சொல்கிறார்கள்
மாற்றுத் திறனாளிகளுக்கான ஆசியப் போட்டிகளில், வீல்சேர் வாள் சண்டையில், வெண்கலப் பதக்கம் வென்ற நூர்தீன்: போலியோவால், சின்ன வயசுலேயே இரண்டு காலும் ஊனமாகிவிட்டது. இந்த உடம்பைக் கொண்டு என்ன செய்வதென்று புரியாமல், தடுமாறிக் கொண்டிருந்த எனக்கு, நண்பனின் ஜிம் தான் சாதனைக்கான அஸ்திவாரத்தை அமைத்துக் கொடுத்தது. முதல் முறை அங்கு சென்ற போது, பாடி பில்டர் ஒருவர், "தம்பி நீங்க இந்தப் பக்கம் வரக்கூடாது, கிளம்புங்க' என, கிண்டல் செய்தார். எனக்கு அப்ப வந்த கோபத்திற்கு அளவே இல்லை. 10 கிலோ எடையைக் கூட தூக்க முடியாத நான், ஆறு மாதம் ஜிம்மே கதியாக இருந்தேன். இப்போது, 100 கிலோவைக் கூட, சர்வசாதாரணமாகத் தூக்குவேன். பளு தூக்குப் போட்டிகளில் பங்கேற்க ஆரம்பித்து, மாற்றுத் திறனாளிகளுக்கான, "மிஸ்டர் தமிழகம்' பட்டத்தையும் வென்றுள்ளேன். இப்போது, பொதுப்பிரிவு ஆட்களுடனும், போட்டி போட்டு பதக்கம் வென்றுள்ளேன். நண்பர்களின் ஆலோசனைப்படி, வாள் சண்டைப் பயிற்சி பெற்று, ஆசியப் போட்டி வாள் சண்டைப் பிரிவில் பதக்கம் வென்றேன். ஆசியப் போட்டியில், வெண்கலம் வென்றதற்காக, தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், எனக்கு முறைப்படி தர வேண்டிய, 10 லட்ச ரூபாயை ஒரு வருடமாகியும், இன்னும் தரவில்லை. மற்ற பொதுப் போட்டியாளர்கள் அனைவருக்கும், ஒட்டுமொத்தத் தொகையையும் கொடுத்துவிட்டு, ஒரு மாற்றுத் திறனாளியின் பணத்தை அபகரிக்க முயற்சி செய்வது எந்த வகையில் நியாயம்? கனடா, இத்தாலி, ஹங்கேரி என, வெளிநாடுகளில் நடந்த போட்டிகளுக்குப் போக முடியாமல் போனதற்கு இது தான் காரணம். அரசு தரும் அந்தப் பணத்தை வைத்து தான், லண்டனில் நடக்கப் போகும் பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்க வேண்டும். இப்ப என் வாழ்க்கை அரசின் கையில் தான் உள்ளது!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக