சொல்கிறார்கள்
திருவள்ளுவரை வரைந்து, அதில், 1,330 குறளையும் எழுதி சாதனை நிகழ்த்தியுள்ள சிவசங்கரி: "பரிசுக்காக போட்டிகளில் பங்கேற்காதே; திறமையை வெளிக்காட்ட கிடைத்த வாய்ப்பாக அதை எடுத்துக் கொள்' என்ற, என் அப்பாவின் வார்த்தைகளை ஏற்று, என் ஓவிய ஈடுபாட்டை, வித்தியாசமான முயற்சியில் திருப்பலாம் என்று யோசித்த போது தான், இந்த ஐடியா வந்தது...இந்த ஓவியம், குறள் அனைத்தையும் எழுதி முடிக்க, 22 மணி நேரம், 16 நிமிடம், 30 வினாடி ஆனது. திருவள்ளுவரின் கண், புருவம், காது, மூக்கு, உதடு, மீசை, தாடி, கொண்டை, தோள், அவர் நிற்கும் பீடம்னு, ஒரு இடம் விடாமல் குறள்களை எழுதினேன்.என் இடைவிடாத முயற்சியைப் பார்த்து, கல்லூரித் தோழிகள், உறவினர்கள் அனைவரும் பாராட்டினர். கடந்த மாதம் புதுச்சேரியில் நடந்த, "உலக சாதனையாளர்' விருது வழங்கும் விழாவில், என் திருவள்ளுவர் திருக்குறள் ஓவியத்தைப் பாராட்டி, விருதும் அளித்தனர்.ஓவியம் மட்டுமல்ல, பேச்சுப் போட்டி, கட்டுரை எழுதுவது, ஆய்வறிக்கை சமர்ப்பிப்பது, பொது அறிவு, ஆல்பம் தயாரிப்பது, குண்டு எறிதல், ஈட்டி எறிதல், செஸ், கேரம், கோ - கோ என, அனைத்திலும் ஒரு ரவுண்ட் வருவேன். எங்க கல்லூரியில் அனைத்து நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கும் பொறுப்பு எனக்குத் தான்.அகில இந்திய தமிழ்ப் பேச்சாளர்கள் கூட்டமைப்பின், கோவில்பட்டி கிளையின் ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறேன். மக்கள் முதல்வன் விருது, சிறந்த கலைஞர் விருது, டிரஸ்ட் அவார்டு, அபூர்வா விருது என, பல விருதுகள் பெற்றுள்ளேன். இவையனைத்தும் என் திறமைக்குக் கிடைத்த அங்கீகாரம்.கல்லூரி நேரம் போக மற்ற நேரங்களில், பகுதி நேர பியூட்டிஷியனாக வேலை செய்கிறேன். எப்பவும் பிசியாக இருப்பது தான், எனக்கு மிகவும் பிடிக்கும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக