"ஓய்வாக இருக்க மனமில்லை!'
தன் 56 வயதிலும், மரமேறுவது முதல், கொத்தனார் வேலை வரை செய்யும் மேரியம்மா: என் சொந்த ஊர் நாசரேத் அருகிலுள்ள தோப்பூர். எனக்கு, 17 வயதில் திருமணம் முடிந்தது. கணவனுக்கு கூலி வேலை. அதைவிட குடி தான் முக்கிய வேலை. ஒரு மகன் பிறந்த நிலையில், என்னை விட்டுட்டு ஓடிப் போயிட்டார். உறவினர்கள் இருந்தாலும், உழைத்துச் சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தால், குழந்தையுடன் தூத்துக்குடி மாவட்டம், ஒய்யான்குடி கிராமத்திற்கு பிழைப்பு தேடி வந்தேன். மரம் ஏறி, தேங்காய் பறித்துப் போட்டால், ஒரு மரத்திற்கு ஐந்து ரூபாய் கொடுப்பதை அறிந்து, மரம் ஏற முயன்ற போது, கீழே விழுந்து அடிபட்டது. ஆனால், விடாமுயற்சியால் மரம் ஏற கற்றுக் கொண்டேன். அதன் பின், பனை மரத்தில், நுங்கு, ஓலை வெட்டுவது, வேப்பமரம், புளியமரத்தில் விறகு வெட்டுவது என, ஒவ்வொன்றாக கற்றுக் கொண்டேன். கிணற்றில் தூர் வாருவேன், கூரை வேய்வேன், ஆட்டோ ஓட்டுவேன். இப்படி, ஆண்கள் செய்யும் வேலைகள் அனைத்தையும் அசராமல் கற்றுக் கொண்டேன். பொருளாதாரத்தில் கொஞ்சம் நிமிர்ந்ததும், இடம் வாங்கி வீட்டைக் கட்டினேன். அப்போது, கட்டட வேலைகளும் அத்துபடியாகிவிட்டது. தனி ஆளாக வந்து, என் வளர்ச்சியை கண்ட அனைவரும், இன்று வாயடைத்துப் போயுள்ளனர். என்னை போலவே சிரமப்படும் பெண்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக, "பெண் தொழிலாளர் நலச் சங்கம்' ஆரம்பித்தேன். நான்கு பெண்களுடன் துவங்கிய சங்கத்தில், இன்று, 40 பெண்கள் உள்ளனர். இப்போது எனக்கு, 56 வயதாகிறது. ஓய்வாக உட்கார மனமில்லை; இன்னும் உழைக்கிறேன். பெண்களால், ஆண்களுக்கு சமமாக மட்டுமல்ல, அதற்கு மேலேயும் உழைக்க முடியும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக