"என்னை நம்புகின்றனர்!'
நரிக்குறவ மாணவர்களின் படிப்பிற்காக உதவும், ஆசிரியர் உதயக்குமார்: மற்றவர்களைப் போல், என்னால் சம்பளத்திற்கு வேலை செய்துவிட்டு போவதில் திருப்தி இல்லை. எளியவர்களுக்கு நம்மால் ஆன, உதவிகளைச் செய்ய வேண்டும் என நினைத்தேன். நான் திருவாடனை அருகே, பண்ணை வயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், தலைமை ஆசிரியராக இருந்த போது தான், முதன் முறையாக, நரிக்குறவ சமூகத்தைச் சேர்ந்த ஒரு குழந்தையை, பள்ளியில் சேர்த்தேன். அதற்கு நான் சந்தித்த இடர்பாடுகள் கொஞ்ச நஞ்சமல்ல. ஆனால், இப்போது, சர்வசிக்ஷா அபியான் திட்டப்படி, 50 நரிக்குறவர் பிள்ளைகள் படிக்கின்றனர். காலாண்டு, அரையாண்டு, கோடை விடுமுறையில், பெற்றோருடன் சேர்ந்து குழந்தைகளும், தேர்த் திருவிழாவிற்கு ஊசி, பாசி விற்கப் போகின்றனர். ஆனால், மீண்டும் பள்ளிக்கு வருவதில்லை. அவர்களையெல்லாம், வேன் மூலம் பள்ளிக்கு கொண்டு வருகிறேன். மறு நாளிலிருந்து சீராக பள்ளிக்கு வருகின்றனர். நரிக்குறவ மாணவர்கள் அனைவரும் நல்ல புத்திசாலிகள். நரிக்குறவர்கள் சாலையோரங்களில் வசிக்கின்றனர். சுகாதாரமான குடிநீர் வசதி உட்பட எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. ஆனால், இவர்கள் அனைவருக்கும் ஓட்டுரிமை உள்ளது. அரசு, இவர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும். என் ஆசை, கனவு அனைத்துமே இவர்களில் ஒருவரையாவது, பிளஸ் 2 வரை படிக்க வைக்க வேண்டும் என்பது தான். என்னை இந்தக் குழந்தைகள் நம்புகின்றனர். அவர்களுக்கு ஒரு வழி காட்டிவிட்டால் போதும், முன்னேறி விடுவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக