வியாழன், 12 ஜனவரி, 2012

Rate bite in ICU



ஜோத்பூர்: ஜோத்பூரில், அரசு மருத்துவமனையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த முதியவரின் காது, மூக்கு, உதடு, தாடைகளை எலிகள் கடித்தன. பக்கவாத நோய் காரணமான ஏற்கனவே தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த அவர், தற்போது மேலும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் நகரைச் சேர்ந்த 70 வயது முதியவருக்கு, கடந்த திங்களன்று பக்கவாத நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், அவரை அங்குள்ள மதுர தாஸ் மாத்தூர் அரசு மருத்துவமனையில், உறவினர்கள் சேர்ந்தனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரால், அசையக்கூட முடியவில்லை. வென்டிலேட்டர் கருவி மூலம், அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் காலை முதியவரைப் பார்க்க வந்த அவரது உறவினர்கள், அவரின் மூக்கு, காது, உதடு, தாடைகள் பிய்ந்து ஆபத்தான நிலையில் இருப்பதைக் கண்டு பதறிப் போயினர். இதுகுறித்து அவர்கள், மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் தெரிவித்துள்ளனர்.

உலா வரும் எலிகள்: இதுபற்றி, பெயர் குறிப்பிட விரும்பாத டாக்டர் ஒருவர் கூறுகையில், "மருத்துவமனையில், தீவிர சிகிச்சைப் பிரிவில், கடந்த திங்களன்று இரவு பணியில் இருந்த நர்சும், டாக்டர்களும், இரவு 11 மணிக்கு முன்பாகவே தூங்கச் சென்று விட்டனர். இந்நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவின் சுவரில் இருந்த ஒரு ஓட்டை வழியாக உள்ளே வந்த எலிகள், முதியவரின் மேல் ஏறி, அவரது காதுகள், மூக்கு, உதடுகள், தாடைகளை சிறிது சிறிதாக கடித்துள்ளன. மூச்சு விடுவதற்கு இணைக்கப்பட்டிருந்த குழாய்களையும், எலிகள் துண்டு துண்டாக்கி விட்டன. சுவரில் உள்ள ஓட்டை வழியாக எலிகள் உள்ளே வருவதையும், வெளியே செல்வதையும் மருத்துவமனை நிர்வாகத்தினர் முன்னரே பார்த்துள்ளனர். இருந்தும், எலிகள் வருவதைத் தடுக்க அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உயிரை பாதுகாக்க, நோயாளி மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். ஆனால், அங்கும் அவருக்கு பாதுகாப்பில்லை என்றால் என்ன செய்வது' என்றார்.

விசாரணைக்கு உத்தரவு: மருத்துவமனை கண்காணிப்பாளர் அர்விந்த் மாத்தூர் கூறுகையில்,"சம்பவம் குறித்து விசாரணை செய்வதற்காக, மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழு விசாரணையை முடித்து, தன் அறிக்கையை இன்று மாலையோ அல்லது நாளை காலையோ அளிக்கும். அதன் பின்னரே, முதியவரை எலி தான் கடித்ததா என தெரியவரும். பின்னர், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார். ஜோத்பூர் அரசு மருத்துவமனையில், இவ்வாறு எலி கடிப்பது ஒன்றும் புதிதல்ல. இங்குள்ள உம்மட் மருத்துவமனையிலும், 2009ம் ஆண்டில் பிறந்த குழந்தை ஒன்றை எலிகள் கடித்ததால், அந்தக் குழந்தை இறந்தது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக