சொல்கிறார்கள்
"காவல் கோட்டம்' நாவலுக்காக, சாகித்ய அகடமி விருது பெற்ற எழுத்தாளர் வெங்கடேசன்: என் சொந்த ஊர் மதுரை அருகேயுள்ள ஹார்விப்பட்டி. கல்லூரி படிப்பை முடிச்சதும், மா.கம்யூ., கட்சியில முழு நேர ஊழியனாயிட்டேன். உலகின் பழமையான நகரங்களில் ஒன்று மதுரை; 2,500 ஆண்டுகள் பழமையான நகரம். இன்னமும் உயிர்ப்போடு இயங்குகிறது. நகரின் ஒவ்வொரு தெருவிலும், 2,500 ஆண்டுகள் பழமை அப்பி கிடக்கின்றன. வரலாற்றின் வசீகரங்கள் நிறைந்த நிலப்பரப்பு என்று மதுரையைச் சொல்லலாம். 600 ஆண்டு கால மதுரையின் வாழ்க்கையை எழுத எழுத, பல ரகசியங்களைத் தன்னுள் ஒளித்திருக்கும் மாயக் கம்பளம் போல, வரலாறு என் முன் விரிந்தது. அதை படைப்பாக மாற்றியபோது உருவானது தான், "காவல் கோட்டம்' நாவல். என் வாழ்நாளிலேயே அதிகபட்சம், காவல் கோட்டம் போல மூன்று நாவல்கள் தான் எழுத முடியும். காவல் கோட்டத்தை எழுதி முடிக்க, எனக்கு பத்து ஆண்டுகள் பிடித்தன. அப்படிப் பார்த்தால், சுந்தரராமசாமி தன் வாழ்நாளிலேயே மூன்றே மூன்று நாவல்கள் தான் எழுதி இருந்தார். நாவலுக்கு உள்ளிருந்து தான் விமர்சனம் வைக்கப்பட வேண்டுமே தவிர, ஒருவர் எத்தனை நாவல் எழுதி இருக்கிறார் என்பதை விமர்சிக்கக் கூடாது. ரசனை மிகுந்த வாசகர்களின் தீர்ப்பு தான் இறுதியானது. இந்த நாவலில் முல்லைப் பெரியாறு பற்றியும் குறிப்பிட்டுள்ளேன். வரலாற்று உணர்வுடன் அணுகும்போது, முல்லைப் பெரியாறு அணை உருவான காரணத்தையும், அதற்குப் பின்னணியில் இருந்த துயரங்களையும் புரிந்து கொள்ள முடியும். தன் மக்களை மீண்டும் சாகக் கொடுக்காமல், ஓடும் நதியை மறித்து மதுரைக்குத் திருப்பிவிடும் நல்லதங்காளின் பேருரு தான் முல்லைப் பெரியாறு அணை. வீட்டையும், குடும்பத்தையும் சுற்றிச் சுற்றி வந்த தமிழ் நாவல்கள், அதைத் தாண்டி வரலாற்றைப் பதிவு செய்பவையாகவும், தத்துவ விவாதங்களின் களனாகவும் மாறியுள்ளன. ஆனால், இன்னொரு பக்கம் நாம் கொண்டாடும் அளவுக்கு தமிழ் வாசிப்பு வளர்ந்திருக்கிறதா என்பதும் ஆராயப்பட வேண்டிய விஷயம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக