சனி, 7 ஜனவரி, 2012

Statute for Namakkal Kavignar: உலகம் புகழ்ந்தாலும் ஊருக்குள் சிலை இல்லையே: நாமக்கல் கவிஞரின் மகள் பேட்டி

உலகம் புகழ்ந்தாலும் ஊருக்குள் சிலை இல்லையே: நாமக்கல் கவிஞரின் மகள் பேட்டி

First Published : 07 Jan 2012 02:45:18 AM IST


நாமக்கல், ஜன. 6: தமிழ் உணர்வையும் தேசிய உணர்வையும் தமிழர்களுக்கு ஊட்டி வளர்த்த நாமக்கல் கவிஞருக்கு நாமக்கல் நகரில் திருவுருவச் சிலை அமைக்கப்பட வேண்டும் என கவிஞரின் மகள் சரஸ்வதி ரங்கநாதன் விருப்பம் தெரிவித்துள்ளார்.  "கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது' என்று பாடி இளைஞர்கள் மத்தியில் காந்திய அஹிம்சை கொள்கைகளைப் பரப்பிய பெருமை நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளையையே சாரும். பாமர மக்களுக்கு எளிதில் பொருள்படும் வகையில் இலக்கிய நயத்துடன் எளிமையான பாடல்களை இயற்றியவர் நாமக்கல் கவிஞர்.  தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா என்று தமிழர்களின் வீரத்துக்கு வித்திட்டு, தேசியத்தையும் தமிழ் உணர்வையும் ஒரு சேர வளர்த்தார். அவரது தமிழ்த் தொண்டை போற்றும் வகையில் நாமக்கல் நகரில் அவர் வாழ்ந்த வீடு கிராம நூலகமாக மாற்றப்பட்டுள்ளது. அந்த நூலகத்தைக் கிளை நூலகமாக தரம் உயர்த்த நாமக்கல் மாவட்ட நூலகத் துறை முடிவு செய்தது. கிளை நூலகத்துக்கான உறுப்பினர் சேர்க்கையைத் தொடங்கி வைப்பதற்காக வந்த நாமக்கல் கவிஞரின் மகள் சரஸ்வதி ரங்கநாதனை சந்தித்தோம்.  அமெரிக்க உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நிறுவனத்தில், அந் நாட்டவர்களுக்கு தமிழ் கற்றுக் கொடுக்கும் பணியை மேற்கொண்டுவிட்டு, சமீபத்தில் அவர் ஓய்வு பெற்றுள்ளார். அவரது கணவர் சி.பி.ரங்கநாதன் உலக வங்கியில் பொறியாளராகப் பணியாற்றியவர். கவிஞரும், தனது தந்தையுமான நாமக்கல் கவிஞர் குறித்து சரஸ்வதி ரங்கநாதனின் மலரும் நினைவுகள்....  ""நாமக்கல் கவிஞரின் 5 குழந்தைகளில் நான்காவதாக நான் பிறந்தேன். சிறுவயதில் இருந்தே எங்களுக்கு அவர் ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுத்தார். காந்திய கொள்கையில் ஆழ்ந்த பற்று கொண்ட அவர், நாள்தோறும் ராட்டையால் நூல் நூற்பார்.  அவருடன் எங்கள் தாயார் சவுந்திரம்மாளும் நூல் நூற்கும் பணியை மேற்கொள்வார். அவர்கள் தயாரிக்கும் நூலைக் கொண்டு உற்பத்தியாகும் கதர் ஆடைகளைத்தான் நான் அணிந்து கொள்வேன். கதர் ஆடையின் சிறப்பு குறித்து நாமக்கல் கவிஞர் பாடிய பாடல்களை பாடியவாறே தாயார் கதர் துணிகளை விற்பனை செய்தது இன்னும் என்னுடைய நினைவில் இருக்கிறது.  அவருக்கு அபாரமான ஓவியம் வரையும் திறமை இருந்தது. அவர் வரைந்த அனைத்து ஓவியங்களும் காலத்தால் அழியாதவை. காரைக்குடி பகுதியில் அவர் வரைந்த ஓவியங்கள் இன்றளவும் பொக்கிஷமாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.  அந்தக் காலத்தில் நடத்தப்படும் தெருக் கூத்துகளை ஆர்வத்துடன் பார்ப்பார். அந்தக் கூத்துகளில் வரும் பாடல்களைப் போல மக்கள் நன்கு புரிந்து கொள்ளும் வகையில் கவி பாடினார்.  கவியும், வறுமையும் உடன் பிறந்தது என்றாலும், கஷ்டமென வந்தோருக்கு அவர் தன்னாலான உதவியைச் செய்து மகிழ்ந்தார். எங்களது வீட்டின் முன் இருந்த திண்ணையில் நாள்தோறும் ஏராளமானோர் படுத்து உறங்க இடமளித்தார். நாமக்கல்லில் தண்ணீருக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டபோது, தனது வீட்டுக்கு வழங்கப்பட்ட குடிநீரை மக்களுக்காக அளித்து உதவினார்.  தனது வாழ்நாளின் பெரும் பகுதியை தமிழின் மேன்மைக்காகவும், நாட்டின் விடுதலைக்காகவும் அர்ப்பணித்து பாடுபட்ட கவிஞர் நினைவாக, நாமக்கல் அரசு மகளிர் கல்லூரிக்கு அவரது பெயர் சூட்டப்பட்டது. அவரது இல்லம் நூலகமாக மாற்றப்பட்டுள்ளது. அந்த இல்லத்துக்குப் பின்புறமாக நிறைய இடமுள்ளது. அந்த இடத்தில் மாவட்ட நிர்வாகமும் நகராட்சியும் இணைந்து சமுதாயக் கூடத்தை அமைத்து, அங்கு தமிழ் வளர்ச்சிக்கான நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என்பதே என் விருப்பம்.  நாமக்கல் கவிஞரை நாடே போற்றிப் புகழ்ந்தாலும், அவரது திருவுருவச் சிலை நாமக்கல் நகரில் அமைக்கப்படவில்லை என்கிற மன வருத்தம் நீண்ட நாளாகவே எனக்கு இருக்கிறது.  எனவே, நாமக்கல்லின் பெருமையை உலகறியச் செய்த கவிஞரின் சேவைக்குப் பெருமை சேர்க்கும் வகையில், அவரது திருவுருவச் சிலை நகரில் அமைக்கப்பட வேண்டும். அதே போல், அவரது தன்னலமற்ற வாழ்க்கை குறித்து தகவல்களை மாணவ சமூகத்திடம் கொண்டு சேர்க்கும் பணியை தமிழ் ஆர்வலர்கள் மேற்கொள்ள வேண்டும்.'

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக