போன ஒரு காலை மூட்டுக்குக் கீழே வெட்டி அகற்றிவிட்டு, செயற்கைக் கால் பொருத்தப்பட்டது. செயற்கைக் காலால் ஏற்படும் வலியை விட, ராணுவப் பணியில் இருந்து ஓய்வு பெறும் நிலை ஏற்பட்டது தான் என் மனதை மிகவும் பாதித்தது. எனக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகம் இருந்ததால், நடப்பதற்காக பொருத்தப்பட்ட செயற்கைக் காலுடன் மூன்று முறை, மாரத்தானில் பங்கேற்றேன். செயற்கைக் காலுடன் ஓடுவது சிரமம் என்றாலும், என் தன்னம்பிக்கை அதை மறக்கச் செய்கிறது. கடந்த 2005ல் கார்கில் முதல், கன்னியாகுமரி வரை நடந்த மோட்டார் ஸ்போர்ட்ஸ் ரேலியில் பங்கேற்றேன். தற்போது, டில்லியில் தனியார் வங்கியில் பணியாற்றியவாரே, மும்பையில் நடத்தப்படும் மாரத்தான்களில் பங்கேற்று வருகிறேன். பங்கி ஜம்பிங், பாராசூட் யெய்லிங் போன்றவற்றிலும் எதிர்காலத்தில் ஈடுபட ஆசை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக